தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  தீவிரவாத அச்சுறுத்தல்...பொருளாதார நெருக்கடி! போலீசாருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

தீவிரவாத அச்சுறுத்தல்...பொருளாதார நெருக்கடி! போலீசாருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

Mar 08, 2023, 08:24 PM IST

  • பாகிஸ்தானிலுள்ள கைபர் பக்துன்க்வா பகுதியில் போலீசார் மீது தாலிபான்கள் தொடர் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றனர். இதனால் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ள போலீசார் பொதுமக்களை காக்கும் பணியை விட தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். போலீசார் சிலர் போலீஸ் வாகனத்தில் செல்லாமல், வெங்காயம், மிளகாய் எடுத்து செல்லப்படும் வாகனத்தில் தொற்றிக்கொண்டு செல்லும் விடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது. அதில் பயணிக்கும் போலீஸ் ஒருவர் "எங்கள் நிலமையை பாருங்கள். நாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு எப்படி கடினமாக போக வேண்டியுள்ளது" என்று கூறுகிறார். பாகிஸ்தான் போலீசார் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு போதிய பணம் இல்லாத நிலையில் இவ்வாறு போலீசார் பயணிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பிரபல பத்திரிகையாளர் ஒருவர் இந்த விடியோவை ஷேர் செய்துள்ளார். தாலிபான்களின் அத்துமீறலால் கைபர் பக்துன்க்வா பகுதி போலீசார் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். கடந்த சில மாதங்களில் தாலிபான்களில் தாக்குதலில் சிலர் தங்களது உயிரையும் இழந்துள்ளனர். இந்த தாக்குதலானது தொடர்ந்து வரும் நிலையில் போலீசார் இடையே அச்சமானது அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, தீவிரவாதிகளை எதிர்கொள்ளும் அளவுக்கு போதிய வளங்கள் இல்லாமல் இருப்பது போலீசாருக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டிருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது. 350 பில்லியன் அமெரிக்க டாலர் அளவு பொருளாதாரம் கொண்ட பாகிஸ்தானில் தற்போது அந்நிய செலாவணி கையிருப்பானது 4 பில்லியன் அமெரிக்க டாலர் வரை மட்டுமே உள்ளது. 1975ஆம் ஆண்டுக்கு பிறகு மிகப் பெரிய பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எரிபொருள் விலை விண்ணை தொடும் அளவு உயர்ந்திருக்கும் நிலையில், செலவுகளை குறைக்கும் விதமாக சந்தைகளை விரைவாக மூடவும் அரசு உத்தரவிட்டுள்ளது.