Andhra Mutton Biriyani : ஆந்திரா மட்டன் பிரியாணி; அள்ளி அள்ளி சாப்பிடத்தூண்டும் சுவையில் செய்வது எப்படி? இதோ ரெசிபி!
Sep 16, 2024, 01:55 PM IST
Andhra Mutton Biriyani : ஆந்திரா மட்டன் பிரியாணி, அள்ளி அள்ளி சாப்பிடத்தூண்டும் சுவையில் செய்வது எப்படி செய்வது என்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – ஒரு கப்
மட்டன் – கால் கிலோ
பெரிய வெங்காயம் – 1 (நீளவாக்கில் நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – ஒரு இன்ச்
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 10 பல்
புதினா இலை – கைப்பிடியளவு
முழு கரம் மசாலா
பட்டை – 1
கிராம்பு – 2
ஸ்டார் சோம்பு – 1
பிரியாணி இலை – 1
ஏலக்காய் – 1
மல்லித்தழை – சிறிதளவு
தேங்காய் பால் – 2 கப்
சின்ன வெங்காயம் – 10 (உறித்தது)
தயிர் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – சிறிதளவு
நெய் – சிறிதளவு
செய்முறை
பாஸ்மதி அரிசியை தண்ணீரில் கழுவி அரை மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவேண்டும். பெரிய வெங்காயம் மறறும் தக்காளியை நறுக்கிவைத்துக்கொள்ளவேண்டும்.
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், புதினா, மல்லித்தழை சிறிது என இவையனைத்தையும் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாக மிக்சியில் மசாலா பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, ஸ்டார் சோம்பு என அனைத்தும் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவேண்டும் அல்லது சிறிய உரலில் கூட தட்டி எடுத்துக்கொள்ளலாம்.
குக்கரில் மட்டனை சிறிதளவு தண்ணீர் ஊற்றி 6 விசில் விட்டு வேகவைத்துக்கொள்ளவேண்டும். அடிக்கணமான கடாயில் சிறிது எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானவுடன், அதில் பொடித்து வைத்துள்ள கரம் மசாலாப் பொடியை சேர்க்கவேண்டும்.
பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாகம் வரை வதக்கவேண்டும். பின்னர் நறுக்கிய அல்லது துருவிய அல்லது அரைத்த தக்காளி விழுதையும் சேர்த்து நன்றாக மசியும் வரை வேகவைத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் அரைத்த இஞ்சி, பூண்டு, புதினா, மல்லி, சின்னவெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் விழுதை சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும். பின்னர் தயிரை சேர்த்து வதக்கவேண்டும். அனைத்தும் நன்றாக ஒன்று சேர்ந்து எண்ணெய் பிரிந்து வந்தவுடன் அதில் தேங்காய்ப்பாலை சேர்க்கவேண்டும்.
பின்னர் இதில் வேக வைத்த மட்டன் மற்று உப்பு சேர்த்து கொதிக்கவிடவேண்டும். அனைத்தும் நன்றாக கொதித்து மட்டனுடன் மசாலக்கள் அனைத்தும் சேர்ந்து சுண்டி வரவேண்டும்.
மற்றொரு அடுப்பில் அரிசியை முக்கால் பதம் வேகவைத்து வடித்துக்கொள்ளவேண்டும். பின்னர் அதை இந்த மசாலாக்கலவையில் சேர்க்கவேண்டும். அரிசியும் மசாலாக்களும் சேர்ந்து வேக சிறிது நேரம் கொடுக்கவேண்டும். பின்னர் மூடி தம் போட்டுவிட்டு இறக்கினால் சூப்பர் சுவையில் ஆந்திரா மட்டன் பிரியாணி தயார்.
இறக்கியவுடன் சிறிது மல்லித்தழைகள் தூவி பரிமாற சூப்பர் சுவையில் அசத்தும். இதற்கு தொட்டுக்கொள்ள வெங்காய – தயிர் பச்சடி சூப்பர் காம்போ. ஏற்கனவே இதில் மட்டன் இருப்பதால் வெறும் தயிர் பச்சடி போதும்.
தம்போடும் முறை
உங்கள் வீட்டில் பயன்படுத்தாத தோசைக்கல்லை 10 நிமிடம் அடுப்பில் வைத்து விடவேண்டும். அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை தூக்கி வைத்து, அதன் மேல் மூடியிட்டு, கொதிக்கும் தண்ணீர் பாத்திரத்தை வைக்கவேண்டும். ஒரு அரைமணி நேரம் தம் போட்டு எடுத்தால் சூப்பர் சுவையில் மட்டன் பிரியாணி தயார். பிரியாணி முழுமையிலும் தீயை பார்த்து வைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பை அதிக தீயில் வைக்கக்கூடாது.
டாபிக்ஸ்