உபியில் பாய்லர் வெடித்து சிதறியதில் 12 பேர் சாவு; 21 பேர் படுகாயம்
உத்தரப்பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள தொழில்சாலையில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். 21 படுகாயம் அடைந்தனர்.
லக்னெள: உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்த விபத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் தோலானா பகுதியில் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு சனிக்கிழமை மாலை பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ சுற்றி இருந்த பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் மூன்று மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு சப்தார்ஜங்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மேதா ரூபம் கூறுகையில், "இந்த தொழில்சாலைக்கு எலக்ட்ரானிக் பொருள்களை தயாரிப்பதற்கு மட்டுமே உரிமை வழங்கப்பட்டது. ஆனால், இது ரசாயன தொழில்சாலையாக இயங்கி வந்துள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். சம்பவ இடத்திற்கு தடயவியல் துறை நிபுணர்கள் சென்று பார்வையிட்டு மாதிரிகளை எடுத்தனர். விபத்தில் சிக்கியவர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்." என்றார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "உத்தரப்பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் பலர் உயிரிழந்தது கவலை அளிக்கிறது. உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்திக்கிறேன்." என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடியில் இரங்கல் செய்தியில், "உத்தரப்பிரதேச விபத்து பெரும் வேதனை தருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மாநில அரசுக்கு தேவையான உதவிகளை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது.என்று குறிப்பிட்டுள்ளார்.
டாபிக்ஸ்