Sunday Temple: வதத்தால் தோஷம் பெற்ற துர்க்கை அம்மன்.. 12 ஆண்டுகள் தவம்.. தோஷத்தை போக்கிய சிவபெருமான்
Sep 01, 2024, 06:00 AM IST
Sunday Temple: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருவது தான் தஞ்சாவூர் மாவட்டம் அம்மங்குடி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய தாயார் துர்கா பரமேஸ்வரி என்ற திருநாமத்தோடு அழைக்கப்படுகிறார்.
Sunday Temple: அனைவருக்குமான கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகின்றார் கடவுள்களுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். உயிரினங்கள் தொடங்கிய காலம் முதல் இன்று வரை சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மனிதர்கள் வணங்குவதற்கு முன்னதாகவே அனைத்து உயிரினங்களும் சிவபெருமானை வழிபட்டுள்ளதாக புராணங்களில் கூறப்படுகின்றன.
சமீபத்திய புகைப்படம்
அதன் பின்னர் மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது தான் இன்று கம்பீரமாக நின்று வருகின்ற கோயில்கள். சோழர்கள், பாண்டியர்கள் பல்லவர்கள் என அனைத்து மன்னர்களும் சிவபெருமானின் தீவிர பக்தனாக இருந்து வந்துள்ளன.
மண்ணுக்காக ஒரு பக்கம் போரிட்டு வந்தாலும் அனைத்து மன்னர்களும் தங்களது கலைநயத்தையும் பக்தியையும் வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். அப்படிப்பட்ட கோயில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை கம்பீரமாக காலத்தால் அழிக்க முடியாத வரலாற்றுச் சரித்திர குறியீடாக நின்று வருகின்றன.
சில கோயில்கள் எந்த காலத்தில் கட்டப்பட்டது என்பது கூட கண்டுபிடிக்க முடியவில்லை. பல கலை நயத்தோடு அந்த கோயில்கள் வரலாறுகளை உருவாக்கும் படைப்பாக திகழ்ந்து வருகின்றன.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருவது தான் தஞ்சாவூர் மாவட்டம் அம்மங்குடி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய தாயார் துர்கா பரமேஸ்வரி என்ற திருநாமத்தோடு அழைக்கப்படுகிறார். சிவபெருமான் மூலவராக இருந்தாலும் இந்த கோயில் அம்மனின் பிரதான வழிபாட்டு தலமாக விளங்கி வருகிறது.
தல சிறப்பு
இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய விநாயகர் பெருமானின் சிற்பம் சாளக்கிரமத்தால் அமைக்கப்பட்டுள்ளது. விநாயகரின் சிற்பம் காலை நிறத்தில் பச்சை நிறமாகவும் மதிய நேரத்தில் நீல நிறமாகவும் மாலை நேரத்தில் மீண்டும் பச்சை நிறமாகவும் மாறி மாறி காணப்படும்.
சிவபெருமானுக்குள் அடங்கி துர்க்கை அம்மன் தளமாக இந்த திருக்கோயில் விளங்கி வருகிறது. இந்த திருக்கோயிலில் துர்க்கை அம்மன் கிழக்கு நோக்கி சன்னதியில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார்.
தல வரலாறு
இந்த கோயில் கிபி 944 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கூறப்படும். இந்த கோயில் துர்க்கை அம்மனை பிரதான தெய்வமாகக் கொண்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
துர்க்கை அம்மன் மகிஷாசுரனை வதம் செய்தார். அதனால் அவருக்கு தோஷம் ஏற்பட்டது. இதன் காரணமாக சிவபெருமானை எண்ணி துர்கா தேவி தவம் இருந்தார். பூமியில் இருக்கக்கூடிய தீர்த்தத்தில் வழிபாடு செய்து அங்கே சிவபெருமான் மற்றும் விநாயகர் ஆகியோரை ஸ்தாபித்து தியானம் செய்தார்.
12 ஆண்டுகாலம் துர்க்கை அம்மன் தவத்தில் ஈடுபட்டார். இதனால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் துர்க்கை அம்மன் முன்பு தோன்றி உனது தோஷம் நீங்கி விட்டது எனக் கூறியுள்ளார். இந்த கோயிலில் நீ தங்கி இங்கே வழிபாட்டுக்காக வரக்கூடிய பக்தர்களுக்கு சகலதோஷங்களையும் நீக்கி அருள் புரிய வேண்டுமென சிவபெருமான் வரத்தை அருளினார்.
இது துர்க்கை அம்மன் தவம் இருந்த இடம் என்கின்ற காரணத்தினால் தபோவனம் என அழைக்கப்பட்டது. இங்கு உள்ள தீர்த்தம் அம்மனின் பாவத்தை போக்கியுள்ளது. அதனால் இந்த தீர்த்தத்தில் குளித்தால் பாவ விமோசனம் கிடைக்கும் என கூறப்படுகிறது. அம்மனின் குடியிருக்க நினைத்த இடம் என்கின்ற காரணத்தினால் இது அம்மன்குடி என அழைக்கப்பட்டது. அதன்பின்னர் அம்மன்குடி என மாறிவிட்டது.