புஷ்பா 2 பார்க்க சென்று கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த பெண்.. அல்லு அர்ஜுன் மீது பாய்ந்த வழக்கு! என்ன நடந்தது?
Pushpa 2 screening: புஷ்பா 2 படம் பார்க்க சென்று கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த பெண் குடும்பத்தாருக்கும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது மகனுக்கும் வேண்டிய உதவிகளை வழங்குவதாக படக்குழு உறுதியளித்துள்ளது.
இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பான் இந்தியா ரிலீஸாக இருந்து வந்து புஷ்பா 2 படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவின் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடித்திருக்கும் இந்த படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். தெலுங்கில் உருவாகியிருக்கும் படம் தமிழ் உள்ளிட்ட பிற தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் வெளியாகியுள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி
இதையடுத்து படத்தின் ரிலீசுக்கு முன்னர் டிசம்பர் 4ஆம் தேதி இரவு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்த காட்சியை பார்ப்பதற்கு படத்தின் ஹீரோவான அல்லு அர்ஜுன் வந்துள்ளார்.
அல்லு அர்ஜுன் வருகை குறித்து அறிந்த ரசிகர்கள் அவரை பார்க்க வேண்டிய ஆர்வத்தில் கூட்டமாக கூடினார். இதனால் திரையரங்கில் திடீரென பரபரப்பை ஏற்பட்டது.
அல்லு அர்ஜுனை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்து கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய ரேவதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகனான 9 வயதாகும் ஸ்ரீதேஜ் என்பவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு
புஷ்பா 2 படம் பார்க்க வந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் நடிகர் அல்லு அர்ஜுன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதாக தெலுங்கு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட திரையரங்கு நிர்வாகத்துக்கு எந்த வித தகவலும் தெரிவிக்காமல் அல்லு அர்ஜுன் வந்ததால் தான் ரசிகர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு, அதில் சிக்கி பெண் பலியாகி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது
திரையரங்கம் மீது நடவடிக்கை
அத்துடன் இந்த சம்பவம் நடந்த சந்தியா திரையரங்கம் மீது பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியமாக இருந்ததாக, திரையரங்கை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் டிக்கெட் சரிபார்க்க அனுமதித்ததாகவும், குறைந்தபட்ச பாதுகாப்பு தரத்தையும் பின்பற்றவில்லை எனவும் திரையரங்க ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன் குழுவினர் உதவி
புஷ்பா 2 படம் பார்க்க வந்த பெண் ஒருவர் உயிரிழ்ந்ததை அடுத்து, படத்தன் தயாரிப்பு நிறுவனம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவு அளித்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் மகனுக்கான சிகிச்சை செலவை ஏற்றுக்கொண்டு, வேண்டிய உதவிகளை வழங்க வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக படக்குழுவினர் சார்பில் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட பதிவில், “மருத்துவமனைக்குச் சென்று, மருத்துவர்களிடம் நேரில் பேசி, குழந்தையின் சிகிச்சைக்குத் தேவையான நிதி உதவியை எங்கள் தரப்பில் இருந்து வழங்குவதை உறுதி செய்யப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது. stampede at Pushpa 2 premiere
முன்னதாக, புஷ்பா 2 படத்தின் புரொமோஷனின் போது பேசிய அல்லு அர்ஜுன், தனது ரசிகர்களை ஆர்மி என குறிப்பிட்டதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பெண் ஒருவர் உயிரிழப்பு தொடர்பாக இரண்டாவது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புஷ்பா 2 முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் உள்பட பலர் நடித்திருக்கும் புஷ்பா 2 படம், முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ. 160 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற ஆர்ஆர்ஆர் படத்தின் ரூ. 133 கோடி என்ற சாதனையை புஷ்பா 2 முறியடித்துள்ளது. படத்துக்கு நேர்மறையான விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில் ரசிகர்கள் ஃபயர் எமோஜியுடன் கொண்டாடி வருகிறார்கள்