TOP 10 NEWS: 8 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை முதல் நிர்மலா சீதாராமன் மீது திமுக விமர்சனம் வரை! டாப் 10 செய்திகள்!
Sep 22, 2024, 06:59 PM IST
TOP 10 NEWS: கொடைக்கானல் வெடிப்பு தொடர்பாக ஆய்வு, 8 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை, நிர்மலா சீதாராமன் மீது தயாநிதிமாறன் விமர்சனம், எடப்பாடி பழனிசாமி மீது துரை வைகோ விமர்சனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
1.கொடைக்கானல் வெடிப்பு தொடர்பாக ஆய்வு
கொடைக்கானல் அருகே உள்ள வனப்பகுதியில் நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பாக அதிகாரிகள் நாளை ஆய்வு செய்ய உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பக வந்தரேவு வனச்சரகர், புவியியல் தொழில்நுட்ப உதவி இயக்குநர், தீயணைப்புத் துறை, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.
2. அடுத்த 3 மணி நேரத்தில் மழை எச்சரிக்கை
தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
3.எடப்பாடி மீது துரை வைகோ விமர்சனம்
மதிமுகவை கூட்டணிக்கு அழைக்க வேண்டும் என்ற ஆசை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் திமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. தலைவர்கள் மாறுவார்கள். பிரச்னை வருமென்பது எடப்பாடியின் விருப்பம் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ பேட்டி
5.சென்னை விமான நிலையம் மீது எம்.பி புகார்
சென்னை விமான நிலைய டோல்கேட் மாஃபியா போல் செயல்படுவதாக மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா குற்றச்சாட்டு.
6.நிர்மலா சீதாராமன் மீது தயாநிதி மாறன் விமர்சனம்
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசையில் 3 மாதங்கள் நிர்மலா சீதாராமன் டேரா போட்டார் என திமுக எம்.பி. தயாநிதி மாறன் விமர்சனம்.
7.பிரதமரை சந்திக்கும் முதலமைச்சர்
வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி அன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். தமிழ்நாட்டுக்கான நிதி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்த உள்ளதாக தகவல்.
8.கேசவ விநாயகத்திற்கு மீண்டும் சம்மன்
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூபாய் 4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் அடுத்த வாரம் மீண்டும் ஆஜர் ஆக கோரி பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகத்திற்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளனர்.
9.மீனவர்கள் கைதுக்கு அன்புமணி கண்டனம்
வங்கக்கடலில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 37 பேரை சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவர்களின் 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வங்கக்கடலில் பாரம்பரிய உரிமை உள்ள இடத்தில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து அத்துமீறி கைது செய்வது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து.
10.அரசே துணை போவது கண்டிக்கத்தக்கது
தமிழ்நாட்டின் தேவை மாநிலக் கல்விக் கொள்கையா, தேசியக் கல்விக் கொள்கையா? என்பது குறித்த விவாதங்கள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், மாணவர்களை வருத்தாத கல்வி முறை தேவை என்ற சிந்தனை கொள்கைவகுப்பாளர்களிடம் இதுவரை எழவில்லை என்பது வேதனையளிக்கிறது. பாடச்சுமை மிகுந்த கல்வி தான் தரமான கல்வி என்ற தோற்றத்தை ஏற்படுத்த அரசே துணை போவது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
டாபிக்ஸ்