செய்தியாளர்களை விரட்டி விரட்டி அடித்த பிரபல நடிகர் மோகன் பாபு மருத்துவமனையில் அனுமதி.. அவருக்கு என்ன ஆச்சு? இதோ விவரம்!
Dec 11, 2024, 01:32 PM IST
நடிகர் மோகன் பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பழம்பெரும் நடிகர் மோகன் பாபு தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். மோகன் பாபுவுக்கு தற்போது 72 வயது ஆகிறது.இவர் தெலுங்கு, தமிழ் உள்பட பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்திருப்பார்.
இந்நிலையில் நடிகர் மோகன்பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. உள்ளூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை நடைப்பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
சொத்து பிரச்சனை
முன்னதாக, நடிகர் மோகன் பாபுவுக்கும், அவரது மகன் மனோஜ் மஞ்சுவுக்கு இடையே சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களின் மைக்கை பிடுங்கி நடிகர் மோகன் பாபு விரட்டி விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மோகன் பாபுவுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் தான் மகன் மனோஜ் மஞ்சு மற்றும் நடிகர் மோகன் பாபு இடையே சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நடிகர் மோகன் பாபு, அவருடைய மகன் மஞ்ச் மனோஜ் ஆகியோரிடையே சொத்து, பாதுகாப்பு, குடும்ப கவுரவம் ஆகியவை தொடர்பாக பெரும் பிரச்சனை ஏற்பட்டு இரண்டு பேரும் மாறி மாறி காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.
புகார் மீது விசாரணை
மோகன் பாபு தனது புகாரில் கூறியதாவது, ”மனோஜ் சில சமூக விரோதிகளுடன் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை ரங்காரெட்டி மாவட்டத்தில் ஐதராபாத் அருகே ஜல்பல்லியில் தனது வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்தார். எனக்கும், எனது சொத்துக்களுக்கும் பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளதால் நான் அஞ்சுகிறேன். எனக்கும், என் வீட்டில் இருப்பவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள்” என்று மோகன் பாபு தெரிவித்துள்ளார்.
அந்த புகார் மீது தற்போது விசாரணை நடைபெறுகிறது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான தகவல்கள் வெளியாகவில்லை. எனவே இது பற்றி செய்தி சேகரிப்பதற்காக செய்தியாளர்கள் ஹைதராபாத்தில் உள்ள மோகன் பாபு வீட்டிற்கு சென்றனர். மூத்த நடிகர்,அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர் ஆகியவை உள்ளிட்ட பன்முகத்தன்மை கொண்ட மோகன் பாபுவும், அவருடைய பாதுகாவலர்களும் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை கொடூரமாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் செய்தியாளர்கள் வைத்திருந்த மைக்கை பிடுங்கி அந்த மைக் மூலம் செய்தியாளர்களை மோகன் பாபு தாக்கியது குறிப்பிடத்தக்கது.
மோகன் பாபு மருத்துவமனையில் அனுமதி
இதற்கிடையே நடிகர் மோகன் பாபுவின் செயலுக்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மோகன் பாபு தனது செயலுக்கு பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று இரவில் பத்திரிகையாளர்கள் வீட்டு முன்பு கோஷமிட்டனர். இந்த சம்பவத்தால் மோகன் பாபு வீட்டில் இரவு முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இதுதொடர்பாக அவர் மீது 118 பிஎன்எஸ் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், உயர் ரத்த அழுத்தம் காரணமாக மோகன் பாபு இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்