நெல்லிக்காய்- மிளகு- திப்பிலி ரசம்; மழையால் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சலை ஓடஓட விரட்டும்!
Nov 08, 2024, 02:09 PM IST
நெல்லிக்காய்- மிளகு- திப்பிலி ரசம் மூன்றையும் சேர்த்து ஒரு ரசம் வைத்து சாப்பிட்டால் உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, மழையால் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சலை ஓடஓட விரட்டும்.
மழைக் காலத்தில் சளி இருமலை விரட்டியடிக்கும் நெல்லிக்காய் – மிளகு- திப்பிலி ரசம் செய்வது எப்படி என்று பாருங்கள். மழையால் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சலை விரட்ட அசைவப் பிரியர்களுக்கு நண்டு ரசம் எப்படி உதவுமோ, அதேபோல், சைவப் பிரியர்களுக்கு நெல்லிக்காய் ரசம் மிகவும் நல்லது. இதை செய்வதும் எளிது. இதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதும். நீங்கள் கூடுதலாக நெல்லிக்காய் மற்றும் திப்பிலி மட்டும் வாங்கிக்கொண்டால் போதும். இதை நீங்கள் சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சளி இருந்தால் அது அப்படியே முறிந்து வெளியேறுவதை கண்கூடாகப் பார்க்கலாம். நெல்லிக்காயில் செய்யும் ரசம் என்பதால் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எனவே உங்கள் உடலுக்கு இயற்கையாகவே எதிர்ப்புத்திறன் கிடைத்துவிடும்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பச்சை மிளகாய் – 1
திப்பிலி – 1
மிளகு – ஒரு ஸ்பூன்
பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
ரசப்பொடி – அரை ஸ்பூன்
துவரம் பருப்பு – கால் கப்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
நெய் – ஒரு ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மல்லித்தழை – சிறிதளவு
செய்முறை
கால் கப் துவரம் பருப்ப முக்கால் கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து மூன்று விசில் விட்டு எடுத்துக்கொள்ளவேண்டும். பருப்பு நன்றாக குலைந்து வரவேண்டும். அதை எடுத்து மசித்து வைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு சிறிய உரலில் விதை நீக்கிய நெல்லிக்காய்களை எடுத்து நசுக்கிக்கொள்ளவேண்டும். அடுத்து அதிலே மிளகு, திப்பிலி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், ரசப்பொடி சேர்த்து நன்றாக அதையும் நைத்து எடுததுக்கொள்ளவேண்டும். அனைத்தையும் நன்றாக நைத்துவிடவேண்டும்.
வேகவைத்த பருப்பில் இதை சேர்த்து தண்ணீர் மற்றும் மல்லித்தழை தூவி கொதிக்கவிடவேண்டும்.
ஒரு தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இந்த ரசத்தில் சேர்த்துவிட்டால், சூப்பர் சுவையான ரசம் தயார். இதை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட சுவை அள்ளும் அல்லது சூப் போலும் பருகலாம். அதனுடன் இந்த மழைக்காலத்துக்கு ஏற்றதும் கூட.
சளி, இருமல், காய்ச்சலை உங்கள் அருகில் அண்டவிடாமல் துரத்தும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்புவார்கள். நெல்லிக்காய் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளை நெல்லிக்காய் சாப்பிட வைக்கும் வழிகளுள் ஒன்று.
நெல்லிக்காயின் நன்மைகள்
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண் பார்வைத்திறன் மேம்பட உதவுகிறது. நெல்லிச்சாறை வழக்கமாக எடுத்துக்கொள்வது உங்கள் கண் ஆரோக்கியத்துக்கும், கண்ணில் நோய்கள் வராமலும் பாதுகாக்கிறது. இதில் உள்ள அடாப்டோஜெனிக் உட்பொருள், மனஅழுத்ததை குறைக்க உதவுகிறது. மனத்தெளிவை அதிகரிக்கிறது. உடல் மற்றும் உணர்வு ரீதியிலான அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. நெல்லிக்காய் உங்கள் தலைமுடி ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. தலைமுடியை வலுவாக்குகிறது. தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது. உங்கள் தலைமுடியின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்துகிறது. உடலில் கொலொஜென் உற்பத்தியை அதிகரித்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் சருமத்தை யூவி கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது. ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை கொடுக்கிறது.
உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்க விரும்பினால், அதற்கு நெல்லிக்காய் சாறு சிறந்த தேர்வு. காலையில் இதை பருகுவது உங்கள் உடலுக்கு நன்மையளிக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, உங்கள் சருமத்தை பொலிவாக்குகிறது.
உடலில் சத்தை அதிகரிக்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. நெல்லிக்காய், உடலில் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய நோய்கள் வரும் ஆபத்தை குறைக்கிறது.
இதில் அதிகம் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் பாலிஃபினால்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களுக்குத்தான் நன்றியுரைக்க வேண்டும். சர்க்கரை நோயாளிக்கு வரப்பிரசாதமாக இந்த நெல்லிக்காய் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
நெல்லிக்காயில் வைட்டமின்களும், மினரல்களும் அதிகம் உள்ளதால், வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச்சாறு பருகுவதால், உடல் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. அது உடல் எடையை பராமரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
வாயுவை கட்டுப்படுத்தும் திரவங்களை சுரந்து நெல்லிக்காய், செரிமானத்துக்கு உதவுகிறது. உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. அது செரிமானம், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்றவற்றை தடுக்கிறது.
வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. காலையில் தினமும் நெல்லிக்காய் சாறு பருவதால், உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. அது தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
டாபிக்ஸ்