Tamil News  /  Entertainment  /  D. Jayakumar Was The First Person To Comment When Vijay Started The Party

Vijay: கட்சி ஆரம்பித்த விஜய் - முதல் ஆளாக கமெண்ட் அடித்த டி.ஜெயக்குமார்!

Marimuthu M HT Tamil
Feb 02, 2024 02:48 PM IST

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது கருத்தினைப் பதிவு செய்துள்ளார்.

Vijay: கட்சி ஆரம்பித்த விஜய் - முதல் ஆளாக கமெண்ட் அடித்த டி.ஜெயக்குமார்!
Vijay: கட்சி ஆரம்பித்த விஜய் - முதல் ஆளாக கமெண்ட் அடித்த டி.ஜெயக்குமார்!

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, '' ஜனநாயகத்தில் யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கலாம். அரசியல் என்பது ஒரு பெருங்கடல். அதில் நீந்தி கரை சேர்பவர்களும் உண்டு. மூழ்கிப்போனவர்களும் உண்டு. பார்ப்போம். இன்றைக்குத்தானே கட்சி ஆரம்பிச்சிருக்கார். அவர் தேர்தலில் வந்து நின்று தேர்தல் அரசியலில் நீந்தி கரை சேர்கிறாரா இல்லை மூழ்கிப்போனாரா என்று பார்ப்போம். மக்கள் தான் இறுதி எஜமானர்கள். அவர்கள் தீர்மானிக்கும் விஷயம் இது. அதனால் கட்சியைப்பொறுத்தவரை யாரும் ஆரம்பிக்கலாம். மேலும் அவர் சொல்லும் அறிக்கையின்படி பார்த்தால், அது இரண்டு கட்சிகளுக்குத்தான் பொருந்தும். ஒன்று, திமுகவுக்குப் பொருந்தும். மற்றொன்று, பாஜகவுக்குப் பொருந்தும். எங்கள் மீது பொய்வழக்குகள் தான் போடப்படுகின்றன. எங்கள் கட்சியைக் குறிப்பிட்டு எதுவும் பேசவில்லை. அப்படி பேசினால் தக்க பதிலடி கொடுக்கப்படும். திமுகவை தான் விஜய் நேரடியாக தாக்குகிறார். திமுக ஆட்சியில் தான் ஊழல் நிறைஞ்சிருக்கு. ரூ.30 ஆயிரம் கோடி பணம் வைச்சிருக்காங்க பிடிஆர் பழனிவேல் ராஜனை சொல்லியிருக்கார்.

அதனால் தனிப்பட்டமுறையில் சொல்லாதபோது, நாங்கள் எப்படி விஜயை விமர்சிக்கமுடியும். 2026ஆம் ஆண்டு விஜய் போட்டியிட்டாலும் அதிமுகவுக்கு என்று அடிப்படை வாக்கு வங்கி உண்டு. எங்களது வாக்கு வங்கி மீது விஜய் கை வைக்கமுடியாது. இன்னும் சொல்லப்போனால், திமுக ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அதை தேர்தல் நேரத்தில் அம்பலப்படுத்தி ஜெயிப்போம்.

நான் விஜயை சிறுமைப்படுத்தவில்லை. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் போல் யாரும் வரமுடியாது. அவர் ஒரு தெய்வப்பிறவி. அது தனி. இது தனி. எப்படி வேண்டும் என்றாலும் அவர்கள் எம்.ஜி.ஆர் போல் சித்தரிச்சக்கட்டும். புரட்சித்தலைவர் ஆரம்பித்த கட்சி, அதிமுக. அவர் போட்ட விதையால் 50 ஆண்டுகளாக விருட்சமாக உள்ளது அதிமுக. அதனால் தங்களை யாருடனும் ஒப்பிடக்கூடாது'' என்றார்.

முன்னதாக நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிக்கையில், ‘தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் "ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" (பிறப்பால் அனைவரும் சமம் என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.

இந்நிலையில், என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். "எண்ணித் துணிக கருமம்" என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, "தமிழக வெற்றி கழகம்" என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது’’ எனத்தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.