Sanatan Dharma Controversy: ’நீங்கள் சாமானியர் அல்ல; அமைச்சர்!’ சனாதனம் விவகாரத்தில் உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
”ஒரு விஷயத்தை பேசுவதற்கு முன்னர் அதன் விளைவுகளை அறிந்திருக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது”

சனாதன தர்மத்தை ஒழிக்க வலியுறுத்தி பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், உதயநிதி ஸ்டாலின் ஒரு சாதாரண மனிதர் அல்ல, ஒரு அமைச்சர் என்றும், அவரது கருத்துக்களின் விளைவுகளை அவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
சனாதன தர்மம் குறித்து பேசிய விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்துக்காக பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பல எஃப்.ஐ.ஆர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
உதயநிதி ஸ்டாலின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, உத்தரபிரதேசம், கர்நாடகா, பீகார், ஜம்மு-காஷ்மீர் மற்றும் மகாராஷ்டிராவில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இவை அனைத்தையும் ஒரே எஃப்.ஐ.ஆர்களையும் இணைக்க வேண்டும் என கோரினார்.
ஒரு விஷயத்தை பேசுவதற்கு முன்னர் அதன் விளைவுகளை அறிந்திருக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது,
"பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் மற்றும் மத சுதந்திரத்திற்கான உரிமைகளை துஷ்பிரயோகம் செய்கிறீர்கள், பின்னர் பிரிவு 32 இன் கீழ் பாதுகாப்புக்காக உச்ச நீதிமன்றத்திற்கு வருகிறீர்களா? நீங்கள் சொன்னதின் விளைவுகள் உங்களுக்குத் தெரியாதா?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
உதயநிதியின் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, விசாரணையின் போது, அர்னாப் கோஸ்வாமி, நுபுர் சர்மா, முகமது ஜுபைர் மற்றும் அமிஷ் தேவ்கான் ஆகியோரின் வழக்குகளை போல் உதயநிதி ஸ்டாலின் மீதான வழக்குகளை ஒன்றிணைக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டது.
இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் மார்ச் 15 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். சனாதன தர்மத்தை 'மலேரியா' மற்றும் 'டெங்கு' போன்ற நோய்களுடன் ஒப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், சாதி அமைப்பு மற்றும் வரலாற்று பாகுபாட்டில் வேரூன்றிய அடிப்படையில் அதை ஒழிக்க வேண்டும் என்று பேசியதாக வாதம் முன் வைக்கப்பட்டது. அவரது இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவர் மீது பல்வேறு கிரிமினல் புகார்கள் பதிவு செய்யப்பட்டன.
