10 Years Of Jeeva: காதல்... கனவு... எதார்த்தம்... நிதானம்... பாகுபாடு... இயக்குநர் சுசீந்திரன் சொல்ல வந்தது என்ன?
10 Years Of Jeeva: இயக்குநர் சுசீந்திரன்- விஷ்ணு விஷால் கூட்டணியில் வெளியாகி கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்திய ஜீவா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த திரைப்படம் நம்மிடம் பேச வந்த கருத்து குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இந்திய கிரிக்கெட் அணியில் சேர வேண்டும் என கனவு காணும் ஓர் இளைஞன் என்ற ஒற்றை வரியை மையமாக வைத்து எடுத்தப் படம் ஜீவா. இந்தப் படத்தில் கனவை நேக்கி நகரும் இளைஞரைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை மிக எதார்த்தமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்துள்ளார் படத்தின் இயக்குநர் சுசீந்திரன்.
இந்தப் படத்தில் கனவுகளை துரத்திச் செல்லும் நாயகனாக நடித்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். நாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
சிறுவயது கனவுடன் வலம் வரும் ஜீவா
கதாநாயகன் ஜீவா சிறு வயதிலேயே தனது தாயை இழந்து தந்தை மாரிமுத்துவால் வளர்க்கப்பட்டு வருகிறார். ஆனால், இவரை பக்கத்து வீட்டில் வசிக்கும் சார்லி தன் சொந்த மகன் போல பாவித்து வளர்ப்பதால், ஜீவா பெரும்பாலான நேரத்தை சார்லி வீட்டிலேயே கழிக்கிறார்.
சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்டவராக உள்ளார் நாயகன். இதனால், அவர் பள்ளியிலும், பள்ளி முடித்தும் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்படி கிரிக்கெட் விளையாடி கிளம்பிக் கொண்டிருக்கையில் தான் முதல் முதலில் கதாநாயகியை பார்க்கிறார். பதின் பருவத்தில் உள்ள இவர்கள் இருவருக்கும் காதல் மதத்தின் காரணமாகவும், இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என கதாநாயகனின் கனவாலும் பிரிகிறது.
மீண்டும் கனவை நோக்கி
இந்நிலையில், கிரிக்கெட் பைத்தியம் பிடித்துள்ள தனது மகன் நல்ல அரசாங்க வேலைக்கு செல்ல வேண்டும் என நினைத்திருந்த மாரிமுத்து. ஆனால், காதல் தோல்வியால் குடிகாரனாக மாறிவரும் மகனை திசை திருப்ப மீண்டும் கிரிக்கெட் விளையாடுமாறு ஊக்கப்படுத்துகிறார்.
இங்கு தான் ஆரம்பிக்கிறது இயக்குநர் சுசீந்திரனின் கதை. எந்த பின்புலமும் இல்லாமல் சாதாரண நடுத்தர வர்கத்தைச் சேர்ந்த ஒருவன் கனவை நோக்கி சென்றால் என்ன நடக்கும் என்பதையும், அவர் சந்திக்கும் அரசியலையும் நேரடியாகவும் இலைமறைக் காயாகவும் கூறியிருப்பார்.
அரசியல் சூழலில் சிக்கும் ஜீவா
காதல் பிரிவுக்குப் பின் தீவிர பயிற்சியினால் ரஞ்சி கோப்பை பயிற்சிக்கு தயாராகின்றனர் ஜீவாவும் அவரது நண்பரும். ஆனால், இருவரும் மதம் மற்றும் சாதி அடிப்படையில் தொடர்ந்து புறம் தள்ளப்படுகின்றனர்.
இந்நிலையில், மனமுடைந்த ஜீவாவின் நண்பன், தற்கொலை செய்து கொள்கிறார். இதனால், மீண்டும் ஜீவாவிற்கு அவரது கனவு கண் முன்னே அவரது சிதைந்து போனது தெரிந்தது.
இது ஒருபுறம் இருக்க, ஜீவாவின் லட்சியம் நிறைவேறியதா இல்லையா என்பதை பல்வேறு அரசியல் வசனங்களுடனும் காட்சிகளுடனும் கட்டமைத்திருப்பார் இயக்குநர் சுசீந்திரன்.
கவனம் ஈர்த்த ஜீவா
இந்த படத்தில் டி. இமான் இசையில் வெளியான ஒவ்வொன்றாய் திருடுகிறாய், ஒருத்தி மேலே மீண்டும் பாடல்கள் பெரிதாக கவனம் ஈர்த்தது. இதுவரை விளையாட்டை மையப்படுத்தி பல திரைப்படங்கள் தமிழில் வந்திருப்பினும், விளையாட்டு மற்றும் அதில் நடைபெறும் அரசியலை முழுவதுமாக நேரடியாக எந்தப் படமும் பேசாததால், இது தமிழ் ரசிகர்களுக்கு முக்கிய படமாகவே அமைந்தது. அந்த வகையில், தமிழ் சினிமாவில் விளையாட்டு தொடர்பாக வெளிவந்த படங்களில் இது தனி இடம் பிடித்து தற்போது 10 ஆண்டுகளைக் கடந்துள்ளது.
நன்றி தெரிவித்த இயக்குநர்
இதுகுறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் சுசீந்திரன், ஜீவா திரைப்படம் வெளியாகி, இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவானதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தின் நடிகர்கள், தயாரிப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சுசீந்திரன் தேசிய விருது வென்ற அழகர்சாமியின் குதிரை, வெண்ணிலா கபடிக் குழு, வெண்ணிலா கபடிக் குழு 2, நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர், ராஜபாட்டை, கென்னடி கிளப், சாம்பியன், பாயும் புலி, பாண்டிய நாடு, மாவீரன் கிட்டு, ஈஸ்வரன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
டாபிக்ஸ்