Karthi: விரைவில் தெலுங்கு இயக்குநரின் சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்கப் போகும் கார்த்தி - ஒருவேளை அவராக இருக்குமோ?
Sep 24, 2024, 03:15 PM IST
Karthi: விரைவில் தெலுங்கு இயக்குநரின் சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்கப்போகும் கார்த்தி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
Karthi: ஹைதராபாத்தில் ‘மெய்யழகன்’ படத்தின் தெலுங்கு வெர்ஷனான ‘சத்யம் சுந்தரம்’ படத்துக்கான புரோமோஷனில், விரைவில் தெலுங்கு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நடிப்பதை நடிகர் கார்த்தி உறுதிசெய்தார்.
கார்த்தி, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்திருக்கும் புதிய படமான மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு ’சத்யம் சுந்தரம்’ என்ற பெயரில் தெலுங்கில் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகிறது. நடிகர் கார்த்திக்கு தமிழைப் போல் தெலுங்கிலும் ஏரளாமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தனது படங்களில் தெலுங்கு பதிப்புக்கு கார்த்தியே டப்பிங்கும் பேசி வருகிறார். அத்துடன் கார்த்தியின் படங்கள் தமிழுடன், தெலுங்கிலும் நேரடியாக வெளியாகி வருகின்றன.
இதையடுத்து மெய்யழகன் தெலுங்கு பதிப்பான ’சத்யம் சுந்தரம்’ பட புரோமோஷனுக்காக நடிகர் கார்த்தி, ஹைதாராபாத் வந்திருந்தார்.
அப்போது அங்கு நடிகர் கார்த்தி, இயக்குநர் பிரசாந்த் வர்மாவுடன் ஒரு சூப்பர் ஹீரோ படத்தில் பணிபுரிவது குறித்துப் பேசினார்.
கார்த்தி - இயக்குநர் பிரசாந்த் வர்மா இணைந்து புதிய படமா?:
தெலுங்கில் ஹனுமன் படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மா, ஹைதராபாத்தில் மெய்யழகன் திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனான ‘சத்யம் சுந்தரம்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் விருந்தினர்களில் ஒருவராகப் பங்கு எடுத்தார்.
அப்போது நடிகர் கார்த்தி பற்றி கிண்டல் செய்த இயக்குநர் பிரசாந்த் வர்மா, "சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் அவரை சந்தித்தேன். விரைவில் அவரை பி.வி.சி.யுவில்(Prasanth Varma Cinematic Universe) பார்ப்போம் என்று நம்புகிறோம். ஆனால், அவர் இன்னும் இந்தத் திட்டத்திற்கு ஓ.கே. சொல்லவில்லை" என்றார்.
இதனைத் தொடர்ந்து மேடையில் ஏறிய பின் பேசிய நடிகர் கார்த்தி, பிரசாந்த் வர்மாவின் அடுத்த கதைப் பிடித்து இருந்ததாக ஒப்புக்கொண்டார்.
அப்போது பேசிய நடிகர் கார்த்தி, "நான் சொன்ன மாதிரி, உங்க ஸ்கிரிப்ட் எனக்கு பிடிச்சிருக்கு. அதனால் புதிய படத்தை நாம் வொர்க் அவுட் பண்றோம். பிரசாந்த் வர்மாவின் எனர்ஜி மற்றும் கான்செப்ட் அபாரமாக உள்ளது. அதனால் ஆவலுடன் காத்திருக்கிறேன், மேலும் இது ஒரு மாஸ் படமாக இருக்கும்" என்று கூறினார்.
சூர்யாவுக்கு பிடித்திருந்த மெய்யழகன்:
’மெய்யழகன்’ படத்தை 96 திரைப்படப் புகழ் சி.பிரேம் குமார் இயக்கியிருக்கிறார். மேலும் கார்த்தியின் அண்ணனும் நடிகருமான சூர்யா படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார்.
மேலும் விழாமேடையில் பேசிய நடிகர் கார்த்தி, தனது அண்ணன் சூர்யா சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததை நகைச்சுவையாக கூறினார். நடிகர் சூர்யா இந்தப் படத்தில் நடித்துள்ளாரா என செய்தியாளர்கள் கேட்டபோது பதிலளித்த நடிகர் கார்த்தி, "நடிகர் சூர்யா அண்ணா, இந்தப் படத்தை தயாரிக்க மட்டுமே செய்துள்ளார். ஆனால், ஒரு இரவு ரோலக்ஸ்(விக்ரம் படத்தில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தின் பெயர்) எங்கள் படப்பிடிப்பு நடக்கும் செட்டுக்கு வருகை தந்தார். எல்லோரும் சூர்யா அண்ணனை அடையாளம் கண்டுகொண்டு கூடிவிட்டார்கள்.
அதன் காரணமாக நாங்கள் படப்பிடிப்பை சிறிது நேரம் நிறுத்த வேண்டியிருந்தது. சூர்யா அண்ணா, தனது முதல் படத்தை (2007 இல் நடித்த பருத்திவீரன்) பார்த்தபோதும், தனது சமீபத்திய படத்தைப் பார்த்தபோதும் தன்னை கட்டிப்பிடித்தார்’’ என நடிகர் கார்த்தி உணர்ச்சிகரமாகப் பேசினார்.
வரவிருக்கும் அடுத்த சினிமாக்கள்:
வரும் செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் மெய்யழகன் திரைப்படத்தைத் தவிர, நடிகர் கார்த்தி பி.எஸ்.மித்ரனின் சர்தார் 2 மற்றும் நலன் குமாரசாமியின் ’வா வாத்தியார்’ ஆகியவற்றில் நடித்து வருகிறார்.
அதன்பின், லோகேஷ் கனகராஜின் ’கைதி 2’ படத்தில் நடிக்கவுள்ளார், நடிகர் கார்த்தி. இந்நிலையில் தெலுங்கு இயக்குநர் பிரசாந்த் வர்மா,தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் மகன், நந்தமுரி மோட்சன்ய தேஜாவை வைத்து சூப்பர் ஹீரோ படத்தை இயக்கி வருகிறார்.
டாபிக்ஸ்