ஆசை யார விட்டுச்சு.. கங்குவா கதாநாயகி வீட்டில் கைவரிசை காட்டிய கும்பல்.. மொத்தமும் கோவிந்தா தான்!
கங்குவா படத்தின் கதாநாயகி திஷா பதானி அப்பாவிடம் ஒரு கும்பல் 25 லட்சத்தை ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றி மோசடி செய்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாலிவுட் நடிகையான திஷா பதானி, நடிகர் சூர்யா- சிறுத்தை சிவா கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவான கங்குவா படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதன் மூலம் அவர், தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிட்சையமானார். கங்குவா படம் ரிலீஸ் ஆகி 3 நாட்களே ஆன நிலையில், அப்படத்தின் கதாநாயகி திஷா பதானி வீட்டில் நடந்த மோசடி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
திஷா பதானி வீட்டில் நடந்த மோசடி
பாலிவுட் கதாநாயகியான திஷா பதானியின் தந்தை ஜகதீஷ் சிங் பதானி ஒரு ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர். இவரிடம் தான் ஒரு கும்பல் ஆசை காட்டி மோசம் செய்துள்ளது. காவல் அதிகாரியான இவர் உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள சிவில் லைன் பகுதியில் வசித்து வருகிறார். இவர், துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த சமயத்தில் அரசியல் பின்புலம் உள்ளதாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சிலரிடம் பழக்கம் வைத்துள்ளார்.
பதவி ஆசையால் பறிபோன பணம்
இந்நிலையில் தான், சிவேந்திர பிரதாப் சிங், திவாகர் கர்க், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சேர்ந்து திஷா பதானியின் தந்தை ஜகதீஷிற்கு பதிவி ஆசை காட்டி உள்ளனர். அவர்கள், தங்களிடம் உள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி உத்தரப் பிரதேச அரசாங்க ஆணையத்தில் உயர் பதவி வாங்கித் தருகிறோம். அதற்கு கொஞ்சம் செலவு மட்டும் செய்தால் போதும் என ஆசையை வளர்த்துள்ளனர்.
ஜகதீஷ் சிங்கும் இவர்களது வார்த்தைகள் அனைத்தும் உண்மை என நம்பியுள்ளார். இதையடுத்து அவர் பணமாக 5 லட்ச ரூபாயும், வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் 20 லட்ச ரூபாயும் கொடுத்துள்ளார். ஆனால், பணம் வாங்கிய பின், இவருக்கு ஆசை காட்டிய கும்பல் இவரைத் தொடர்புகொள்ளவே இல்லை. வேலை குறித்து இவர்கள் மும்மரமாக எதாவது செய்து கொண்டிருப்பார்கள் என நினைத்திருந்தார்.
பணத்தை வாங்கிக் கொண்டு மிரட்டல்
பின் 3 மாத காலமாகியும் தன் வேலை குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்காததால், ஜகதீஷ் பதானி சுதாரித்துக் கொண்டுள்ளார். பின். தனக்கு வேலை வாங்கித் தருவதாக கூறியவர்களை கண்டுபிடித்து அவர்களிடம் பணத்தை திருப்பி அளிக்குமாறு எச்சரித்துள்ளார்.
ஆனால், பணம் வாங்கிய 3 பேரும் ஜகதீஷ் பதானியை மிரட்ட ஆரம்பித்துள்ளனர், இதன் பிறகே ஜகதீஷ் தன்னிடம் பணத்தை வாங்கி 3 பேரு் ஏமாற்றி வருவதாக பரேலி கோட்வாலி பகுதி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
போலீசுக்கே விபூதி அடித்த கும்பல்
இதையடுத்து போலீசார் இந்தப் புகார் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆசை வார்த்தை கூறி மக்கள் ஏமாற்றப்பட்டால் போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளிக்கலாம். ஆனால், சமூகத்தில் நடக்கும் அனைத்து விதமான திருட்டையும் அறிந்த போலீஸ்காரர்களே இது போன்று பதவி ஆசையில் பணத்தை இழந்து நின்றால் மக்களுக்கு யார் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சாதாரணமாக சினிமா நடிகைகள் வீட்டில் நடக்கும் விஷயங்களே வைரலாகும் நிலையில், தந்தை போலீசாக இருந்து ஏமாற்றப்பட்டதால் பலரும் இந்த விஷயத்தால் திஷா பதானியை கிண்டலடித்து வருகின்றனர்.
டாபிக்ஸ்