TOP 10 NEWS: த.வெ.க சின்ன விவகாரம் முதல் திமுக அமைச்சருக்கு வைகைச் செல்வனின் பாராட்டு வரை: நண்பகல் டாப் 10 நியூஸ்!
Sep 30, 2024, 02:19 PM IST
TOP 10 NEWS: த.வெ.க சின்ன விவகாரம் முதல் திமுக அமைச்சருக்கு வைகைச் செல்வனின் பாராட்டு வரை: நண்பகல் டாப் 10 நியூஸ் வரை அறிந்துகொள்ளலாம்.
TOP 10 NEWS: குக்கிராமம் முதல் தமிழ்நாட்டின் மாவட்டங்கள் வரை, முக்கிய செய்திகள் அனைத்தின் இந்த தொகுப்பின் கீழே அறிந்துகொள்ளலாம்.
1.வெடிகுண்டு மிரட்டல்
மதுரை மாவட்டத்தில் நரிமேடு, பொன்மேனி, நாகமலை, சிந்தாமணி உள்ளிட்டப் பகுதிகளில் இயங்கும் 8 தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் வாயிலாக மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். மிரட்டல் வந்த 8 பள்ளிகளில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் இது புரளி என போலீஸாருக்கு தெரியவந்தது.
2. ஸ்ரீரங்கத்தில் ஹெச்.டி.குமாரசாமி:
ஸ்ரீரெங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் மத்திய எஃகு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
3. தமிழக வெற்றிக் கழக சின்ன விவகாரத்தில் தலையிட முடியாது - தேர்தல் ஆணையம்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியில் யானை சின்னம் இடம்பெற்ற விவகாரத்தில் தலையிட முடியாது என பகுஜன் சமாஜ் கட்சியின் புகாருக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. மேலும் கட்சிக் கொடிகள் மற்றும் அதில் இடம்பெறும் சின்னங்களுக்கு ஆணையம் எப்போதும் ஒப்புதல் கொடுப்பதில்லை எனவும், பிற கட்சிகளின் சின்னங்கள் பெயர்கள் பிரதிபலிக்காமல் கொடி இருப்பதை உறுதி செய்வது என்பது அந்தந்த கட்சிகளின் பொறுப்பு ஆகும்.
4. நீலகிரி குன்னூரில் நிலச்சரிவு:
நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியையாகப் பணிபுரிந்து வரும் ஜெயலட்சுமி உயிரிழந்துள்ளார். குன்னூரில் இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்டது இந்த உயிரிழப்பு எண்றும், அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களால் தான் மண் சரிவு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
5. அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்துப்போட்ட செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விசாரணை அதிகாரிமுன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து இருந்தது. விதிக்கப்பட்ட ஆறு நிபந்தனைகளில் ஒரு நிபந்தனையாக இந்த நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகி விசாரணை அதிகாரி முன் கையெழுத்திட்டார்.
6. கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை ரத்து
கொடைக்கானலில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்கவும் கடந்த மே மாதம் 7ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட இ-பாஸ் நடைமுறை இன்றுடன் நிறைவுபெற்றுள்ளது. இந்நிலையில், இ-பாஸ் கோரி இதுவரை 2,91,561 வாகனங்களுக்கு பதிவுசெய்த நிலையில், 1,09,636 வாகனங்கள் மட்டுமே கொடைக்கானல் நகருக்குள் வந்துள்ளன.
7. கோவையில் நூதனமுறையில் திருட்டு:
கோவை குனியமுத்தூரில் எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் டேப் ஒட்டி, ரூ.30ஆயிரம் பணத்தைத் திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க ஏ.டி.எம் இயந்திரத்தில் ரகசிய எண்ணை பதிவுசெய்து பணம் வரவில்லை எனச் சென்றவுடன், கைவரிசை காட்டியுள்ளனர். மேலும், கோவை, அவிநாசி உள்ளிட்ட 5 ஏ.டி.எம் மையங்களில் இதேபோல் மர்மநபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளதாகப் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
8. தேங்காயின் விலை கடுமையாக ஏற்றம்:
ஒரு வாரமாக தேங்காயின் விலை கடுமையான உயர்வினைச் சந்தித்து இருக்கிறது. குறிப்பாக தேங்காயின் விலை டன் ஒன்றுக்கு ரூ. 28ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. இதனால் சில்லறையில் மூன்று தேங்காய்கள் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தஞ்சை வியாபாரி நடராஜன் கூறுகையில், ரூ.15க்கு விற்ற தேங்காய் தற்போது ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும், உரிய மழையின்றி தென்னையில் இருக்கும் பூக்கள் கருகிக் கொட்டிப்போவதால் தேங்காய் வரத்தை குறைந்ததே, தேங்காயின் விலை ஏற்றத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது
9. அதிமுக முன்னாள் அமைச்சர் திமுக அமைச்சருக்கு பாராட்டு:
’நானும் கோவி.செழியனும் ஒரே நாளில் முனைவர் பட்டம்பெற்றோம். எளியவன் நான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பணியாற்றினேன். இப்போது அவர் உயர் கல்வி அமைச்சராகி இருக்கிறார். எனது மனமார்ந்த பாராட்டுகள். பட்டியலினத்தவருக்கு உயர்கல்வி அமைச்சர் பதவி.. பாராட்டாமல் இருக்கமுடியுமா?’ என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
10. பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு:
கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
டாபிக்ஸ்