‘அல்லு அர்ஜூன் கைது.. இது முதல்வர் செய்த விளம்பரம்.. ஆச்சர்யமா இருக்கா’- வம்பிழுக்கும் டைரக்டர்
Dec 14, 2024, 09:39 PM IST
வார இறுதி நாட்களில் புஷ்பா 2 தி ரூல் படத்தின் வசூலை அதிகரிக்க நினைத்து தெலங்கான முதல்வர் அல்லு அர்ஜூனை கைது செய்திருக்கிறார் என இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி, அல்லு அர்ஜுன் தனது புஷ்பா 2: தி ரூல் படத்தின் பிரீமியர் காட்சிகளைக் காணவந்த ரசிகர்களை உற்சாகமூட்டும் விதமாக சந்தியா தியேட்டருக்கு விசிட் வந்தார்.
ரசிகை மரணம்- அல்லு அர்ஜூன் கைது
அப்போது அவரைக் காண அவரது ரசிகர்கள் முந்தி அடித்துக் கொண்டு சென்றதால் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் தியேட்டருக்குள் வந்து நெரிசல் ஏற்பட்டு நிலமை கை மீறி சென்றது.
இது ஒரு பெண்ணின் மரணத்திற்கும் அவரது மகனை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்ப்பதற்கும் வழிவகுத்தது. இதையடுத்து அல்லு அர்ஜுன் மற்றும் தியேட்டர் நிர்வாகத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அல்லு அர்ஜூனை கைது செய்து பின் ஜாமீனில் அனுப்பி வைத்தனர்.
கண்டனம் தெரிவித்த ராம் கோபால் வர்மா
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் குறித்து இயக்குநரும் தயாரிப்பாளருமான ராம் கோபால் வர்மா கருத்து தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜூனுக்கு எதிராக புகார் அளித்த சமயத்தில் இருந்தே அவருக்கு ஆதரவாக பேசிய ராம் கோபால் வர்மா தற்போது, அவரது கைதுக்கு கண்டனம் தெரிவித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை விமர்சித்துள்ளார்.
வசூலை உயர்த்த நடக்கும் விளம்பரம்
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராம் கோபால் வர்மா, “முதல்வர் ரேவந்த் ரெட்டி ஏன் அல்லு அர்ஜுனுக்கு இதுபோன்ற விஷயத்தை செய்தார் என்பது தெரியுமா? இவர் புஷ்பா 2 படத்தின் வசூலை ஊக்கப்படுத்தவே இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளார். புஷ்பா தி ரூல் படத்தின் 2ம் வார வசூலை மிகப்பெரிய உச்சத்துக்கு கொண்டு செல்ல நினைத்து அவர் தெலங்கான மக்களின் விருப்ப மகனின் படத்திற்கு இப்படி ஒரு விளம்பரத்தை வழங்கி உள்ளார் என்று நான் நினைக்கிறேன்.”
பலவீனமான வழக்குக்கு முக்கியத்துவம்
ஒரு சில மணிநேரங்களிலேயே அல்லு அர்ஜூனால் ஜாமீனில் வெளியே வர முடியும் என்பதை அறிந்தும், இந்த பலவீனமான வழக்கிற்கு அரசு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்றால் அதற்கு காரணம் அல்லு அர்ஜூன் நீண்ட நீண்ட காலம் பாக்ஸ் ஆபிஸை ஆள வேண்டும் என முதல்வர் நினைத்தது தான் என விமர்சித்துள்ளார்.
மேலும், தெலுங்கானா மாநிலத்தின் பெருமையை புஷ்பா 2 படத்தின் சூப்பர் கலெக்ஷன்களைப் போலவே உயர்த்திப் பிடித்த முதல்வர் ரேவந்த்க்கு நன்றி எனவும் கூறியுள்ளார்.
ஒரு மரணம் குறித்து யாரும் பேசவில்லை
முன்னதாக, அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட வழக்கில் மாநில அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று முதல்வர் ரேவந்த் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மேலும், அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டது தொடர்பாக மாநிலத்தில் எந்த போராட்டங்களும் நடக்கவில்லை. அவரது கைது குறித்து மக்கள் தொடர்ந்து பேசுகிறார்கள். ஆனால் ரசிகரின் மரணம் அல்லது அவரது மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கோமாவில் இருந்து வெளியே வந்தவுடன் குழந்தை தாயில்லாமல் போய்விடும்.
போரில் இந்தியாவிற்காக வென்றாரா?
ஒரு திரைப்படத்தை உருவாக்கி பணம் சம்பாதிப்பது அவரது தொழில், அதற்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் போரை நடத்தி இந்தியாவுக்காக வென்றாரா? அவர் ஒரு திரைப்படத்தை உருவாக்கினார். அதுவும் பணம் சம்பாதிப்பதற்காக அவ்வளவுதான் என காட்டமாக பேசி இருந்தார்.
டாபிக்ஸ்