HT Yatra: மூத்த பிள்ளையார் கோயில்.. கும்பகோணத்தின் முதல் பிள்ளையார்..பக்தனை சோதித்த விநாயகர்
Mar 17, 2024, 06:00 AM IST
Karumbayiram Pillaiyar Temple: பல சிறப்பான தலங்களில் அமர்ந்திருந்து பக்தர்களுக்கு விநாயகர் அருள் பாலித்து வருகிறார். அப்படிப்பட்ட சிறப்புமிக்க கோயில்களில் ஒன்றுதான் கும்பகோணத்தில் உள்ள மூத்த பிள்ளையாராக இருக்கக்கூடிய கரும்பாயிரம் பிள்ளையார் கோயில்.
சமீபத்திய புகைப்படம்
உலகம் முழுவதும் கோயில் கொண்டு பக்தர்களை காத்து வருகின்றார். ஏழை எளிய மக்களின் பிரதான கடவுளாக விநாயகர் விளங்கி வருகின்றார். சாதாரண மரத்தடியில் இருக்கக்கூடிய எளிமையான கடவுளாக திகழ்ந்து வரக்கூடியவர் விநாயகர்.
எந்த காரியத்தை தொடங்கினாலும் விநாயகரின் அருள் இல்லாமல் தொடங்கக்கூடாது என்பது அனைவருடைய நம்பிக்கையாகவும் இருந்து வருகிறது. எந்த கோயிலுக்கு சென்றாலும் முதலில் வழங்கிச் செல்ல வேண்டிய கடவுளாக வாசலிலேயே அமர்ந்திருக்க கூடியவர் விநாயகர்.
பல சிறப்பான தலங்களில் அமர்ந்திருந்து பக்தர்களுக்கு விநாயகர் அருள் பாலித்து வருகிறார். அப்படிப்பட்ட சிறப்புமிக்க கோவில்களில் ஒன்றுதான் கும்பகோணத்தில் அமைந்துள்ள கரும்பாயிரம் பிள்ளையார் கோயில்.
கோயில் நகரமாக விளங்கக்கூடிய கும்பகோணத்தில் மூத்த பிள்ளையாராக இந்த கரும்பாயிரம் பிள்ளையார் கோயில் விளங்கி வருகின்றது. கும்பகோணத்தில் இருக்கக்கூடிய பிரதான கும்பேஸ்வரர் திருக்கோயிலுக்கு அருகில் கரும்பாயிரம் பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது.
தல வரலாறு
ஒருமுறை வணிகர் ஒருவர் தனது மாட்டு வண்டியில் கட்டுக்கட்டுகளாக கரும்புகளை வைத்துக்கொண்டு பயணம் செய்துள்ளார். தற்போது கரும்பாயிரம் பிள்ளையார் கோயில் இருக்கக்கூடிய எல்லை பகுதியில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது அவருக்கு உறக்கம் வந்துள்ளது.
உடனே வண்டியை நிறுத்தி விட்டு அருகே இருந்த குளத்தில் முகத்தை கழுவி விட்டு கரைக்குத் திரும்பி வண்டியில் ஏறி உள்ளார். அப்போது வண்டிக்கு அருகே ஒரு சிறுவன் வண்டிகளில் இருக்கக்கூடிய கரும்புகளை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அந்த சிறுவனிடம் வணிகர் என்னவென்று கேட்கும் பொழுது, எனக்கு பசி தாங்க முடியவில்லை ஒரு கரும்பு கொடுங்கள் என சிறுவன் கேட்டுள்ளார். சற்று நேரம் சிந்தித்துப் பார்த்த மனிதர் அவருக்கு தருவதற்கு மனம் இல்லாத காரணத்தினால் மறுத்துவிட்டு அங்கிருந்து வண்டியை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.
வண்டியின் பின்னே விடாமல் அந்த சிறுவன் வந்து கொண்டிருந்தார். மீண்டும் வணிகர் என்னவென்று கேட்கும் பொழுது எனக்கு பசிக்கின்றது கரும்பு கொடுங்கள் என கேட்டுள்ளார் அந்த சிறுவன். தர மறுத்த வணிகர் வண்டியை விடாமல் ஓட்டிக்கொண்டே இருந்தார்.
அந்த சிறுவன் வண்டியின் பின்னே சென்றதை கண்ட மற்றவர்கள் பசிக்காக ஒரு கரும்பு தானே கேட்கிறான் கொடுத்தால் என்ன என அனைவரும் வணிகரிடம் கூறியுள்ளனர். நான் வைத்திருக்கும் கரும்புகள் அனைத்தும் நாணல் போல குச்சிகளாக இருக்கின்றது கடித்துச் சாப்பிட்டால் உப்பு சுவை அதிகமாக இருக்கும். இதனை ஆலைக்கு கொண்டு சேர்த்தால் மட்டுமே இனிக்கும் என பொய் கூறினார்.
பெரியதாக கரும்புகளை வைத்துக்கொண்டு நாணல் பூச்சிகள் போல் இருக்கின்றது எனக் கூறுகிறாய் அது உனக்கு உதவாமல் போகட்டும் எனக் கூறி அந்த சிறுவன் அருகில் இருந்த கோயிலுக்குள் சென்று மறைந்து விட்டார். கரும்பு ஆலைக்கு அந்த வணிகர் கரும்புகளை எடுத்துச் சென்றார்.
கரும்பு ஆலையின் உரிமையாளர் கரும்புகள் எனக்கூறி நாணல்களை எடுத்து வந்திருக்கிறாய் என அந்த வணிகரை கோபத்தில் கடிந்து கொண்டார். வணிகர் உடனே சென்று வண்டியில் இருந்த கரும்புகளை பார்த்தபோது அது நாணல் குச்சிகளாக இருந்துள்ளது. உடனே வருத்தத்தோடு வீடு திரும்பி வந்து உறங்கி விட்டார்.
அப்போது அவருடைய கனவில் அந்த சிறுவன் தோன்றி பசிக்காக ஒரு கரும்பு கேட்ட பொழுது நாணல் குச்சிகள் எனக் கூறி என்னையே ஏமாற்றி விட்டாய். அதனால்தான் அனைத்தும் நாணலாக மாறியது என கூறியுள்ளார். வந்தது விநாயகர் தான் என தெரிந்து கொண்ட வணிகர் மீண்டும் கோயிலுக்கு வந்து விநாயகப் பெருமானை வழிபாடு செய்துவிட்டு தனது தவறை மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டார்.
அதற்குப் பிறகு வண்டியில் நாணலாக மாறிய கரும்புகளை மீண்டும் கரும்புகளாக விநாயகர் மாற்றினார். அதன் காரணமாகவே இந்த கோயிலில் வீற்றிருக்கக் கூடிய விநாயகர் கரும்பாயிரம் பிள்ளையார் என அழைக்கப்படுகிறார்.
மிகவும் பழமை வாய்ந்த கோயிலாக இந்த கரும்பாயிரம் பிள்ளையார் கோயில் திகழ்ந்து வருகிறது. இந்த கோயிலில் இன்று வரை தவறாமல் அனைத்து விதமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கும்பகோணம் மாநகரத்தின் முழு முதற்கடவுளாக கரும்பாயிரம் பிள்ளையார் விளங்கி வருகிறார்.
கும்பேஸ்வரர் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்யும் பக்தர்கள் இந்த கரும்பாயிரம் பிள்ளையார் கோயிலுக்கு வராமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு எடுத்த காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கக்கூடிய கடவுளாக திகழ்ந்து வருகின்றார். இந்த கரும்பாயிரம் பிள்ளையாரை வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இன்று வரை இருந்து வருகிறது.
அமைவிடம்
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் அருகில் இந்த கரும்பாயிரம் பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்வதற்கு வாகன வசதிகள் உள்ளன. கோயில் அருகிலேயே தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் என அனைத்து வசதிகளும் உள்ளன.