அப்போ போட்ட குண்டு இப்போ வெடிக்குது.. மீடியாவுக்கு எண்டு கார்டு போட்ட புரொடியூர் அசோசியேசன்..
Nov 20, 2024, 11:03 AM IST
தியேட்டர்களில் இனி எந்த யூடியூப் சேனல்களும் பேட்டி எடுக்க தியேட்டர் உரிமையாளர்கள் அனுமதிக்கக் கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் சில காலமாக அதிகரித்து வரும் சினிமா விமர்சனங்களால் தியேட்டர் உரிமையாளர்களும் தயாரிப்பாளர்களும் மிகுந்த பாதிப்பை சந்திக்கின்றனர். இதனால், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் இணைந்து சில முக்கிய முடிவை எடுத்துள்ளனர். அதுகுறித்த அறிவிப்பை அறிக்கையாகவும் வெளியிட்டுள்ளனர்.
யூடியூப் சேனல்களை ஊக்குவிக்க கூடாது
அதில், "இந்த 2024 வருடத்தில் இந்தியன் 2. வேட்டையன் மற்றும் கங்குவா திரைப்படங்களுக்கு Public Review/Talk மூலம் பெருமளவில் பாதிப்பை YouTube Channel-கள் ஏற்படுத்தியுள்ளன. அவைகளை இனிமேல் ஊக்குவிக்காமல், திரைத்துறையை சார்ந்த அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த முறையை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
பப்ளிக் ரிவ்யூ நிகழ்ச்சிகளுக்கு தடை
அதன் முதல் முயற்சியாக, அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த YouTube Channel-களும் எடுக்க தடை செய்து, இந்த FDFS Public Review/Talk நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக இந்த நடைமுறையை கொண்டு வருவது காட்டாயம் என திரையரங்கம் மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஆலோசனை வழங்கி இருந்தார். அதன் அடிப்படையில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் சுப்ரமணியன் பேச்சு
இதுகுறித்து திருப்பூர் சுப்ரமணியம், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அனுப்பிய ஆடியோவில், "ஒரு படம் புதிதாக திரையரங்கில் ரிலீஸ் ஆகிறது என்றால் அது இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தான் ரிலீஸாக வேண்டும். தமிழ்நாட்டில் புதிய திரைப்படங்களுக்கான சிறப்புக் காட்சி காலை 9 மணிக்குத்தான் தொடங்குகிறது. ஆனால், மற்ற மாநிலங்களில் அதிகாலை நேரத்திலேயே சிறப்புக் காட்சிகள் எல்லாம் ஆரம்பமாகிறது. மற்ற மாநிலங்களிலும் தமின்நாட்டைப் போலவே சிறப்புக் காட்சிகளை காலை 9 மணிக்கே ஆரம்பிக்க வேண்டும்.
2 வாரம் நோ விமர்சனம்
அதுமட்டுமின்றி, புதிதாக வெளியாகும் படத்தை 2 வாரக் காலத்திற்குப் யாரும் விமர்சனம் செய்யக் கூடாது. இதற்காக நீதிமன்றத்தை அணுகி 2 வாரக் காலத்திற்கு யாரும் விமர்சனம் செய்யக் கூடாது எனத் தடை வாங்க வேண்டும். பல கோடி ரூபாய் போட்டு படம் எடுத்தால் அதிகாலை காட்சியில் படத்தை பார்த்துவிட்டு, தமிழ்நாட்டில் படத்தின் காட்சிகள் ஆரம்பமாவதற்கு முன்னரே யூடியூப் சேனல்களில் விமர்சனம் என்ற பெயரில் படத்தைக் காலி செய்கிறார்கள்.
யூடியூபர்களுக்கு அனுமதி இல்லை
சமீப காலமாக இதுபோன்ற விமர்சனங்கள் கொஞ்சம் கூட வரைமுறை இல்லாமல் இருக்கிறது. அதுமட்டுமா, தியேட்டர் வளாகங்களில் குவிந்துள்ள யூடியூப்பர்கள் படம் குறித்த ரசிகர்களின் கருத்து என வீடியோ எடுப்பதை நாம் சுத்தமாக அனுமதிக்கவே கூடாது. இது தொடர்பாக நாம் முன்னரே கட்டுப்பாடு விதித்துவிட்டு தற்போது அதை மீறி வருகிறோம்.
நீதிமன்றம் செல்ல வேண்டும்
இதுபோன்ற செயல்களை நாம் அனுமதிப்பதால் நமது வியாபாரத்தை நாமே சிதைப்பது போல அமைந்துவிடும். சிலரின் தவறான விமர்சனங்கள், ஏராளமான படங்களை தோல்வியைத் தழுவ வைத்துள்ளன. இந்த வருடத்தில் மாபெரும் நட்சத்திரங்களான கமலின் இந்தியன் 2 படமும், ரஜினி காந்த்தின் வேட்டையன் படமும் சமீபத்தில் 'கங்குவா' படமும் கடுமையான விமர்சனங்களால் தான் பாதிக்கப்பட்டது. விமர்சனங்களைப் பார்த்த பின்னர் தான் மக்கள் தியேட்டருக்கு வருவதையே நிறுத்தினர்.
கேரளாவில் சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் நீதிமன்றத்தை அணுகி தனது படங்களுக்கு விமர்சனம் செய்யத் தடை வாங்கினார் எனபதைக் கேள்விப்பட்டேன். அது போலவே இங்கும் தயாரிப்பாளர் சங்கம் நீதிமன்றத்தை நாட வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்