பாற்கடலை கடைந்து சமுத்திரராஜன் பிடியில் சிக்கியிருக்கும் லட்சுமியை மீட்பாரா நாரயணர்? லட்சுமி நாராயணா நமோ நமஹ இந்த வாரம்
Dec 22, 2024, 04:04 PM IST
நாராயணரை பழிவாங்க காத்திருக்கும் சமுத்திரராஜன் மற்றும் அவரது மனைவியின் சூழ்ச்சி வலையில் சிக்கிக்கொள்கிறார் லட்சுமி. பாற்கடலை கடைந்து லட்சுமியை மீட்க நாராயணர் போராடும் காட்சிகளுடன் லட்சுமி நாராயணா நமோ நமஹ வரும் வாரம் எபிசோடு காட்சிகள் அமையவுள்ளன
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், மிகப் பிரமாண்டமாகவும் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் மிகுந்த சுவாரஸ்யத்தோடும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது ”லட்சுமி நாராயணா நமோ நமஹ” ஆன்மிகப் புராண தொடர். இந்த வாரம் வரும் வாரம் என்ன நடக்க போகிறது என்பதை பார்க்கலாம்.
அசுரனை வதம் செய்ய முடியாமல் திணறும் நாரயணர்
அசுரன் ஹயக்ரீவன் நாராயணரை பழிவாங்க நாராயணர் தோற்றுவித்த புது உலகத்தினுள்ளே நுழைகிறான். அங்கு சிவன் மற்றும் தேவர்கள் முன்னிலையில் நாராயணரை யுத்தத்துக்கு அழைக்கிறான். லட்சுமியை எனக்கானவள் என்று கூறி நாராயணரை ஏளனப்படுத்துகிறான். லட்சுமிக்கு, அசுரனின் வார்த்தையை கேட்டதும் ஆத்திரம் பீறிட்டு வருகிறது. நாராயணரிடம் அசுரன் ஹயக்ரீவனை வதம் செய்யுங்கள் என்று வேண்டுகிறார்.
நாராயணர் அம்பு தொடுத்து ஹயக்ரீவனின் தலையை கொய்து எறிகிறார். ஆனால் ஹயக்ரீவனின் தலை தானாக பழையாபடி கழுத்துடன் வந்து இணைந்து கொள்கிறது. நாராயணர் அசுரனை வதம் செய்ய முடியாமல் திணறுகிறார். அப்போது சிவன் நாராயணரிடம் ”ஹயக்ரீவன் ஆதிசக்தியிடம் வரம் வாங்கி வந்தவன் அவனை அவ்வளவு சீக்கிரத்தில் அழிக்க முடியாது” என்கிறார். அந்த சமயத்தில் ஹயக்ரீவன் அம்பு எய்து நாரயணரின் தலையை கொய்து விடுகின்றான். உடனே தலையில்லாத நாராயணரை பார்த்து கேலியாக சிரித்தபடி லட்சுமியிடம் ”எனக்கு என்னால் மட்டுமே அழிவு வேறு எவராலும் என்னை அழிக்க முடியாத. இந்த சவத்தை விட்டு என்னோடு வந்துவிடு” என்று கூறுகிறான்.
லட்சுமியை இழுத்துச் செல்ல, ஹயக்ரீவன் அவரை நோக்கி நடந்து நெருங்குகிறான். லட்சுமி அழுது கண்கலங்குகிறார். சிவன் மற்றும் தேவர்கள் எதுவும் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். அப்போது நாராயணர் குதிரைத்தலை கொண்ட ஹயக்ரீவ அவதாரம் எடுத்து அசுரன் ஹயக்ரீவனை அழிக்கிறார். லட்சுமியைக் காப்பாற்றுகிறார்.
வீரலட்சுமி அவதாரம் எடுக்கும் லட்சுமி
உடனே லட்சுமி வீரலட்சுமி அவதாரம் எடுத்து மொத்த அசுரகுலத்தையும் அழித்தொழிக்க புறப்பட்டு செல்கிறார். நாராயணர் அது தவறு என்று அறிவுரை சொல்லி லட்சுமியை திருப்பி அழைத்து வருகிறார். லட்சுமிக்கு புடவை மடித்துக் கொடுத்து ஆபரணங்கள் சூட்டி மகிழ்கிறார். அப்போது துர்வாசமுனிவர் இந்திரனுக்கு விட்ட சாபத்தினால் மொத்த தேவர்குலமும் பாதிக்கிறது. நாராயணரும் லட்சுமியும் தங்கள் அலங்காரம் கலைந்து செழிப்பு மங்குகின்றனர். செழிப்புக்கு அதிபதியான லட்சுமி நாராயணரை வீட்டு நீங்கும் நிலை ஏற்படுகிறது. நாராயணரும் லட்சுமியும் துயரத்துடன் பிரிகின்றனர்.
தனித்து நிற்கும் லட்சுமியை சமுத்திரராஜனும் அவரது மனைவியும் தங்களோடு அழைத்துச் சென்று மகளாக பாவித்து தங்க வைக்கின்றனர். அப்போது நாராயணர் பிரம்மா மூலம் சமுத்திரராஜன் தன்னை பழிவாங்கவே லட்சுமியை கடலுக்கு நயவஞ்சகமாக அழைத்துப் போயிருப்பதை அறிகிறார்.
நாராயணர் சமுத்திரராஜன் இடையே போட்டி
சமுத்திரராஜனிடம் சென்று லட்சுமியை விடுவிக்கும்படி கேட்கிறார். சமுத்திரஜாரன் முடியாது என்று கூறி விடுகிறார். உடனே நாராயணர் ”பாற்கடலை கடைந்து நான் என் லட்சுமியை மீட்பேன்” என்று சபதமிடுகிறார். அது உங்களால் முடியாது என்று சமுத்திரராஜன் எதிர்த்து சபதமிடுகிறார். நாராயணரா சமுத்திரராஜனா என்கிற போட்டி தொடங்குகிறது.
சமுத்திரராஜன் லட்சுமிக்கு பாதாளராஜனை மணமகனாக பேசி முடிக்கின்றார். பாதாளராஜனும் லட்சுமியை தங்கள் லோகம் அழைத்துப் போக வருகிறார். லட்சுமி பாதாளராஜனிடம் இருந்து தப்பிக்க பெரிதாக போராடி சண்டையிட வேண்டியிருக்கிறது. லட்சுமி ”நான் நாராயணரின் மனைவி என்னை அடைய நினக்காதே…அழிந்து போவாய் “ என்று சொல்கிறார். ஆனால் பாதாளராஜன் செவிசாய்க்க மறுக்கிறான். ஆபத்தில் சிக்கிக்கொண்ட லட்சுமியின் நிலை என்ன? நாராயணர் பாற்கடலை கடைந்து லட்சுமியை மீட்டாரா? இப்படி பல திருப்பங்களுடன் இந்த வார லட்சுமி நாராயணா நமோ நமஹ தொடர் வரும் வாரம் விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகவுள்ளது.