‘விஜய் கூத்தாடி என்றால்.. உதயநிதி யார்? இதை தான் அம்பேத்கர் கேட்கிறார்’ ராஜ் மோகன் அட்டாக்!
‘ஆதவ் ஆர்ஜூனா யார்? அவர் முந்தா நாள் வந்தவரு, அவர் எப்படி விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆகலாமா? என்று கேட்கிறா்கள். சரி தான், அப்படி தான் கேட்க வேண்டும். அப்போ, முந்தா நேத்து வந்த உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராகலாமா? எப்போது எம்.எல்.ஏ., ஆனார்? எப்போ அமைச்சர் ஆனார்?’
பிரபல மேடை பேச்சாளர் ராஜ்மோகன், புதியதலைமுறை தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும் போது, விஜய்க்கு எதிரான கருத்துக்களுக்கு பதிலடி அளித்தார். இதோ அவருடைய பேச்சு:
‘‘புத்தக வெளியீட்டு விழாவை, விஜய்க்கான மேடை என்று கூறுகிறார்கள். நான் சொல்வேன், அது அம்பேத்கருக்கான மேடை. எந்த புத்தக வெளியீட்டு விழாவையும், அதன் நோக்கத்தை தான் பேச வேண்டும். இந்த நூலின் நோக்கமே, தலித் அல்லாதவர்களிடம் அம்பேத்கரை கொண்டு சேர்க்க வேண்டும், ஜாதி தலைவர் அல்ல அம்பேத்கர், சாதித்த தலைவர் என்பதை நிறுவ வேண்டும் என்பது தான். எத்தனையோ மாற்று கருத்து, மாற்று எண்ணம் கொண்ட எழுத்தாளர்கள் சேர்ந்து தான், அந்த புத்தகத்தை உருவாக்கியுள்ளனர். அவர்களும் அந்த அரங்கத்தில் தான் இருந்தனர்.
உதயநிதிக்கு ஒரு நியாயம்.. ஆதவ் அர்ஜூனாவுக்கு?
நேற்று நடந்தது, சமீபத்தில் தமிழகத்தில் எடுக்கப்பட்ட ஆகப்பெரிய அம்பேத்கரிய விழா. அதில் மாற்றுக் கருத்து கிடையாது. இரண்டாவது, ஆதவ் ஆர்ஜூனா யார்? அவர் முந்தா நாள் வந்தவரு, அவர் எப்படி விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆகலாமா? என்று கேட்கிறா்கள். சரி தான், அப்படி தான் கேட்க வேண்டும். அப்போ, முந்தா நேத்து வந்த உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராகலாமா? எப்போது எம்.எல்.ஏ., ஆனார்? எப்போ அமைச்சர் ஆனார்? எப்படி துணை முதல்வர் ஆனார்? இந்த கேள்வியை தான், அம்பேத்கர் கேட்கச் சொல்கிறார்.
அவர் சொல்வது என்ன? என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க, ஆனால், அதிகாரத்தை நோக்கி கேள்வி கேளுங்கள் என்கிறார். நான் ஒரே ஒரு கேள்வியை இந்த அறிவார்ந்த மன்றத்தில் வைக்கிறேன், ‘எத்தனை ஆண்டுகளாக திமுக தோழர்கள் அதிகாரத்தில் இருக்கிறீர்கள்? எத்தனை தலித் உறுப்பினர்களை சபாநாயகர் ஆக்கியிருக்கிறார்கள்? அவர்கள் நினைத்தால் ஆக்க முடியாதா?மற்றவர்களை விட அவர்களை கேள்வி கேட்க, உரிமை இருக்கிறது. எது அவர்களை தடுக்கிறது?
தலித் அல்லாத தொகுதியில், எத்தனை தலித்துகளுக்கு திமுக வாய்ப்பு வழங்கியிருக்கிறது? அவர்களை எது தடுக்கிறது? அவர்கள் நினைத்தால் ஒருவரை நிறுத்தி ஜெயிக்க வைக்க முடியாதா? தடுப்பது, உட்கட்சியில் இருக்கும் ஜாதி அரசியல் தானே. இதையெல்லாம் பேசியதால் தான், நூல் வெளியீட்டு விழாவை, முழுக்க முழுக்க அம்பேத்கரிய விழா என்கிறேன்.
மன்னராட்சி தான் பேசு பொருள்
ஆதவ் அர்ஜூனா யாரு? அவங்க மாமனார் யா? அவர் ஜாதி என்ன? என்று பேசுவதை, நான் அறிவார்ந்த தர்க்கமாக பார்க்கவில்லை. எதிர்வினை, அவமதிப்பு, அச்சுறுத்தலாக தான் இங்கு இருக்கிறது. இது இரண்டுமே அம்பேத்கருக்கும் நடந்தது. ஏன் இந்த விழா இவ்வளவு பரபரப்பா ஆச்சு? யாரும் இதுவரை கேட்காத, ஒரு வார்த்தையை கூறிவிட்டார்கள். அது தான் மன்னராட்சி.
காங்கிரஸ் கட்சியில் கூட நடுவில் மன்மோகன் சிங் வந்தார். மற்ற பிரதான மாநில, தேசிய கட்சிகளில் கூட அது மாறியிருக்கிறது. அப்படி ஏதாவது ஒன்றை மாற்றுங்களேன். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயஆட்சி. அது நல்லது தான். நமக்கான உரிமை வேண்டும் தான். மாநிலத்திலும் கூட்டாட்சி கொண்டு வாங்க. அது மாநில உரிமையை எப்படி பறிக்கும்? கூட்டணி கட்சிகளுக்கு ஏன் உரிமை இருக்க கூடாது. மற்ற மாநிலங்களில் துணை முதல்வர் தர்றாங்க, அமைச்சரவை தர்றாங்க. இங்கே மட்டும் தான் சிறந்த கொள்கை என கூட்டணி வைத்து, சீட் ஷேர் தருகிறார்கள். ஓடி ஓடி உழைத்த கூட்டணி கட்சியினருக்கு பவரில் ஷேர் தாங்களேன்? இதுவரை யாரும் பேசவில்லை. நேற்று பேசிவிட்டார்கள். இனி இதை தவிர்க்கவே முடியாது.
உதயநிதி கூத்தாடி இல்லையா?
புதிய தலைமுறை விவாதத்தில் விசிக எம்.எல்.ஏ., ஆளூர் ஷாநவாஸ் பேசும் போது, விஜய்யை கூத்தாடிக்கு என்ன உரிமை இருக்கு என்று கேட்கிறார். எதுக்கு இவ்வளவு பதட்டமாக்க வேண்டும்? மாற்ற கருத்திலிருந்து பாசிட்டிவ் தான் எடுக்க வேண்டும். கூத்தாடுவது இழிவான தொழிலா? அவர் கூத்தாடி என்றால், ‘ஜெயலலிதா அம்மா எங்களை நல்ல விதமா நடத்துனார்’ என்று கூறினாரே ஷாநவாஸ், அப்போ ஜெயலலிதா அம்மா கூத்தாடியா? உதயநிதி ஸ்டாலின் கூத்தாடியா இல்லையா? ஒரு வார்த்தை எவ்வளவு பெரிய வீரியத்தை ஏற்படுத்துகிறது பாருங்க.
சினிமா செய்திகள் பார்ப்பதில்லை என்று உதயநிதி சிறுமை படுத்துகிறார். இன்னொருவர் தற்குறி என்கிறார். இப்படி சொல்லி அதை கடந்து செல்ல முயற்சிக்கலாம். ஆனால், இரண்டு ஆண்டுகளில் நடக்கும் தேர்தலில், புதிய வாக்காளர்கள் , பெண்கள் அவங்க அமைதியாக தீர்மானிக்கிறார்கள்,’’ என்று அந்த விவாதத்தில் ராஜ் மோகன் பேசியிருக்கிறார்.
டாபிக்ஸ்