Withdraw Power Tariff: விசைத்தறி, ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு விதிக்கப்பட்ட மின் கட்டண உயர்வை வாபஸ் பெறுக - ஈபிஎஸ்
அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ், விசைத்தறி, ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு விதிக்கப்பட்ட மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளார்.

விசைத்தறி, ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கையை ஏற்று, மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
விசைத்தறி, ஜவுளி உற்பத்தியாளர்கள் 20 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைச் செய்துவரும் நிலையில், அதுதொடர்பாக, எடப்பாடி பழனிசாமி அளித்த அறிக்கையின்படி, 'இந்தியாவின் உயிர் நாடியான வேளாண்மை, விடியா திமுக-வின் இருண்டஆட்சியில் இந்த ஆண்டு போதிய தண்ணீர் இல்லாமல் ஏற்கெனவே முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நிர்வாகத் திறமையற்ற விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர், இரண்டாம் முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதுடன், மின்சார நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டணம், சோலார் தகடுகள் பொருத்தி அதன்மூலம் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் என்று அனைத்துக் கட்டணங்களையும் உயர்த்தியதால், தமிழகத்தில் உள்ள தொழில் துறையும், ஜவுளித்துறையும் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.
குறிப்பாக, கழிவு பஞ்சில் இருந்து தயாரிக்கப்படும் நூலிழைகளைப் பயன்படுத்தி, காடா துணி, கலர் நூல்களில் போர்வை, மெத்தை விரிப்பு, லுங்கி, துண்டு, கால்மிதி உட்பட பல துணி வகைகளை தயாரிக்கப் பயன்படுத்தும் நூல்களை உற்பத்தி செய்யும் ஒ.இ. எனப்படும் ஒப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்களின் மறுசுழற்சி ஜவுளித்துறை கூட்டமைப்பு கடந்த ஜூலை மாதம் நூல் விலை மற்றும் மின் கட்டண உயர்வை திரும்பப்பெறக்கோரி போராட்டம் நடத்தியது.
