சிவாஜியின் அபார நடிப்பு..இந்தியாவின் ஆஸ்கர் என்ட்ரி, ரேஸில் வென்ற கமல்! தமிழில் இன்று வெளியான படங்கள் லிஸ்ட்
Oct 25, 2024, 07:55 AM IST
சிவாஜியின் அபார நடிப்பு, இந்தியாவின் ஆஸ்கர் என்ட்ரியாக சென்றதுடன், ரஜினியுடனான ரேஸில் வென்ற கமல், ஒரே நாளில் 8 படங்கள் ரிலீஸ் என அக்டோபர் 25ஆம் தேதி தமிழ் சினிமாவில் நடந்த சுவாரஸ்ய விஷயங்களை பின்னோக்கி பார்க்கலாம்
அக்டோபர் 25ஆம் தேதி தமிழ் சினிமாவுக்கு முக்கியமான நாளாக உள்ளது. இன்றைய நாளில் பல டாப் ஹீரோக்கள் படங்கள் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக 1992இல் இந்த நாளில் தீபாவளி வெளியீடாக மட்டும் 8 படங்கள் ரிலீசாகியுள்ளன. 1940 முதல் தற்போது வரை இந்த நாளில் வெளியான படங்களின் லிஸ்டை பார்க்கலாம்
தொழிலாளி
எம்ஜிஆர் - கே.ஆர். விஜயா நடித்து எம்.ஏ. திருமுருகன் இயக்கத்தில் 1964இல் வெளியான படம் தொழிலாளி. நடிகை ரத்னா அறிமுகமான இந்த படத்தில் எம்.என். நம்பியார், எஸ்.ஏ. அசோகன், நாகேஷ், மனோரமா, எஸ்.என். லட்சுமி பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.
படத்தின் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்ப தேவர் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து அவரே கதை எழுத, ஆரூர் தாஸ் வசனத்தில் உருவாகியிருந்த இந்த படம் எம்ஜிஆருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. பக்கா மாஸ் மசாலா திரைப்படமாக உருவாகியருக்கும் தொழிலாளி வெளியாகி இன்றுடன் 60 ஆண்டுகள் ஆகிறது
ஸ்கூல் மாஸ்டர்
கன்னடத்தில் ஸ்கூல் மாஸ்டர் என்ற பெயரில் 1958இல் வெளியான படத்தின் ரீமேக்காக 1973ஆம் ஆண்டு அதே பெயரில் தமிழில் ஜெமினி கணேசன், செளகார் ஜானகி, ஸ்ரீகாந்த், ராஜஸ்ரீ, எம்.என். நம்பியார், சோ, தேங்காய் சீனிவாசன் போன்ற பலரது நடிப்பில் இந்த படம் உருவானது. பி.ஆர். பந்தலு இயக்கியிருந்த இந்த படத்தின் தை புதுமையாக இல்லை என விமர்சிக்கப்பட்டாலும் சராசரி வெற்றியை பெற்றது.
கெளரவம்
கண்ணன் வந்தான் என்ற மேடை நாடகத்தின் திரைவடிவமாக உருவாகியிருந்த கெளரவம் 1973இல் வெளியானது. வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கத்தில் சிவாஜி கணேசன் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் வழக்கறிஞர்களாக தோன்றியிருப்பார். நடிப்பில் ஒன் மேன் ஷோ காட்டி நடிப்புக்காகவே பாராட்டுகளை பெற்ற அவர் கெளரவம் படத்துக்கு சிறந்த நடிகர் பிலிம்பேர் விருதை வென்றார். உஷா நந்தினி, பண்டரி பாய், மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், செந்தாமரை, ஓய்ஜி மகேந்திரன் உள்பட பலரும் படத்தில் நடித்திருப்பார்கள். கண்ணதாசன் பாடல் வரிகளுக்கு எம்எஸ் விஸ்வநாதன் இசையமைக்க நீயும் நானுமா, பாலூட்டி வளர்த்த கிளி அதிசய உலகம், யாமுனா நதி போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. சிவாஜி கணேசன் நடித்து மிஸ் செய்யாமல் பார்க்ககூடிய படமாக இருந்து வரும் கெளரவம் வெளியாகி இன்றுடன் 51 ஆண்டுகள் ஆகிறது.
பாக்தாத் பேரழகி
சிவாஜி கணேசனின் கெளரவம் படத்துடன் போட்டியாக அதே நாளில் வந்த படம் பாக்தாத் பேரழகி. ஜெயலலிதா கதையின் நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தில் ரவிச்சந்திரன், சாவித்திரி, மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், ஆர்.எஸ். மனோகர், வி.கே. ராமசாமிி, தேங்காய் சீனிவாசன் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். டி.ஆர். ராமண்ணா இயக்கியிருந்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது
திருமதி பழனிசாமி
ஆர். சுந்தரராஜன் இயக்கத்தில் சத்யராஜ், சுகன்யா, கவுண்டமணி, ரேகா உள்பட பலரும் நடித்திருக்கும் இந்த படம் கிராமத்து பின்னணியில் கொண்ட கதையம்சத்தில் உருவாகியிருக்கும். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் சராசரி வெற்றியை பெற்றது
தேவர் மகன்
இந்திய சினிமாவில் முக்கிய படமாகவும், இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட படமாக இருந்து வரும் தேவர் மகன் 1992இல் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்தது. பரதன் இயக்கியிருக்கும் படத்தில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், நாசர், கெளதமி, ரேவதி காக்கா ராதாகிருஷ்ணன், சங்கிலி முருகன், வடிவேலு உள்பட பலரும் நடித்திருப்பார்கள். ரசிகர்கள் கவர்ந்த இந்த படம் 175 நாள்கள் ஓடி சில்வர் ஜூப்ளி படமாக மாறியதுடன் 5 தேசிய விருதுகளை வென்றது. இந்தி, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இளையராஜா இசையில் அனைத்து பாடல்களும், பின்னணி இசையும் இன்று வரையிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் அந்தஸ்தை பெற்ற தேவர் மகன் படம் வெளியாகி இன்றுடன் 32 ஆண்டுகள் ஆகிறது.
செந்தமிழ் பாட்டு
பி. வாசு இயக்கத்தில் பிரபு, சுகன்யா, கஸ்தூரி, சுஜாதா, சலீம் கவுஸ், விஜயகுமார், கவுண்டமணி உள்பட பலரும் நடித்திருக்கும் படம் செந்தமிழ் பாட்டு. மியூசிக்கல் - ட்ராமா பாணியில் உருவாகியிருந்த இந்த படத்துக்கு எம்.எஸ். விஸ்வநாதன் - இளையாராஜா ஆகியோர் சேர்ந்து இசையமைத்திருப்பார்கள். படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதுடன், படமும் சராசரி வெற்றியை பெற்றது.
ராசுக்குட்டி
பாக்யராஜ் நடித்து இயக்கியிருந்த காமெடி ட்ராமா படமான ராசுக்குட்டி தீபாவளி வெளியீடாக 1992இல் வந்தது. படத்தில் ஹீரோயினாக ஐஸ்வர்யா நடித்திருப்பார். மனோரமா, கல்யாண் குமார், மெளனிகா, நளினி காந்த், செம்புலி ஜெகன் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். இளையராஜா இசையமைப்பில் இந்த படத்தின் பாடல்களும் ஹிட்டாகின. படத்தில் பாக்யராஜ் செய்யும் காமெடி வரவேற்பை பெற்ற நிலையில் படமும் சராசரி வெற்றியை பெற்றது
பாண்டியன்
ரஜினி - கமல் ரிலீஸ் மோதலில் தேவர் மகன் படத்துக்கு போட்டியாக வந்த படம் பாண்டியன். கன்னடத்தில் வெளியான பாம்பே தாதா படத்தின் ரீமேக்காக உருவாகியிருக்கும் இந்த படத்தை ரஜினிகாந்தின் ஆஸ்தான இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் இயக்கியிருப்பார். பஞ்சு அருணாச்சலம் படத்துக்கு திரைக்கதை எழுதியிருப்பார். குஷ்பூ, ஜனகராஜ், பிரபாகர், சரண்ராஜ், ஜெயசுதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டானது. இளையராஜா இசையில் பாடல்களும் அனைத்தும் வரவேற்பை பெற்றன.
காவியத்தலைவன்
விஜயகாந்த், பானுப்பிரியா, எம்.என். நம்பியார், மனோரமா, மஞ்சுளா விஜயகுமார் உள்பட பலர் நடித்து கே. எஸ். கோபால கிருஷ்ணன் இயக்கிய படம் காவியத்தலைவன். பேமிலி ட்ராமா பாணியில் உருவாகியிருந்த இந்த படம் விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றதுடன் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. படத்தில் விஜயகாந்த், பானுப்பிரியாவின் எமோஷனலான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
7ஆம் அறிவு
சூர்யா - ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருந்த 7ஆம் அறிவு படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார். தமிழகத்தில் வாழ்ந்த புத்தமத துறவியான போதிதர்மர் பற்றியும், இந்தியா மீது பயோ போர் தொடுக்க முயற்சிக்கும் சீனாவின் சூழ்ச்சியை ஹீரோ முறியடிப்பதுதான் படத்தின் கதை. மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2011 தீபாவளி ரிலீசாக வந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பியது. சூர்யாவின் சினிமா கேரியரில் முக்கிய படமாக இருக்கும் 7ஆம் அறிவு வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகள் ஆகிறது.