Savukku Shankar Arrest: ‘சவுக்கு சங்கர் கைது! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!’ ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை
”சவுக்கு சங்கர் தரக்குறைவாக பேசி இருந்தால் 41ஏ நோட்டீஸ் கொடுக்கலாமே?; ஆனால் அவரை முதலில் கைது செய்ய வேண்டுமா?”
சென்னை அண்ணாநகர் பகுதியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்களுடைய தாகத்தை தீர்க்க தண்ணீர் பந்தல் திறக்கப்படும் போது கூட ஏகப்பட்ட நெருக்கடிகள் ஆளும் அதிகார வர்கத்தால் கொடுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு, போதை வஸ்துகள் தாராளமாக கிடைக்கும் நிலையில் அதை தடுக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவது இல்லை.
கடுமையான கோடை வெயிலின் தாக்கத்தால் ஏரி, குளம், ஆறுகளில் தண்ணீரே இல்லை. அணைகளில் வெறும் 23 சதவீதம் தண்ணீர் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் பரிசல் சென்ற ஆற்றில் இன்று பேருந்து செல்லும் அளவிற்கு நீர் நிலைகள் மாறி உள்ளது. நாட்டில் எவ்வளவு பிரச்சினை உள்ளபோது கோட்டையில் இருந்து ஆய்வு செய்யாமல் கொடைக்கானல் சென்று முதலமைச்சர் ஓய்வு எடுக்கிறார். மழை காலத்தில் தண்ணிரை செமிக்காத காரணத்தால் இன்று தண்ணிர் பிரச்சினை தலை விரித்து ஆடும் சூழல் உள்ளது என குற்றம்சாட்டினார்.
இதையெல்லாம் திசை திருப்ப வேண்டும் என்பதற்காக சவுக்கு மீடியாவில் உள்ள கார்த்திக் என்பவரை கைது செய்தனர். இப்போது சவுக்கு சங்கரை கைது செய்து உள்ளனர். மக்கள் பிரச்னைகளை திசை திருப்புவதற்க அரசு இப்படி செய்கிறது.
சவுக்கு சங்கர் தரக்குறைவாக பேசி இருந்தால் 41ஏ நோட்டீஸ் கொடுக்கலாமே?; அவர் பேசியது அவதூறா இல்லையா என்பதை முதலில் கைது செய்ய வேண்டுமா?
இன்றைக்கு முதலமைச்சராக உள்ள ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எங்கள் அரசை கடுமையாக திட்டி உள்ளார். ஆனால் அவரை நாங்கள் கைது செய்யவில்லை. ஜனநாயகத்தில் பேச்சுரிமை எங்கள் ஆட்சியில் அனுமதிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் எதுவுமே பேசக்கூடாது என்றால் ஸ்டாலின் என்ன மன்னரா!, அவருடைய பையன் உதயநிதி பட்டத்து இளவரசரா?. இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆட்சி உள்ள நிலையில், இது அப்படியே உங்களுக்கு திரும்பும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
எங்கள் அரசுக்கு விமர்சனங்களை தாக்கும் அளவுக்கு பக்குவம் இருந்தது. ஆனால் 41ஏ நோட்டீஸ் தராமல் திடீரென்று கைது செய்தது ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என கூறினார்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் மரணம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தன் உயிருக்கு ஆபத்து என ஒருவர் புகார் அளிக்கும் போது காவல்துறை நடவடிக்கை எடுத்து இருந்தால் இப்படி அவரை சடலமாக மீட்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முதல்வரை போல தமிழக காவல்துறை தூங்கி கொண்டுள்ளது என விமர்சனம் செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பரப்புரை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், பிரதமர் என்பவர் பொதுவான நபர், எல்லோருக்கும் அவர் பிரதமர் ஆனால் பொதுவான பிரதமர் மதத்தால் பிளவு படுத்தி இந்துக்கள் வாக்குகளை பெற நினைப்பது கண்டிக்கத்தக்கது.
ஆங்கிலேயர் எப்படி மக்களை பிரித்து ஆட்சி செய்தனரோ அதே போல ஒரு கோட்பாட்டை இன்று பிரதமர் எடுத்துள்ளார். இஸ்லாமியர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் அவர்களை பிளவுபடுத்தி வாக்குகளை சேகரிக்க நினைப்பதை ஏற்றுகொள்ள முடியாது.
நீங்கள் ஆட்சிக்கு வர போவது இல்லை என ஏதேனும் கருத்து அவர்களுக்கு கிடைத்து இருக்கலாம் அதற்காக மதத்தை வைத்து அரசியல் செய்ய கூடாது. என கூறினார்
தொடர்ந்து பேசிய அவர்,மோடி, காங்கிரஸ் என எந்த கொம்பன் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் தமிழக இட ஒதுக்கீட்டில் ஒரு ஆணியும் புடுங்கமுடியாது என தெரிவித்தார். ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் மக்களுக்கு உதவும் இயக்கம் அதிமுக என ஜெயக்குமார் கூறினார்.