KKR vs LSG: 98 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.. லக்னோவை பதம்பார்த்து வென்ற கொல்கத்தா!
KKR vs LSG: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி லக்னோ அணியை வீழ்த்தி அபாரவெற்றி பெற்றது.
KKR vs LSG: ஐ.பி.எல்லின் 54ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
2024ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதின. இது 54ஆவது லீக் போட்டியாகும். இது லக்னோவில் நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். பில் சால்ட் 14 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தபோது, நவீன் உல்ஹக்கின் பந்தில் அவுட்டானார். ஆனால், சுனில் நரைன், நிதானமாக ஆடி 39 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். 6 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடித்தார்.
மூன்றாவதாக களமிறங்கிய அங்கிருஷ் ரகுவன்ஷி, 26 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடித்தார். இதன்மூலம் 32 ரன்கள் எடுத்திருந்தபோது, யுத்விர் சிங்கின் பந்தில் அவுட்டானார். அதன்பின் களமிறங்கிய அன்றே ருஷெல் மற்றும் ருங்கு சிங் ஆகியோர், நவீன் உல் ஹக்கின் பந்தில் முறையே 12 ரன்கள் மற்றும் 16 ரன்கள் எடுத்திருந்தபோது வெளியேறினர். ஆறாவதாக களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 15 பந்தில் 23 ரன்கள் எடுத்திருந்தபோது, யாஷ் தாக்கூரின் பந்தில் அவுட்டானார்.
அடுத்து களமிறங்கிய ரமாந்தீப் சிங் 25 ரன்களுடனும், வெங்கடேஷ் ஐயர் ஒரு ரன்னுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து, 235 ரன்களை ஆறு விக்கெட் இழப்புக்கு எடுத்தனர்.
இப்போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராகப் பந்துவீசிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் நவீன் உல் ஹக் மூன்று விக்கெட்டுகளை அதிகப்பட்சமாக வீழ்த்தினார்.
அதன்பின், 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய, லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு தொடக்க வீரர்களாக அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் அர்ஷின் குல்கர்னி நல்ல தொடக்கத்தைத் தந்தனர்.
குறிப்பாக, கே.எல். ராகுல், 25 ரன்கள் எடுத்தபோது, ஹர்ஷித் ரானாவின் பந்தில் அவுட்டானார். அர்ஷின் குல்கர்னி, ஸ்டார்க்கின் பவுலிங்கில் 9 ரன்கள் எடுத்தபோது, அவுட்டானார்.
மூன்றாவதாக களமிறங்கிய மார்கஸ் ஸ்டோயினிஸ் 21 பந்துகளுக்கு 36 ரன்கள் எடுத்தபோது, ருஸ்ஸெல்லின் பந்தில் அவுட்டானார்.
மேலும்., தீபக் ஹோடா 5 ரன்களும், நிகோலஸ் பூரன் 10 ரன்களும், ஆயுஸ் படோனி 15 ரன்களுடனும், ஆஷ்னோட் டர்னர் 16 ரன்களுடனும் அவுட்டாகினர். அடுத்தடுத்து வந்த ஆட்டக்காரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன்மூலம் 16.1 ஓவர் இழப்புக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி, 137 ரன்களை எடுத்தது.
இதன்மூலம் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை வீழ்த்தி, அபாரவெற்றி பெற்றது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சார்பில் 24 ரன்கள் கொடுத்து ஹர்ஷித் ரானா மூன்று விக்கெட்டுகளும்; வருண் சக்கரவர்த்தி 30 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளும் எடுத்து, கொல்கத்தா அணியின் வெற்றிக்கு உதவினர்.
இப்போட்டியில் 39 பந்துகளுக்கு 81 ரன்கள் எடுத்ததோடு, ஒரு விக்கெட்டை வீழ்த்திய சுனில் நரைன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
டாபிக்ஸ்