புசுபுசு பூரியை இனி கருப்பு உளுந்து வைத்து செய்ய முடியும்; அது எப்படி என்று பாருங்கள்!
Nov 17, 2024, 04:54 PM IST
கருப்பு உளுந்து பூரி செய்வது எப்படி என்று பாருங்கள்.
கருப்பு உளுந்தின் நன்மைகளை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். சர்க்கரை நோயாளிகள் கருப்பு உளுந்தை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு முறையாக பராமரிக்கப்படும். கருப்பு உளுந்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்துக்கு உதவுகிறது. கருப்பு உளுந்து சருமத்துக்கு நல்லது. கரும்புள்ளிகள், முகப்பரு மற்றும் கறைகளை எதிர்த்து போராட உதவும். இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. செரிமானத்துக்கு நல்லது. குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கலுக்கு நல்லது. வயிற்றுப்போக்கை எதிர்த்து போராட உதவுகிறது. உடல் உறுப்புக்களுக்கு ஆக்ஸிஜனேற்றப்பட்ட ரத்தத்தை வழங்குகிறது. உடலின் ஆற்றல் அதிகரிக்க உதவுகிறது. எலும்புகளை வலுவாக்குகிறது. மூட்டு வலி மற்றும் எலும்பு பிரச்னைகளை தடுக்கிறது. உடலில் இரும்புச்சத்தை அதிகப்பதால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் நல்லது. உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை மேம்படுத்துகிறது.
கருப்பு உளுந்தில் கூட பூரி செய்ய முடியும். இத்தனை ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கருப்பு உளுந்து இட்லி, தோசைக்கு மட்டுமல்ல, பூரி செய்யவும் உகந்தது.
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து – ஒரு கப்
(உடைத்த நல்ல கருப்பு உளுந்தை எடுத்து நன்றாக அலசி முதல் நாள் இரவே ஊறவைத்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் தோலும் ஊறி நன்றாக இருக்கும். வெள்ளை உளுந்திலும் செய்யலாம். கருப்பு உளுந்து என்றால் குறைந்தது 6 மணி நேரம் ஊறவேண்டும்)
பச்சை மிளகாய் – 3
சீரகம் – ஒரு ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
சோம்பு – ஒரு ஸ்பூன்
மல்லித்தூள் – அரை ஸ்பூன்
மிளகாயத் தூள் – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை
கோதுமை மாவு – 2 கப்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
ஊறவைத்த கருப்பு உளுந்தில் பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி-பூண்டு விழுது, சோம்பு, மல்லித்தூள், மிளகாய்த்தூள், உப்பு, பொருங்காயத்தூள் என அனைத்தும் சேர்த்து, மிக்ஸி ஜாரில் தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் அரைத்த மாவு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்துகொள்ளவேண்டும். அதை சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவேண்டும்.
கடாயில் தாராளமாக எண்ணெய் ஊற்றி அது சூடானவுடன், அதில் தேய்த்து வைத்த மாவை போட்டு இருபுறமும் வேகவிட்டு பூரிகளாக வார்த்து எடுத்துக்கொள்ளவேண்டும். சூப்பர் சுவையான உளுந்து பூரி தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள வழக்கமான உருளைக்கிழங்கு மசாலாவைவிட சிக்கன் அல்லது மட்டன் கிரேவிகள் நன்றாக இருக்கும். கட்டாயம் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த இந்த கருப்பு உளுந்து பூரியை செய்து சாப்பிட்டு பாருங்கள்.
இந்தப் பூரியை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை நீங்கள் ஒருமுறை ருசித்தால் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே கட்டாயம் செய்து சாப்பிட்டு ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளம் இடுங்கள்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்