நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதில் சொல்லுங்க.. திருமண ஆவணப்பட விவகாரம்.. தனுஷ் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி
Dec 12, 2024, 02:40 PM IST
நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதில் சொல்லுங்க.. திருமண ஆவணப்பட விவகாரம்.. தனுஷ் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெட்பிளிக்ஸில் வெளியான ஆவணப்படத்தில் தனது அனுமதியின்றி ’நானும் ரவுடிதான்’ படக்காட்சிகள் இடம்பெற்றதற்கு இழப்பீடு கேட்டு தனுஷ் தொடர்ந்த வழக்கில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், நெட்பிளிக்ஸ் ஆகியோர் பதிலளிக்கும்படி உத்தரவு பிறப்பித்து, விசாரணையை ஜனவரி 8ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தனுஷ் வக்கீல் நோட்டீஸ்
நடிகை நயன்தாரா தனது திருமண ஆவணப் படத்துக்கு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி, 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகை நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.
நயன்தாரா அறிக்கை
இந்த நோட்டீசுக்கு பதிலளித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை, தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் மற்றும் நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனு தாக்கல்
அந்த மனுவில், மும்பையைச் சேர்ந்த நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், நெட் பிளிக்ஸ் நிறுவனம் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டாலும், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் சென்னையில் வசிப்பதாக தெரிவித்தனர்.
உரிமையியல் வழக்கு தொடரலாம்:
மேலும், இரு தரப்புக்கும் இடையேயான பிரச்னை தமிழக அதிகார வரம்புக்குள் நடைபெற்றுள்ளதால், சென்னை உயர் நீதிமன்றத்திலேயே இந்த உரிமையியல் வழக்கு தொடரலாம் எனவும் உத்தரவிட்டார்.
வழக்கு தள்ளிவைப்பு:
மேலும், வழக்கு தொடர்பாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்.
தனுஷின் பழிவாங்கும் நடவடிக்கை:
முன்னதாக நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில், தனுஷின் தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், தனது கணவரும் மட்டுமன்றி ஆவணப்பட பணிகளில் அர்ப்பணிப்போடு பங்காற்றிய ஒவ்வொருவரும் வெகுவாகப் பாதிப்படைந்திருக்கிறோம்.
காதல், திருமணம் உள்ளிட்ட எனது வாழ்வின் மகிழ்வான தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தில், என் வாழ்வின் மகத்துவமான காதலை கண்டடைந்த 'நானும் ரௌடிதான்' திரைப்படம் இல்லாததன் வலி மிகவும் கொடுமையானது.
2 வருட காத்திருப்பு
நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ஆவணப்படத்தில் 'நானும் ரௌடிதான்' படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில், உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெறுவதற்காக 2 வருடங்களாக காத்திருந்தோம்.
நஷ்ட ஈடு
டிரெய்லரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராக லீகல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிலும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட, ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்கப்பட்டு இருப்பது மிகவும் விநோதமானதாகவும் இருக்கிறது. கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது’’ எனக் காட்டமாக நடிகை நயன்தாரா நடிகர் தனுஷை விமர்சித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
நெட்பிளிக்ஸில் வெளியான ஆவணப்படத்தில் தனது அனுமதியின்றி நானும் ரவுடிதான் படக்காட்சிகள் இடம்பெற்றதற்கு இழப்பீடு கேட்டு தனுஷ் தொடர்ந்த வழக்கில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், நெட்பிளிக்ஸ் ஆகியோர் பதிலளிக்கும்படி உத்தரவு பிறப்பித்து, விசாரணையை ஜனவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். இதுகுறித்து அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.
டாபிக்ஸ்