அது ஐயப்பன் பாடலே இல்ல..முழு உண்மையை மறைக்கிறார்கள்! பாடகி இசைவாணி விவகாரத்தில் பா. ரஞ்சித் விளக்கம்
Nov 26, 2024, 04:28 PM IST
கடந்த ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வரும் இசைவாணி பாடிய பாடல் அடிப்படையில் ஐயப்பன் பாடலே இல்ல. பெண்களின் பல்வேறு உரிமைகளை கோரும் வரிகளில் இருக்கும் முழு உண்மையை மறைக்கிறார்கள் என இயக்குநர் பா. ரஞ்சித் கூறியுள்ளார்.
கார்த்திகை மாதம் தொடங்கியிருக்கும் நிலையில் தென் இந்தியாவில் ஐயப்ப சீசனும் களைகட்ட தொடங்கியுள்ளது. பொதுமக்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் ஐயப்ப சாமிக்கு மாலை அணிந்து சபரிமலை சென்று சாமி தரிசனம் செல்ல தயாராகியுள்ளனர்.
இந்த நேரத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பிக்பாஸ் பிரபலமும், கானாபாடகியுமான இசைவாணி பாடிய பாடலை வைத்து சர்ச்சை கிளம்பியுள்ளது.
ஐயப்ப பக்தர்களை புண்படுத்துவதாக புகார்
"ஐ யம் சாரி ஐயப்பா” என இசைவாணி பாடியிருக்கும் இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், ஐயப்ப பக்தர்கள் உணர்வை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கண்டனங்கள் எழும்பியுள்ளன.
இந்த பாடல் இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாகவும், பிற மதங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் விதமாகவும் இந்த பாடல் அமைந்துள்ளதாகக் கூறி, ஓசூர் காவல் நிலையத்தில் சிவசேனா கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
அதேபோல், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்கத் தலைவர் செல்வராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள், "ஐயப்ப சுவாமி குறித்தும், பக்தர்கள் மேற்கொள்ளும் விரதங்கள் குறித்தும் கொச்சைப்படுத்தும் வகையில் கானா பாடகி இசைவாணி மற்றும் நீலம் கலாச்சார மையம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனங்களைப் புண்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. எனவே, கானா பாடகி இசைவாணி, நீலம் கலாச்சார மையத்தைச் சேர்ந்த இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மேட்டுப்பாளையும் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
இந்த பாடலை பாடியபோது பாடகி இசைவாணி தனது கழுத்தில் சிலுவையுடன் கூடிய டாலர் அணிந்திருந்தார் எனவும், ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் விதமாக நடந்துள்ளார் என கூறியும் எதிர்ப்புகள் கிளம்பின. அத்துடன் இசைவாணி, நீலம் பண்பாட்டு மையம், பாடல் உருவாக்கிய The Casteless Collectiveக்கு தொடர்ந்து மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன.
பா. ராஞ்சித் அறிக்கை
இதையடுத்து பாடகி இசைவாணிக்கு ஆதரவாக இயக்குநர் பா. ரஞ்சித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த 2018ஆம் ஆண்டு கேரளாவில் இருக்கும் சபரிமலைக்கு பெண்கள் செல்வது குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பாலின பாகுபாட்டை முன் வைத்து பெண்களுக்கு உரிமை மறுக்கப்பட கூடாது என்று தீர்ப்பு அளித்தது. அதை ஆதாரமாக கொண்டு மிக பெரிய விவாதமும் நடந்தது. அதை தொடர்ந்து நாட்டிலுள்ள முற்போக்கு இயக்கங்களும் பெண்களின் உரிமைக்கு ஆதரவாக நின்றன
இதே காலகட்டத்தில் நீலம் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பில் The Casteless Collection என்கிற இசைக்குழு உருவானது. சமூக படிநிலையில் நிலவும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை களைந்சு, சமூக உரிமைகளை கோரும் பாடல் வரிகளோடு The Casteless Collective பல பாடல்களை இயற்றியது. சாதிய ஏற்றத்தாழ்வுகள், இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலை, உணவு பழக்கத்தில் நிலவும் பாகுபாடு, பெண்கள் மீது செலுத்தப்படும் தீண்டாமை உள்ளிட்டை இதில் அடக்கம்.
அரசியலமைப்பு சட்டம் உறுதி செய்த உரிமையாக கோருகிற பாடல்களாகத்தான் அவை இயற்றப்பட்டன. I am sorry iyappa என்கிற பாடலும் ஆண்டாண்டு காலமாய் இங்கு பேசப்பட்டு வரும் கோயில் நுழைவு உரிமையை கோருகிற வரிகளோடு தொடங்கி, பின் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கும் பொதுவான உரிமைகளை கோரும் பாடலாக அமையப்பெற்றது. இந்த பாடலை பாடியது இசைவாணி. எழுதி இசையமைத்தது The Casteless Collective.
அவதூறு பரப்புகிறார்கள்
2018ஆம் ஆண்டு மெட்ராஸ் மேடை என்கிற இசை நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட The Casteless Collective இசைக்குழு அதற்கு பின்னால் பல்வேறு மேடைகளில் பாடல்களை பாடி வருகிறது. ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டு இசைவாணியால் பல்வேறு மேடைகளில் பாடப்பட்ட பாடலின் முதல் வரியை மட்டும் எடுத்துக்கொண்டு, கடந்த ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருகிறது ஒரு குழு. அடிப்படியைில் அது ஐயப்பன் சம்மந்தப்பட்ட பாடலே அல்ல.
பெண்களின் பல்வேறு உரிமைகளை கோரும் வரிகளில் கோயில் நுழைவை கோரும் உரிமையும் அதில் இடம்பெற்றிருந்தது. இந்த முழு உண்மையை மறைத்து, அந்த மொத்த பாடலும் குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு எதிரானதாக இருக்கிறது என சமூக வலைத்தளத்தில் பொய் செய்தியை பரப்ப முயற்சிப்பதன் மூலம் சமூக பதற்றத்தை உருவாக்கி விட முடியும் என முயல்கிறது ஒரு கூட்டம்
சமூக பொறுப்புள்ள ஏராளமான ஆளுமைகளால் அங்கீகரிக்கப்பட்டு, பாரட்டப்பட்ட குழுவாக The Casteless Collective இயங்கி வந்திருக்கிறது. வெகுஜன தொலைக்காட்சிகளில், சமூக ஊடக தளங்களில் இசைக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு இருக்கிறது. பாடகர் இசைவாணி கடந்த 2020ஆம் ஆண்டு பிபிசி அங்கீகரித்து சிறந்த 100 பெண் ஆளுமைகள் பட்டியலிலும் இடம்பிடித்து தமிழுக்கு பெருமை சேர்த்தவர்.
இசைவாணியுடன் துணை நிற்க வேண்டும்
இத்தனை பொறுப்புடனும் போற்றத்தக்க திறனுடன் முன்னேறி வரும் பாடகர் இசைவாணியை. கடந்த ஒரு வார காலமாக ஆபாசமாக சித்தரித்தும், தொலைப்பேசியில் மிரட்டியும், சமூகவலைத்தளத்தில் அவதூறுகளை பரப்பியும் வருகின்றனர். ஒரு கலைஞர் மீது வைக்கப்படும் குறி என்பது தனிநபர் சம்மந்தப்பட்டது கிடையாது. அந்த மிரட்டல் இனி உருவாகி வரவிருக்கும் கலைஞர்களுக்கும் சேர்த்தே என்பதுதான் இதிலுள்ள போராபத்து. சட்டப்படி சம்மந்தப்பட்டவர்கள் மீது ஆதாரத்துடன் புகார் கொடுக்கப்படிருக்கிறது. சென்னை மாநகர காவல்துறை உரிய நடவடிக்கைக்கு எடுக்கும் என நம்புகிறோம்.
கோயில் நுழைவு என்பது அடிப்படை உரிமை. சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மறுக்கப்பட்டவர்களை கேள்வி கேட்டுக்கொண்டே வந்ததின் விளைவாகத்தான் இன்று அவை சட்டமயமாக்கப்பட்டு இருக்கின்றன. அந்த அடிப்படை உரிமைக்கு எதிரான செயல்பாட்டை கண்டித்து தான் இந்த பாடல் உருவாக்கப்பட்டது. இந்த நோக்கத்தை புரிந்துகொண்டு செயல்படும், ஜனநாயகத்தை நம்பும் சக்திகள் ஒவ்வொருக்கும் பாடகர் இசைவாணி அவர்களுடன் துணை நிற்க கோருகிறோம்.
டாபிக்ஸ்