"தியேட்டர்கிட்ட மைக்க தூக்கிட்டு யாராவது வந்தா.. கோர்ட்டுக்கு போகனும்" கடுப்பில் கத்திய திருப்பூர் சுப்ரமணியம்
சினிமா விமர்சகர்களாலும் மீடியாவாலும் தான் படத்தின் வசூல் பாதிக்கப்படுவதாகக் கூறி திருப்பூர் சுப்ரமணியம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முக்கிய நடிகர்களின் படம் வெளியாகிறது என்றாலே தியேட்டர் உரிமையாளர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். ஏனென்றால் அவர்களது ரசிக்ரகள் திரும்பத் திரும்ப படம் பார்க்க வந்து வசூலை அதிகரிப்பர். இதனால், படம் விநியோகஸ்தர்கள் மட்டுமின்றி படம் தயாரித்தவர்கள், படத்தை இயக்கியவர்கள், நடித்தவர்கள் என அனைவரும் லாபம் அடைவார்கள்.
திரையரங்க வசூல் பாதிப்பு
ஆனால், சமீப காலங்களில் சினிமா ரசிகர்களின் விருப்பங்கள் மாறி வருவதால், தியேட்டர்களின் வசூல் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஓடிடி தளங்களின் வருகை ஒருபுறம் சினிமா ரசிகர்களை தியேட்டருக்கே வரவிடாமல் செய்கிறது. அப்படி படத்திற்கு வரும் சிலரோ அதை திருட்டுத் தனமாக பதிவு செய்து இணையத்தில் வெளியிடுகின்றனர்.
அப்படியும் இல்லையா, தியேட்டருக்கு போய் படம் பார்க்கலாம் என நினைப்போரை, விமர்சனங்கள் எனும் பெயரால் அப்படியே தடுத்து நிறுத்தி விடுகின்றனர். இதனால், நாளுக்கு நாள் தியேட்டருக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைகிறது. தற்போது சினிமா விமர்சனங்களைத் தாண்டி, தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள் அதிகமாகி அவை விமர்சனங்களாக வெளிவந்து, ஒட்டுமொத்த படக்குழுவையும் பாதிக்கிறது.