TN Assembly Live: ’சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய முடியாது’ தூர்தர்ஷன் திட்டவட்டம்!
பெரும்பாலும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசுவது மட்டுமே நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதாக எஸ்.பி.வேலுமணி தரப்பு புகார்
சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய முடியாது என தூர்தர்ஷன் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் லோக்சத்தா கட்சியின் ஜெகதீஸ்வரன் என்பவரும் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது பேரவை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் அனைத்து அம்சங்களையும் பரிசீலனை செய்து சட்டமன்ற நிகழ்வுகளான கேள்விநேரம், 110 விதியின் கீழான உரைகள், முக்கியமான தலைவர்களின் உரைகள் ஆகியவை நேரலை செய்யப்பட்டு வருகிறது.
முழுநேர நேரலைக்காக தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு கடந்த 2022ஆம் ஆண்டு 44 கோடியே 65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் ஆனால் நேரலைக்கு தேவையான ஆப்டிக்கல் பைபர் கேபிள் அமைக்க மத்திய அரசு அனுமதிக்காக காத்திருப்பதாக முதலில் கூறிய தூர்தர்ஷன் தற்போது நேரலை செய்ய இயலாது என கூறி உள்ளதாக பேரவை செயலாளரின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
சட்டப்பேரவை சபாநாயகரின் முடிவை எதிர்த்து நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியுமென்ற போதும் அவருக்கு நேரலை செய்யும் படி உத்தரவிட முடியுமா என கேள்வி எழுவதாகவும் நீதிபதி கூறினார்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சரும் அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தரப்பிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெரும்பாலும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசுவது மட்டுமே நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதாகவும், எதிர்க்கட்சியினர் பேசும் போது நேரலை நிறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.