புளி சேர்க்காமலும் சுவையான ரசம் வைக்க முடியுமா? இதோ ரெசிபி! சாப்பிட்டு மகிழுங்கள்!
Nov 17, 2024, 02:20 PM IST
புளி சேர்க்காமலும் சுவையான ரசம் வைக்க முடியும். அது எப்படி என்று பாருங்கள்.
சூப் போன்றதொரு தென்னிந்திய உணவுதான் இந்த ரசம் என்பது. ரசத்தை பெரும்பாலும் சாதத்தில் ஊற்றி சாப்பிடுகிறார்கள். தென்னிந்திய மீல்ஸில் முக்கிய இடம் பிடித்துள்ளது இந்த ரசம்தான். சாதத்தில் முதலில் சாம்பார், அடுத்து ரசம், அடுத்து மோர் என்ற வரிசையில் சாப்பிடுகிறார்கள் விருந்துகளில் ரசத்துக்கு முன்னர் காரக்குழம்பு பரிமாறப்படும். சாதாரணமாக அன்றாடம் வீட்டில் முன்னர் கூறிய முறையில் தென்னிந்தியர்கள் தங்கள் மதிய உணவை சாப்பிட்டு வருகிறார்கள். ஆனால் ரசம் மட்டுமே கூட போகும் ஒரு முழு நிறைவான மதிய உணவுக்கும். ரசம் உணவு மட்டுமல்ல மருந்தாகவும் பார்க்கப்படுகிறது. இதில் சேர்க்கப்படும் பொருட்கள் மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தூள் என அனைத்துமே நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கக்கூடியவைதான். எனவே ரசத்தை சாப்பிடுவது மிகவும் நல்லதாகக் கருதப்படுகிறது. ரசம் தண்ணீராக இருக்கும் அல்லது இருக்கவேண்டும். அந்த தண்ணீரை அப்படியே சாதத்தில் ஊற்றி சாப்பிடவேண்டும். ரசத்திற்கென பிரத்யேக ரசப்பொடிகளும், ப்ரீ மிக்ஸிகளும் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழில் ரசம், கன்னடத்தில் திலிசாறு, தெலுங்கில் புளிச்சாறு என்று அழைக்கப்படுகிறது. இது சாறு அல்லது சூப் போன்ற ஒரு உணவுதான். இது புளிப்பு, காரம் கலந்த சுவையைக் கொண்டது. இதற்கு புளி, தக்காளி, கறிவேப்பிலை, மல்லித்தழை, மசாலாப்பொருட்கள் எல்லாம் பயன்படுத்தப்படுகிறது.
புளிதான் ரசத்திற்கு முக்கியமான பொருள். பருப்புப்பதண்ணீர், தேங்காய்ப்பால், மாங்காய்த் தூள் எல்லாம் சேர்த்து ஸ்பெஷல் சுவையில் ரசம் வைக்கப்படுகிறது. ஒரு நல்ல டேஸ்டியான ரசம் என்றால் சாப்பிட மாட்டீர்கள். எடுத்து குடிப்பீர்கள். ரசத்தில் பல வகை ரசம் உள்ளது. கிட்டத்தட்ட தாளிப்பையும் சேர்த்து எண்ணற்ற பொருட்களை ரசத்திற்கு உபயோகிக்கிறார்கள்.
புளிதான ரசத்தின் அடிநாதமே, ஆனால் புளி இல்லாமல் கூட ரசம் வைக்க முடியும். புளி இல்லாமல் ரசம் செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
தக்காளி பழம் – 2
கட்டிப்பெருங்காயம் – ஒரு சிறிய துண்டு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
நெய் – ஒரு ஸ்பூன்
துவரம் பருப்பு – 2 ஸ்பூன்
உளுந்து – 2 ஸ்பூன்
கடலை பருப்பு – 2 ஸ்பூன்
வரமல்லி – 2 ஸ்பூன்
மிளகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
வர மிளகாய் – 2
தேங்காய்த் துருவல் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
நெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
வர மிளகாய் – 2 (கிள்ளி சேர்க்கவேண்டும்)
செய்முறை
தக்காளி பழங்களை நறுக்கிக்கொள்ளவேண்டும். மஞ்சள்தூள், பெருங்காயம் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் தக்காளி பழங்களுடன் நன்றாக கொதிக்கவிடவேண்டும். தக்காளி வெந்தவுடன் அந்த தண்ணீரில் அப்படியே அவற்றை மசித்து வைத்துக்கொள்ளவேண்டும்.
மற்றொரு கடாயில் நெய் சேர்த்து துவரம் பருப்பு, உளுந்து, கடலை பருப்பு, வரமல்லி, மிளகு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும். கடைசியாக சீரகம், தேங்காய்த் துருவல், வரமிளகாய் சேர்த்து கலந்து இறக்கி, ஆறவைத்து இந்த கலவையை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
இந்த மசாலாவை வெந்துகொண்டிருக்கும் தக்காளி கலவையில் சேர்த்து, உப்பு மேலும் தண்ணீர் ஊற்றி நன்றாக நுரை கட்டி வரும்வரை கொதிக்கவிடவேண்டும். கொதி வந்தவுடன் மல்லித்தழையை சேர்க்கவேண்டும்.
தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து சூடானவுடன் கடுகு, உளுந்து, கிள்ளிய வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொரிய விட்டு எடுத்து ரசத்தில் சேர்த்தால், சூப்பர் சுவையான புளி இல்லாத ரசம் தயார். இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இந்த ரசத்துக்கு அப்பளம், ஊறுகாயே போதுமானது.
டாபிக்ஸ்