Crime: காதலியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த பயங்கரம்..!-crime the horror of killing girlfriend by throwing a stone on her head - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Crime: காதலியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த பயங்கரம்..!

Crime: காதலியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த பயங்கரம்..!

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 22, 2024 07:38 AM IST

காதலியை கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடி தலைமறைவாகியுள்ள காளீஸ்வரனை தேடும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது

கோப்புப்படம்
கோப்புப்படம்

தஞ்சை மாவட்டம் பொன்னாங்கண்ணி ஆனந்தவல்லி வாய்க்கால் தென்கரை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கு வயது 51. இவரது மனைவி தன லெட்சுமி என்ற கோவிந்தம்மாள். இவருக்கு வயது 40. இந்த தம்பதிக்கும் 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காவல்நிலையத்திற்கு உட்பட்ட புனல் வாசல் பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன். இவர் பேராவூரணி பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். பேராவூரணி அரசு மருத்துவனையில் பகுதியில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகவும் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் காளீஸ்வரனும் சிவஜோதியும் காதலித்து வந்தனர் இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் ஆதரவாக இருந்து வந்தனர். இதனால் காளீஸ்வரன் அவ்வப்போது சிவஜோதி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றார். 

பேராவூரணியை விட்டு காளீஸ்வரன் தனது சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்றார். இதனால் காளீஸ்வரனும் சிவஜோதியும் அவ்வப்போது செல்போனில் பேசி வந்தனர். இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காளீஸ்வரனுக்கு சொந்த ஊரில் பெற்றோர் வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில் தனது காதலன் காளீஸ்வரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்த விஷயம் சிவஜோதிக்கு தெரிய வந்தது.

இதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்த சிவஜோதிக்கும் காளீஸ்வரனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு பேராவூரணி வந்த காளீஸ்வரன் குடிபோதையில் இருந்துள்ளார். சிவஜோதி வீட்டிற்குச் சென்று அவருடன் தகராறு செய்து வந்துள்ளார். அப்போது தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு சிவஜோதியை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. திருமணமான உன்னுடன் எப்படி வருவது என சிவஜோதி மறைத்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சிவஜோதியின் பெற்றோர் பேராவூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் காளீஸ்வரன் குடிபோதையில் இருந்த காரணத்தால் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல் கண்டித்து சென்றுள்ளனர். 

சம்பவத்திற்கு பின்னர் சிவஜோதி மற்றும் அவரது சகோதரர்கள் பெற்றோர் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அதிகாலையில் வீட்டின் கதவை தட்டி உள்ளே நுழைந்த காளீஸ்வரன் மீண்டும் சிவஜோதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் வீட்டின் ஓரமாக இருந்த கல்லை எடுத்து சிவ ஜோதியின் தலையில் காளீஸ்வரன் போட்டுள்ளார். இதில் சிவஜோதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதை அடுத்து காளீஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகினார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிவஜோதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் காதலியை கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடி தலைமறைவாகியுள்ள காளீஸ்வரனை தேடும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.