Devar Magan: தேவர் மகன் பாடலுக்கு மன்னிப்பு; வைரலாகும் கமல் பேட்டி!
நாங்கள் செய்த போது அதையெல்லாம் நினைக்கவே இல்லை. எங்கள் மனதில் அது இல்லை. அதனை வியாபார யுக்தியாகவோ அல்லது எதாவது ஒரு இனத்தை வாழ்த்தி பாட வேண்டும் என்பதற்காகவோ செய்யவில்லை.
உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கும் இந்தப்படம் வருகிற ஜூன் 29 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது நடிகர் கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய மாரிசெல்வராஜ் தேவர்மகன் திரைப்படம் எனக்குள் மனபிறழ்வை உண்டாக்கியது என்று பேசினார்.
அவர் பேசும் போது, “ அந்தப்படத்தில் பேசப்பட்ட விஷயம் சரியா? தவறா? என்ற ஊசல் இன்னும் என்னுள் இருக்கிறது. அந்தப்படத்தில் வடிவேலு சார் இசக்கி என்ற கதாபாத்திரத்தில் வருவார். அந்தக்கதாபாத்திரம்தான் இந்தப்படத்தில் மாமன்னனாக மாறியிருக்கிறது. அந்தக்கதாபாத்திரம் வேறு யாருமில்லை என்னுடைய அப்பாதான்.
படத்தில் இடம் பெற்று இருக்கக்கூடிய தேவர்களுக்கு இடையே என்னுடைய அப்பா இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்ததின் விளைவுதான் மாமன்னன் திரைப்படம்” என்றார். இவரது பேச்சு பரபரப்பை உண்டாக்கியது. இதற்கு கமல் பேசும் போது எதிர்வினை ஆற்றுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அவர் அது குறித்து எதுவும் பேசவில்லை.
இந்த நிலையில் இந்த விவகாரம் அண்மைகாலமாக சமூகவலைதளங்களில் விவாதபொருளாக மாறி.. தேவர்மகன் படம் சரியா? தவறா என்ற அளவுக்கு சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து விகடன் பத்திரிகையாளர் சந்திப்பில் கமலிடம் இது தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ அந்த விபத்துக்கு நானும் இளையராஜாவும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். வாலியை இதில் இழுக்க முடியாது. அவர் சார்பாகவும் நாங்கள் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறோம்.
நாங்கள் செய்த போது அதையெல்லாம் நினைக்கவே இல்லை. எங்கள் மனதில் அது இல்லை. அதனை வியாபார யுக்தியாகவோ அல்லது எதாவது ஒரு இனத்தை வாழ்த்தி பாட வேண்டும் என்பதற்காகவோ செய்யவில்லை. இது போன்ற சாயலில் பல படங்கள் வந்திருக்கிறது.
மறுபடியும் நான் தேவர்மகன் படம் எடுத்தால் நான் தேவர்மகன் என்ற பெயரை வைக்கமாட்டேன். ஆனால் அன்றைய காலக்கட்டத்தில் அது தேவைப்பட்டது. அந்தப்படத்தில் இடம் பெற்ற பாடலுக்காக விமர்சனங்கள் எழுந்த போது நாங்கள் அதை ஏற்றுக்கொண்டோம். வாதாடவில்லை. ” என்று பேசினார்.