HBD Sasikumar:தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற கலைஞன்.. சத்தமில்லாமல் சாதித்த சாதனையாளர் நடிகர் சசிகுமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!
Sep 29, 2024, 08:22 AM IST
HBD Sasikumar: குடும்பம், காதல், சென்டிமென்ட், நகைச்சுவை, ஆக்ஷன், பாசம், அரசியல், சமூக பிரச்னை என அனைத்துக்கும் பொருத்தமான நடிப்பை வழங்கிய திறமைபெற்றவர் நடிகர் சசிகுமார்..
HBD Sasikumar: நடிகரும், இயக்குனருமான சசிகுமார் 28 செப்டம்பர் 1974 ஆம் ஆண்டில் மதுரையில் பிறந்தார். இவர் தனது பள்ளி படிப்பை கொடைக்கானலில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியில் படித்தார். பின்னர் மதுரையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கலை அறிவியல் கல்லூரியில் மேல் படிப்பை முடித்தார். இவருக்கு சினிமா துறையின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக தனது 20 ஆம் வயதில் தன் மாமா கந்தசாமியிடம் திரைப்படங்களில் பணிபுரிய தொடங்கினார். இப்படி தான் இவர் இளம் வயதிலேயே சினிமாவுக்குள் நுழைந்தார்.
தொடர்ந்து இயக்குநர் பாலாவின்'சேது', அமீரின் 'மெளனம் பேசியதே', 'ராம்' ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். 2008 ஆம் ஆண்டு வெளியாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கே பெருமை தேடித்தந்த 'சுப்பிரமணியபுரம்' திரைப்படத்தின் மூலம் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகராக என ஒரே நேரத்தில் மூன்று அவதாரம் எடுத்தவர்.
1980-களின் மதுரையை அப்படியே திரையில் மெய்பித்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார். அதோடு அரசியல் அதிகாரப் போட்டி, நட்பு, காதல், குடும்ப கெளரவம், வன்மம், துரோகம் ஆகியவற்றை வைத்து மனத்தைப் பதைபதைக்கச் செய்யும் கதையைக் கூறி ஸ்கோர் செய்திருந்தார்.
அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த 'பசங்க' சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதையும் சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் விருதையும் வென்றது. அதே ஆண்டில் சசிகுமார் தயாரித்த மற்றொரு படம் வெளியாகியது. அதுதான் 'நாடோடிகள்'. சமுத்திரக்கனி இயக்கிய இந்தப் படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடித்திருந்தார். தொடர்ந்து சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்க 'ஈசன்' என்னும் திரைப்படத்தை இயக்கினார் சசிகுமார்.
'நாடோடிகள்' வெற்றிக்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கத்தில் 'போராளி' படத்தில் மீண்டும் நடித்தார் சசிகுமார். அறிமுக இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரனின் 'சுந்தரபாண்டியன்' படத்தைத் தயாரித்து அதில் நாயகனாகவும் நடித்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு இவர் நடித்த 'சுந்தரபாண்டியன்' திரைப் படம் சிறப்பான வெற்றியை பெற்றது. பிறகு இவர் 'குட்டி புலி' படத்தில் நடித்தார். படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று இருந்தது. அடுத்தாக 2014-ல் ஒரு காதல் ஆக்ஷன் படமான 'பிரம்மன்' படத்தில் நடித்திருந்தார். ஆனால், இப்படம் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்திருந்தது.
2016-ல் பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' படத்தில் நடித்தார் சசிகுமார். இது இசைஞானி இளையராஜாவின் ஆயிரமாவது படமாகும். பாலாவின் பி ஸ்டுடியோஸ், சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தன.
தொடர்ந்து வெற்றிவேல்', 'கிடாரி', பேட்ட, 'என்னை நோக்கி பாயும் தோட்டா', 'கொம்பு வெச்ச சிங்கமடா', 'ராஜவம்சம்', 'பரமகுரு', 'எம்ஜிஆர் மகன்' எனப் பல படங்களில் நாயகனாக நடித்து தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் சசிகுமார்.
குடும்பம், காதல், சென்டிமென்ட், நகைச்சுவை, ஆக்ஷன், பாசம், அரசியல், சமூக பிரச்னை என அனைத்துக்கும் பொருத்தமான நடிப்பை வழங்கிய திறமைபெற்றவர்.
அரசியல், சமூக பிரச்னை சார்ந்த கதைகளை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய இயக்குநர், நடிகர் சசிகுமார் இன்னும் பல வெற்றிகளை குவித்து இன்னும் பெரிய சாதனைகளை நிகழ்த்த அவருடைய பிறந்தாளில் மனதார வாழ்த்துவோம்.
டாபிக்ஸ்