ஓட்டல் ஸ்டைல் கிரேவி, முறுகலான தோசை, திடீர் சட்னி என எண்ணற்ற சமையலறை குறிப்புகள் இதோ!
Nov 09, 2024, 11:04 AM IST
ஓட்டல் ஸ்டைல் கிரேவி, முறுகலான தோசை, திடீர் சட்னி என எண்ணற்ற சமையலறை குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி எளிமையாக சமைத்து பயன்பெறுங்கள்.
சமையலறை ஒரு சிலருக்கு மிகவும் பிடித்த இடம், ஒரு சிலருக்கு என்ன சமைப்பது? எப்படி சுத்தம் செய்வது என குழப்பத்தில் மூழ்கும் இடம். எனவே அனைவருக்கும் சமையலறை பிடிக்கவேண்டும் என்றால் அது சுத்தமானதாக இருக்கவேண்டும். சில விஷயங்களை நாம் அங்கு எளிதில் செய்ய முடியவேண்டும். அப்போதுதான் சமையல் செய்யவும் பிடிக்கும். சமையலும் சுவைக்கும். எனவே இங்கு சில சமையலறை குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றினால் உங்கள் சமையல் மற்றும் சமையலறை இரண்டுமே நன்றாக இருக்கும். எனவே இந்த எளிய குறிப்புக்களைப் பின்பற்றி சமையலை எளிமையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் வைத்துக்கொள்ளுங்கள். இந்த குறிப்புகள் உங்கள் சமையலின் சுவை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
சமையலறை வேலைகளில் மிகவும் முக்கியமான ஒன்று இட்லிக்கு மாவு அரைப்பதுதான். இட்லி மாவு அரைத்து வைத்துவிட்டால் போதும் சில நாட்கள் நிம்மதியாக இருக்கலாம். எனவே இட்லி தோசை மாவு அரைக்க சில குறிப்புகள் மிகவும் தேவை. சரியான பக்குவத்தில் மாவு அரைத்து வைத்துவிட்டால் அது உங்களுக்கு பெரும் நிம்மதியைத்தரும். பெரும்பாலும் நாம் அனைவரும் இட்லி மற்றும் தோசை இரண்டுக்கும் தனித்தனியாகத்தான் மாவு அரைப்போம். ஆனால் ஒரே மாவில் பஞ்சு இட்லி மற்றும் முறுகல் தோசை இரண்டையுமே செய்ய முடியும். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இட்லி, தோசை இரண்டும் செய்வதற்கு மாவு அரைக்க தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி – 4 கப்
உளுந்து – முக்கால் கப்
ஜவ்வரிசி – கால் கப்
வெந்தயம் – 2 ஸ்பூன்
செய்முறை
இவற்றை ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி ஃபிரிட்ஜில் வைக்கவேண்டும். அடுத்த நாள் எடுத்து கிரைண்டரில் சேர்த்து ஒன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும். வழக்கம்போல் புளிக்கவைத்துக்கொண்டு, பஞ்சு இட்லியும், முருகல் தோசையும் இந்த மாவிலே செய்து அசத்தலாம்.
திடீர் சட்னி செய்வது எப்படி?
திடீர் சட்னியை பட்டுடென்று 10 நிமிடத்தில் அரைத்து முடித்துவிட முடியும். வீட்டில் உள்ள காய்கறிகளையெல்லாம் கொஞ்சம், கொஞ்சம் எடுத்து வதக்கி, அதனுடன், வர மிளகாய், பச்சை மிளகாய், சிறிது புளி மற்றும் உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால் நிமிடத்தில் சுவையான சட்னி தயார். இதை இட்லி, தோசைக்கு தொட்டுககொண்டு சாப்பிடலாம்.
மொறு மொறு தோசை ரெசிபி
அரிசி, உளுந்து ஊறவைக்கும்போதே அத்துடன் ஒரே ஒரு ஸ்பூன் ஜவ்வரிசியை சேர்த்து ஊறவைத்து அரைத்தால், மொறுமொறு தோசை செய்யலாம். ஓட்டல் ஸ்டைல் தோசையை வீட்டிலே செய்து அசத்த முடியும்.
ஓட்டலில் செய்யும் கிரேவிபோல் வீட்டிலேயும் கிரேவி செய்ய முடியும். அதற்கு, பாலில் சிறிது நேரம் முந்திரியை ஊறவைத்து, அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து, கிரவியை இறக்கும் முன் சேர்த்து ஒரு கொதிவிட்டு எடுத்தால் சூப்பர் சுவையில் அசத்தும். இதை சப்பாத்தி, பூரி, ரொட்டி, ஃபுல்காவுக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
பச்சை மிளகாய்
பச்சை மிளகாய்களை மிக்ஸியில் அரைக்கும் போது துண்டுகளாக்கிப் போட்டாலும் நன்றாக அரைபடாமல் போய்விடுகிறதா? அதற்கு அதை நீளவாக்கில் இரண்டாக வெட்டி அரைத்தால் நன்றாக மசிந்து வரும். மிக நீண்ட மிளகாய் என்றால், அதை இரண்டாக வெட்டி, மேலும் குறுக்கில் வெட்டிக்கொள்ளவேண்டும்.
குங்குமப்பூ
வீட்டில் பாயாசம் உள்ளிட்ட பல்வேறு இனிப்பு வகைகளுடன் குங்குமப்பூ சேர்க்கப்படும். அதை பால் அல்லது தண்ணீரில் கரைத்து பின்னர் இனிப்பில் சேர்க்கவேண்டும். அப்படி சேர்க்கும்போது அது சில நேரங்களில் கரையாது.
அதற்கு, கடாயை சூடாக்கி அடுப்பை அணைத்துவிட்டு, அதில் குங்குமப்பூவை சேர்த்து சில நொடிகள் புரட்டினால் அது வறுபட்டுவிடும். இதை கையால் நொறுக்கி பொடியாக்கிக்கொண்டால் தேவைப்படும்போது எடுத்து நேரடியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பொட்டுக்கடலை உருண்டை
நெய் சேர்க்காமல் பொட்டுக் கடலை உருண்டை செய்ய விரும்புகிறவர்கள் மூன்று கப் பொட்டுக் கடலை, ஒரு கப் சர்க்கரை, 4 உரித்த ஏலக்காய் இவற்றை மிக்ஸியில் சேர்த்து நல்ல பொடியாக்கிக்கொள்ளவேண்டும்.
தேவையான போது இந்த மாவில் கொஞ்சம் எடுத்து இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் பால் தெளித்து உருண்டை பிடித்துக் கொடுத்தால் வீட்டிலுள்ள குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார். இதை பொட்டுக்கடலை உருண்டை ரெடி மிக்ஸாகப் பயன்படுத்தலாம்.
டாபிக்ஸ்