The GOAT First Single: யுவன் சங்கர் ராஜா இசையமைக்க.. விஜய் பாட.. நாளை ரிலீஸாகிறது ‘தி கோட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்
The GOAT First Single:யுவன் சங்கர் ராஜா இசையில் நடிகர் விஜய் பாடிய தி கோட் படத்தின் முதல் பாடல் நாளை ரிலீஸாகவுள்ளது.
The Greatest Of All Time: The GOAT First Single: நடிகர் விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தங்களது சமூக வலைதளக் கணக்குகளில் பகிர்ந்துள்ளனர்.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம், தி கோட். அதாவது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time) என்பதின் சுருக்கமே ‘ தி கோட்’. இது விஜய்யின் 68ஆவது படமாகும். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்துவருகிறார்.
தவிர, இந்தப் படத்தில் பிரசாத், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் சென்னை மட்டுமல்லாது, தாய்லாந்து, ஹைதராபாத், இலங்கை, புதுச்சேரி, திருவனந்தபுரம், ரஷ்யா ஆகிய இடங்களிலும் நடைபெற்று வருகிறது. மேலும் நடிகர் விஜய், இந்த திரைப்படத்தில், இரண்டு வேடங்களில் நடித்திருப்பதாகவும் தெரிகிறது. முன்பே, நடிகர் விஜய், அழகிய தமிழ் மகன், வில்லு, கத்தி, மெர்சல்,பிகில், லியோ ஆகியப் படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருந்த நிலையில் தற்போதும் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் படத்துக்கு, பல ஆண்டுகளுக்குப் பின், யுவன் சங்கர் ராஜா முதன்முறையாக இசையமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸாகும் வகையில் தயார் ஆகி வருகிறது. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக, கல்பாத்தி அகோரம்,கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் என சகோதரர்கள் மூவர் இணைந்து தயாரிக்கின்றனர்.
‘’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'' படத்துக்குண்டான ஒளிப்பதிவினை சித்தார்த்தா நுனி புரிய, வெங்கட் ராஜின் என்பவர் எடிட் செய்கிறார். இப்படத்துக்குண்டான வசனத்தை விஜி மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.
இப்படத்தில் கங்கை அமரன், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, விவேக் ஆகிய நால்வர் சேர்ந்து, படத்துக்குண்டான பாடல்களை எழுதியுள்ளனர்.
பொதுவாகவே விஜய் படத்தில் நடனம் பட்டையைக் கிளப்பும். இப்படத்திலும் நடனத்திற்கு வலுவாக இடம்தரும் ராஜூ சுந்தரம், சேகர் மற்றும் சதீஷ் ஆகியோர் சேர்ந்து பாடல்களுக்கு நடன அமைப்பினை செய்துள்ளனர்.
அதேபோல், விஜய் படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கும் பஞ்சமிருக்காது. அதற்கும் தீனிபோடும் வகையில் திலீப் சுப்புராயன் மாஸ்டர், தி கோட் திரைப்படத்துக்கான சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். மேலும், இத்திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு மே 2023ல், ‘’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'' திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ படப்பிடிப்பு அக்டோபர், 2023ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படம் அறிவியல் புனைவு கதை என்கின்றனர், படக்குழுவினருக்கு நெருக்கமானவர்கள். மேலும், இப்படத்தினை 2024ஆம் ஆண்டு, செப்டம்பர் ஐந்தாம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ’தி கோட்’ படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து இணையதளங்களில் கேட்டு வந்தனர். அதனையொட்டி, நடிகர் விஜய் கண்ணாடி போட்டு, தாடியுடன் முறைக்கும் படத்தை, படக்குழுவினர் வெளியிட்டனர்.
அதனைத்தொடர்ந்து நண்பகல் நேரத்தில், ‘தி கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு தயாரா?’ என்று கேட்பதுபோல், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் போஸ்டரை வெளியிட்டது.
இந்நிலையில் டி- சிரீஸ் தமிழ் யூட்யூப் சேனலில், ‘’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'' திரைப்படத்தின் முதல் சிங்கிள், நாளை மாலை 6 மணிக்கு வெளியாவதாக படத் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா இசையில், நடிகர் விஜய் பாடியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ‘’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அதிகாரப்பூர்வ புரோமோ டி-சிரீஸ் தமிழ் யூட்யூப் சேனலிலும் வெளியிடப்பட்டுள்ளது.