தாய் தின்ற மண்ணே.. மூன்றாவது முறையாக ஜி.வி.பிரகாஷுடன் இணையும் செல்வராகவன்.. நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு
Dec 12, 2024, 01:55 PM IST
தாய் தின்ற மண்ணே.. மூன்றாவது முறையாக ஜி.வி.பிரகாஷுடன் இணையும் செல்வராகவன்.. நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு குறித்துப் பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் செட்டிங் இயக்குநராக இருந்தவர், செல்வராகவன். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், மாலை நேரத்து மயக்கம், நெஞ்சம் மறப்பதில்லை, என்ஜிகே, நானே வருவேன் ஆகியப்படங்களை இயக்கியவர். இவரது ஒவ்வொரு படமும் அழுத்தமான கதை சொல்லல் காரணமாக, பலரால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், கொஞ்ச காலம் சினிமா இயக்கத்திற்குப் பிரேக்விட்டுவிட்டு, நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார், இயக்குநர் செல்வராகவன். குறிப்பாக பீஸ்ட், சாணி காயிதம், நானே வருவேன், பகாசூரன், பர்ஹானா, மார்க் ஆண்டனி ஆகியப்படங்களில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திவிட்டார்.
இந்நிலையில், புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கத்தில், பெயரிடப்படாத ஒரு பான் இந்திய திரைப்படத்தில் செல்வராகவன் மும்முரமாக நடித்து வருகிறார்.
இப்படத்தில் செல்வராகவனுடன் இணைந்து மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, புஷ்பா மற்றும் ஜெயிலர் படப்புகழ் சுனில், தெலுங்கு நடிகர் ஜே.டி.சக்கரவர்த்தி, ராதாரவி, யோகி பாபு, வினோதினி உட்படப் பலர் நடிக்கின்றனர். மேலும் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மீண்டும் திரை இயக்கத்துக்கு வரும் செல்வராகவன்:
பான் இந்தியத் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, திண்டுக்கல் அருகில் ஏறத்தாழ ஆயிரம் துணைநடிகர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது. இந்நிலையில் நடிப்புக்கு சிறிது காலம் பிரேக் விட்டுவிட்டு மீண்டும் திரையக்கத்திற்கு வருகிறார், இயக்குநர் செல்வராகவன். அதிலும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உடன் கைகோர்கிறார்.
அதேபோல் இன்னொரு பக்கம் முக்கியமான இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருந்து வருகிறார், ஜி.வி.பிரகாஷ். ஷங்கரின் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கிய ’வெயில்’ திரைப்படத்தில் விருதுநகரின் வாசத்தை காற்றில் இசை வழியாக கடத்தி பெரியளவில் அங்கீகாரத்தைப் பெற்றவர். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த சகோதரி ரைஹானா மற்றும் வெங்கடேஷ் இணையரின் மகன் ஆவார். இவரது உடன் பிறந்த தங்கை தான், வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’படத்தில் நடித்த பவானிஸ்ரீ ஆவார். இப்படி குடும்பமே திரைத்துறை சார்ந்த குடும்பமாக இருந்தாலும், தனது தனித்துவமான இசை மூலம் பல ரசிகர்களைப் பெற்றிருக்கிறார், ஜி.வி.பிரகாஷ் குமார்.
பல ஹிட்களைக் கொடுத்த செல்வராகவன்:
தனது தாய்மாமா ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜென்டில்மேன் படத்தில் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே என்னும் பாடல் பாடி, திரைத்துறையில் ஒரு பாடகராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ், ‘பொல்லாதவன்’ படத்தில் இசையமைத்ததன்மூலம் 90'ஸ் கிட்ஸ்கள் பலரையும் ஈர்த்தார். அடுத்து ஹரியின் சேவல், மீண்டும் வசந்தபாலனுடன் இணைந்து அங்காடி தெரு, ஏ.எல்.விஜய்யுடன் இணைந்து மதராசபட்டினம், வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் ‘ஆடுகளம்’ ஆகியப் படங்களுக்கு இசையமைத்தார்.
மேலும், தெய்வத்திருமகள், மயக்கம் என்ன, முப்பொழுதும் உன் கற்பனைகள், ஓரம்போ, எவனோ ஒருவன், குசேலன், சகுனி, தாண்டவம், பென்சில், செம, அசுரன், சூரரைப்போற்று ஆகியப் படங்களில் நடித்துள்ளார்.
மேலும்,டார்லிங், திரிஷா இல்லைனா நயன்தாரா, செம, பென்சில், பேச்சிலர் ஆகியப் படங்களில் ஹீரோவாகவும் நடித்திருந்தார், ஜி.வி.பிரகாஷ் குமார்.
இப்படி படுபிஸியாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்களுக்குப் பின், மீண்டும் இயக்குநர் செல்வராகவனின் புதிய படத்தில் இசையமைப்பாளர் ஆகிறார். இது குறித்த அறிவிப்பு நாளை டிசம்பர் 13ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு வெளியாகிறது. இப்படத்தை பரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
டாபிக்ஸ்