Lyca Kovai Kings: இந்த சீஸன் டிஎன்பிஎல்லில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த லைகா கோவை கிங்ஸ்
Jul 14, 2024, 12:28 PM IST
TNPL 2024: இளம் வீரர் சச்சினின் அபாரமான ஆட்டத்தால் நெல்லை அணி முதல் தோல்வியை சந்தித்தது
ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 சீஸனில் கோயம்புத்தூரிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் டபுள் ஹெட்டரின் 2வது போட்டியில் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸை வீழ்த்தி இந்த சீஸனில் தொடர்ச்சியாக 3வது வெற்றியைப் பதிவு செய்தது. அதோடு தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் தொடர்ச்சியாக 10வது வெற்றியைப் பெற்று சாதனைப் படைத்தது.
முன்னதாக, இந்த சீஸனில் தோல்வியே சந்திக்காத இரு அணிகளான நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் கோவை மண்ணில் இன்று மோதினர். அதில் கூடுதல் சிறப்பாக இந்திய டி20ஐ அணிக்கு சமீபத்தில் அறிமுகமான தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் 2024 டி.என்.பி.எல்லில் முதன்முறையாக இன்று களமிறங்கினர். டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் கேப்டன் ஷாருக் கான் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த நெல்லை ராயல் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.
நெல்லை அணி
நெல்லை அணி ஒரு கட்டத்தில் 200 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் மிடில் ஓவர்களில் கோவை கேப்டன் ஷாருக் கான் மற்றும் முகமது இணைந்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அந்த அணியை 167 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர். நெல்லை அணி சார்பில் அதிகபட்சமாக அவர்களது கேப்டன் அருண் கார்த்திக் 38 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தாலும் சோனு யாதவ் இறுதிக்கட்டத்தில் ஆட்டமிழக்காமல் 5 சிக்ஸர்களுடன்
வெறும் 26 பந்துகளில் 43* ரன்கள் விளாசியதால் நெல்லையின் ரன் கணக்கு வெகுவாக உயர்ந்தது.
இந்த சீஸனில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்வதற்கு 168 என்ற இலக்கை நோக்கி லைகா கோவை கிங்ஸ் களமிறங்கியது. இந்த சீஸனில் முதன்முறையாக களமிறங்கிய இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சாய் சுதர்சன் வெறும் 8 ரன்களில் இளம் வீரர் இமானுவேல் செரியனிடம் வேகத்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.
மழையால் தடைபட்ட ஆட்டம்
மழையின் காரணமாக ஒரு சில முறை ஆட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடர்ந்தாலும் கோவை அணியின் ரன் மழை நிற்காமல் தொடர்ந்தது. குறிப்பாக 2வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த இளம் வீரர் சச்சின் மற்றும் அனுபவ வீரர் சுரேஷ் குமார் இணைந்து 100 ரன்களுக்கும் மேலாக பார்ட்னர்ஷிப்பை அமைத்து. கோவையின் வெற்றியை உறுதி செய்தனர். இந்தப் போட்டியில் பி சச்சின் டி.என்.பி.எல்லில் தனது 4வது அரைசதத்தைப் பதிவு செய்ததோடு இந்த சீஸனில் அதிக ரன்கள் எடுத்த வீரருக்கான பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். சச்சினுடன் இணைந்து விளையாடிய ஜெ. சுரேஷ் குமார் தன் பங்கிற்கு அவரும் அரைசதம் விளாசினார்
பி சச்சின் சிறப்பாக விளையாடி 48 பந்துகளில் 76 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக உடனடியாக பெவிலியன் திரும்பினார். இறுதியில் லைகா கோவை கிங்ஸ் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸை வீழ்த்தியது. இதன் மூலம் நெல்லை இந்த சீஸனில் தங்களின் முதல் தோல்வியைப் பதிவு செய்ய கோவை அணி தொடர்ச்சியாக 3வது வெற்றியைப் பதிவு செய்தது மற்றும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் தொடர்ச்சியாக 12வது வெற்றி இதுவாகும்.
தற்போது 2024 டி.என்.பி.எல்லின் புள்ளிகள் பட்டியலில் 3 வெற்றிகளுடன் லைகா கோவை கிங்ஸ் முதலிடத்தைப் பிடித்தது.
சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் லைகா கோவை கிங்ஸ் கேப்டன் ஷாருக் கான் இந்த சீஸனின் முதலிரண்டு போட்டிகளை நாங்கள் கடுமையாக போராடி வென்றோம். ஆனால் இனிமேல் எங்களின் முழுத்திறமையை வெளிப்படுத்தி மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று கூறியதை கோவை லெக்கில் விளையாடிய முதல் போட்டியிலேயே அவர் நிரூபித்துக் காட்டினார்.
தோல்விக்குப்பின் பேசிய நெல்லை ராயல் கிங்ஸ் கேப்டன் அருண் கார்த்திக் பேசுகையில், “மழை பெய்ததால் பந்துவீச்சாளர்கள் பந்துவீச மிகவும் கஷ்டப்பட்டனர். அதோடு பேட்டிங்கில் எங்களது ஷாட் தேர்வு தவறாக இருந்தது. அதோடு எதிரணி கேப்டன் ஷாருக் அவரது பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்தினார். இந்தப் போட்டியில் தோற்றாலும் இனிவரும் போட்டிகளில் வெற்றி பெறுவோம்”, என்று தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற பி. சச்சின் பேசுகையில், “ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் சென்று வெற்றி பெறவைக்க வேண்டுமென்று நாங்கள் திட்டம் தீட்டினோம். எனக்கு கொடுத்த பொறுப்பை இந்தப் போட்டியில் நிறைவேற்றியதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்”, என்று சச்சின் தெரிவித்தார்.
வெற்றிக்குப்பின் பேசிய லைகா கோவை கிங்ஸ் கேப்டன் ஷாருக் கான், “தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளித்தாலும். நாங்கள் ஒரு நேரத்தில் ஒரு போட்டியில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். அதோடு சொந்த மண்ணில் வெற்றி பெறுவது எப்போதும் கூடுதல் மகிழ்ச்சியளிக்கும்”, என்று ஷாருக் தெரிவித்தார்.
இன்றையப் போட்டிகள்
முதல் போட்டி:
SKM சேலம் ஸ்பார்ட்டன்ஸ் vs திருச்சி கிராண்ட் சோழாஸ்
நேரம்: பிற்பகல் 3.15 மணிக்கு
இடம்: கோயம்புத்தூரிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானம்
2வது போட்டி
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs திண்டுக்கல் டிராகன்ஸ்
நேரம்: இரவு 7.15 மணிக்கு
இடம்: கோயம்புத்தூரிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானம்
டாபிக்ஸ்