GT vs RCB Innings Break: குஜராத் மண்ணில் ஓங்கி அடித்த தமிழர்கள் சாய் சுதர்சன், ஷாருக்கான்! ஆர்சிபிக்கு சவால்-sai sudharsan sharukh khan partnerships helps gujarat titans to score 200 runs against royal challengers bengaluru - HT Tamil ,மட்டைப்பந்து செய்திகள்
தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Gt Vs Rcb Innings Break: குஜராத் மண்ணில் ஓங்கி அடித்த தமிழர்கள் சாய் சுதர்சன், ஷாருக்கான்! ஆர்சிபிக்கு சவால்

GT vs RCB Innings Break: குஜராத் மண்ணில் ஓங்கி அடித்த தமிழர்கள் சாய் சுதர்சன், ஷாருக்கான்! ஆர்சிபிக்கு சவால்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 28, 2024 05:46 PM IST

தமிழர்களான சாய் சுதர்சன் - ஷாருக்கான் இணைந்து 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பார்ம் இல்லாமல் தவித்து வந்த ஷாருக்கான் புரொமோட் செய்யப்பட்ட நான்காவது பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்ட நிலையில் அதை பயன்படுத்திக் கொண்ட அவர் ஐபிஎல்லில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷாருக்கான் - சாய் சுதர்சன்
ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷாருக்கான் - சாய் சுதர்சன் (PTI)

இந்த சீசனில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் மோதலாக இந்த போட்டி அமைந்துள்ளது. இந்த போட்டியில் குஜராத் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆர்சிபியில், லாக்கி பெர்குசனுக்கு பதிலாக கிளென் மேக்ஸ்வெல் அணிக்கு திரும்பியுள்ளார்.

ஆர்சிபி பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டூ பிளெசிஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த குஜராத் டைட்ன்ஸ் 20 ஓவரில் விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 84, ஷாருக்கான் 58 ரன்கள் அடித்தனர்.

ஆர்சிபி அணி ஸ்விப்னிஸ் சிங், முகமது சிராஜ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

மோசமான தொடக்கம்

குஜராத் டைட்ன்ஸ் ஓபனர்கள் விருத்திமான சாஹா 5, சுப்மன் கில் 16 ரன்களில் அவுட்டாகி அணிக்கு மோசமான தொடக்கத்தை தந்தனர். பார்ம் இல்லாமல் தவித்து வரும் கில், ஒரு நாள் போட்டி போன்ற நிதானமான இன்னிங்ஸை விளையாடினார். 19 பந்துகளில் எதிர்கொண்டு ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார்.

கலக்கிய தமிழர்கள்

பினிஷராக பேட்டிங்கில் இறங்கி விரைவாக அவுட்டாகி வந்த தமிழ்நாட்டை சேர்ந்த வீரரான ஷாருக்கான் இந்த போட்டியில் நான்காவது பேட்ஸ்மேனாக புரொமோட் செய்யப்பட்டார். மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய மற்றொரு தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் இவருடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

இருவரும் அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்து பவுண்டரி, சிக்ஸர்கள் அடித்தனர். சிறப்பாக பேட் செய்த சாய் சுதர்சன், ஷாருக்கான் ஆகியோர் அரைசதத்தை பூர்த்தி செய்தனர்.

ஷாருக்கானுக்கு இது முதல் ஐபிஎல் அரைசதமாக அமைந்தது. 24 பந்துகளில் அவர் 50 ரன்கள் அடித்து, முக்கியமான நேரத்தில் அணிக்கு பங்களிப்பை தந்துள்ளார்.

5 சிக்ஸர்கள், 3 பவுண்டரி என அதிரடியாக விளையாடி வந்த ஷாருக்கான் 30 பந்துகளில் 58 ரன்கள் அடித்து முகமது சிராஜ் பந்தில் போல்டு ஆகி வெளியேறினார். சாய் சுதர்சன் - ஷாருக்கான் இணைந்து 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

மில்லர் பினிஷ்

கடைசி கட்டத்தில் பேட் செய்ய வந்த மில்லர் தனது பங்குக்கு கொஞ்சம் அதிரடி காட்டி 19 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த சாய் சுதர்சன் 49 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். தனது இன்னிங்ஸில் 8 பவுண்டரி, 4 சிக்ஸர்களை அடித்தார்.

ஆர்சிபி பவுலர்களில் கேமரூன் க்ரீன் 3 ஓவர்களில் 42, கரன் ஷர்மா 3 ஓவர்களில் 38 என ரன்களை வாரி வழங்கினர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.