Jyothika: உருவாகிறது அடுத்த வாரிசு..இயக்குநராக ஜொலித்த தியா! பெருமை அடைந்த அம்மா ஜோதிகா பாராட்டு
Oct 03, 2024, 02:55 PM IST
Jyothika: சிறந்த மாணவ குறும்படம் வென்று இயக்குநராக ஜொலித்த தியாவின் திறமையை கண்டு வியந்து பெருமை அடைந்த அவரது அம்மாவான ஜோதிகா பாராட்டு தெரிவித்துள்ளார். இதன்மூலம் சூர்யா வீட்டில் கலை உலகில் உருவாகிறது அடுத்த வாரிசு.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சிவக்குமார் மகன்களான சூர்யா, கார்த்தி என இருவரும் முன்னணி ஹீரோக்களாக இருந்து வருகிறார்கள். சூர்யாவின் மனைவியான ஜோதிகா டாப் ஹீரோயினாக இருந்து வந்ததோடு, தற்போது இரண்டாவது இன்னிங்ஸ் கதையின் நாயகியாகவும், முக்கியத்துவம் மிக்க கதாபாத்திரங்களிலும் தோன்றி தனது அபார நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
விருது வென்ற சூர்யா - ஜோதிகாவின் மகள் தியா
இதையடுத்து சூர்யா - ஜோதிகா தம்பதியினரின் மகளான தியா, ஆவண குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த படத்துக்காக அவர் சிறந்த திரைக்கதை எழுத்தாளர், சிறந்த மாணவ குறும்படம் என இரண்டு
திரிலோகா சர்வதேச பிலிம்பேர் விருதுகளை வென்று தனது தாய், தந்தைக்கு பெருமை தேடி தந்துள்ளார்.
கல்லூரி மாணவியாக இருந்து வரும் தியா, கலைக்குடும்பமாக இருந்து வரும் சிவக்குமார் குடும்பத்தில் இருந்து அடுத்த வாரிசாக கலை சேவை புரிந்துள்ளார்.
தியாவை நினைத்து பெருமிதம் அடைகிறேன்
மகள் தியாவின் இந்த சாதனை குறித்து இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கும் ஜோதிகா, "பொழுதுபோக்குத் துறையில் தொழில்நுட்பம், ஒளிப்பதிவு போன்ற பணிகளில் ஈடுபடும் பெண்கள், பெண் இன்சார்ஜ்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளைப் பற்றிய ஒரு அர்த்தமுள்ள மாணவர் ஆவணப்படத்தை உருவாக்கிய தியாவை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.
இதைத் தொடர வேண்டும். இது போன்ற பல அடிப்படை பிரச்னையை வெளிச்சம் போட்டதற்கு நன்றிகள்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவில் தியா தனக்கு கிடைத்த விருதுகளின் சான்றுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
அத்துடன் தியா உருவாக்கிய படத்தின் யுடியூப் லிங்கும் அவர் பகிர்ந்துள்ளார். இதில் பாலிவுட் துறையில் இருக்கும் மூன்று பெண்கள் தங்களது பணியில் இருக்கும் சிரமத்தை விவரிக்கின்றனர். இந்த ஆவணப்படம் மொத்தம் 13 நிமிடங்கள் 13 நொடிகள் இடம் பெற்றுள்ளது. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜோதிகா புதிய படம்
ஜோதிகா நடிப்பில் இந்த ஆண்டில் சைத்தான், ஸ்ரீகாந்த் ஆகிய இந்தி படங்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து டப்பா கார்டல் என்ற படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். மேலும் சில படங்களில் அவர் கமிட்டாகியிருக்கும் நிலையில், அவ்வப்போது இன்ஸ்டாவில் ஒர்க்அவுட் விடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
அடுத்தடுத்து இந்தி படங்களில் நடித்து வரும் ஜோதிகா தற்போது மும்பையில் குடிபெயர்ந்துள்ளார்.
கங்குவா ரிலீஸ்
சூர்யா நடித்திருக்கும் புதிய படமான கங்குவா வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள். பேண்டஸி கலந்த ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் கங்குவா படம் மூலம் பாலிவுட் இளம் நாயகி திஷா பதானி, கோலிவுட்டில் அறிமுகமாகிறார். அதேபோல் பாலிவுட் நடிகர் பாபி தியோல் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகிறார். சிறுத்தை சிவா படத்தை இயக்கியுள்ளார். ரூ. 300 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது.
சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 44வது படம் என்பதால் சூர்யா44 என்று அழைக்கப்பட்டு வருகிறது.