11 Years Of Kutti Puli: ஆதரவற்ற தாய்க்கும் மகனுக்குமான பாசம்.. மகனைக் காப்பாற்ற தாய் செய்யும் பணிகள்தான் ‘குட்டிப் புலி’
May 30, 2024, 10:13 AM IST
11 Years Of Kutti Puli: ஆதரவற்ற தாய்க்கும் மகனுக்குமான பாசத்தை கதையாக வைத்து இயக்குநர் முத்தையா எடுத்த படம் தான், குட்டிப் புலி. இப்படம் திரையரங்குகளில் வெளியாகி 11 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.
11 Years Of Kutti Puli: மண்சார்ந்த படங்களை இயக்கி வரும் இயக்குநர் முத்தையாவின் முதல் திரைப்படம், குட்டிப்புலி. இப்படத்தில் சசி குமார், லட்சுமி மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் முருகதாஸ், பாலசரவணன், ராஜ சிம்மன், நமோ நாராயணன், சரவண சக்தி ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் 2013ஆம் ஆண்டு, மே 30ஆம் தேதி ரிலீஸானது. இப்படத்தின் கதைக்களம் முழுக்க முழுக்க ஸ்ரீவில்லிபுத்தூரை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்துக்கான ஒளிப்பதிவினை மகேஷ் முத்துசுவாமியும், எடிட்டிங்கினை கோபி கிருஷ்ணாவும் செய்திருந்தனர். இப்படத்துக்குண்டான மண் சார்ந்த இசையினை ஜிப்ரான் செய்துள்ளார். இப்படம் பி மற்றும் சி சென்டர் திரையரங்குகளில் சக்கைப்போடுபோட்டது.
குட்டிப் புலி திரைப்படத்தின் கதை என்ன?:
குட்டிப்புலி திரைப்படம், தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளரும் இளைஞரின் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதைப் பற்றி பேசுகிறது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த திருமணம் ஆகாத இளைஞர், குட்டிப் புலி. சிறுவயதில் தனது தந்தையை இழந்து விதவையாக இருக்கும் தாய் தெய்வானையுடன் வசித்து வருகிறார். குட்டிப் புலி, தான் வசிக்கும் பகுதியில் மூட்டைத் தூக்கும் நபராகவும், சிறு சிறு கூலி வேலைகளையும் செய்து வருகிறார். அவ்வப்போது தான் வசிக்கும் பகுதியில் எந்தவொரு பிரச்னையும் பிறரால் ஏற்படாதவகையில் தடுக்கிறார். மேலும் அந்த ஊரில் இருக்கும் கோயில் திருவிழாக்களில் குட்டிப் புலி, தனது ஏரியாவின் பெயரைக் காப்பாற்ற சிலம்பமும் சுற்றுகிறார்.
இந்நிலையில் குட்டிப் புலி வசிக்கும் பகுதிக்கு ஒரு அரசு அதிகாரியின் குடும்பம் வருகிறது. அவரது மகள் பாரதி. பாரதியை எப்படியாவது தன் காதல் வலையில் வீழ்த்த அந்தப் பகுதியினைச் சார்ந்த பப்பு மற்றும் அவரது நண்பர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால், கடைசியில் அவர்களின் நோக்கம் மாறி, பாரதி, குட்டிப் புலியின் தாய்ப்பாசத்தை உணர்ந்து அவரை ஒருதலையாக காதலிக்கத் தொடங்குகிறார்.
குட்டிப்புலியின் போக்கை மாற்றும் மூர்த்தி:
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அந்த தொகுதி எம்.பி.யின், ஊழல் பணிகளைக் கச்சிதமாக, முடிக்க எம்.எம்.எஸ். மூர்த்தி என்பவர் நியமிக்கப்படுகிறார். ஆனால், எம்.பி.யின் திருகு வேலைகளை முடிக்கமுடியாமல், மறைமுகமாகத் தடுக்கிறார், குட்டிப் புலி. இவர்களுக்கு இடையே நடந்த சண்டையில், குட்டிப் புலி கத்திக் குத்து பெற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றார். பாரதியும் தெய்வானையும் சிகிச்சை செலவுகளைப் பார்த்துக் கொள்கின்றனர்.
அதன்பின், பாரதியின் தந்தைக்கு, பாரதி மற்றும் குட்டிப்புலியின் விவகாரம் தெரியவருகிறது. அதை மூர்த்தியிடம் சொல்லி கண்டிக்க, பாரதியின் தந்தை முயற்சிக்கிறார்.
மூர்த்தியும் காதல் விவகாரத்தில் குட்டிப் புலியை எச்சரிக்கிறார். அப்போது அவரையே அடிக்கிறார், குட்டிப்புலி. இதனால், மூர்த்தி குட்டிப்புலியைக் கொல்ல வன்மம் வைக்கிறார். அதன்பின், குட்டிப் புலி, பாரதியின் காதலை முழுமையாக ஏற்று, சண்டை சச்சரவுகளில் இருந்து விலகி அமைதியான வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறார்.
அப்போது மூர்த்தியின் பகை உணர்வை அறிந்து, தெய்வானை, மூர்த்தியிடம் போய் மன்னிப்புக்கேட்க முயற்சிக்கிறார். தனது நண்பர் பப்பு மூலம் இத்தகவலை அறியும் குட்டிப் புலி, தனது தாய் தெய்வானை, மூர்த்தியின் வீட்டுக்குச் சென்று குண்டர்களிடம் மாட்டிவிடக் கூடாது என்று அவரை ஃபாலோ செய்துபோகையில், மூர்த்தியின் தம்பி ஆட்கள் அவரை மறிக்கின்றனர். அவரை அடித்து சமாளித்துவிட்டு, மூர்த்தியின் வீட்டை அடையும் குட்டிப் புலிக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. மன்னிப்புக் கேட்கச் சென்ற தன் தாய் தெய்வானை, மூர்த்தியைக் கொன்று விட்டதை உணர்கிறார். அதன்பின் என்ன நடந்தது, குட்டிப்புலி ஜோடி சேர்ந்தாரா, அவரது தாய் தெய்வானைக்கு என்ன ஆனது என்பதுதான் கிளைமேக்ஸ்.
குட்டிப் புலி படத்தில் நடித்தவர்கள் விவரம்:
இப்படத்தில் குட்டிப் புலியாக சசி குமாரும், பாரதியாக லட்சுமி மேனனும் தெய்வானையாக சரண்யா பொன்வண்ணனும் நடித்துள்ளனர். எம்.எம்.எஸ். மூர்த்தியாக ராஜசிம்மனும் பப்புவாக பாலசரவணனும் நடித்துள்ளனர். குட்டிப் புலியின் நண்பனாக ஆடுகளம் முருகதாஸ் நடித்துள்ளார்.
குட்டிப் புலி படத்தின் இசை:
குட்டிப் புலி படத்தில் நான்கு பாடல்களை ஜிப்ரான் வழங்கியிருந்தார். நான்கு பாடல்களுமே சூப்பர் ஹிட்டாகின. அருவாகாரன், காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது, ஆத்தா உன் சேலை, தாட்டியரே தாட்டியரே தாட்டியரே, ஆகிய நான்கு பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. இதற்கிடையே மலேசிய தமிழ்ப் பாடகர் டர்க்கி நாகராஜா கருப்பையாவின் ‘அக்கா மக அக்கா மக எனக்கொருத்தி இருந்தாளே’ என்னும் பாடல், இப்படத்தில் பயன்படுத்தப்பட்டது. இப்பாடலில் தான் முதன்முறையாக சசிகுமார் பிரேக் டான்ஸ் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘’குட்டிப் புலி'' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 11 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.
டாபிக்ஸ்