Ooty and Kodaikanal E-Pass: ’ஊட்டி. கொடைக்கானல் செல்ல இ-பாஸ் அவசியம்!’ நீதிபதிகள் சொன்ன முழு விவரம் இதோ!
“ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்ய உள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது”
ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் பயணிகளுக்கு வரும் மே 7ஆம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்தப்பட வேண்டும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
சுற்றுசூழல் பாதுகாப்புத் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ் குமார் மற்றும் பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள், காணொலி காட்சி மூலம் ஆஜர் ஆகி இருந்தனர்.
ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்ய உள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டிக்கு தினமும் ஆயிரத்து 300 வேன்கள் உட்பட 20 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் வருவதாக தெரிவிக்கப்பட்டது. இத்தனை வாகனங்கள் சென்றால், சுற்றுசூழல் பாதிக்கப்படுவது உடன் உள்ளூர் மக்கள் நடமாட முடியாது, வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என நீதிபதிகள் கூறினர்.
ஐஐடி மற்றும் ஐஐஎம் ஆய்வு செய்து அறிக்கை தரும் வரை இடைக்கால நடவடிக்கை தேவை என்ற நீதிபதிகள், கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட இ-பாஸ் நடைமுறையை ஊட்டி மற்றும் கொடைக்கானலில் அமல்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உள்ளனர்.
இந்த நிலையில் இ - பாஸ் நடைமுறைக்கு மாற்று வேண்டும் என முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி கோரிக்கை விடுத்து உள்ளார். இது தொடர்பாக ’எக்ஸ்’ சமூகவலைத்தளங்களில் அவர் பதிவிட்டுள்ள பதிவில், ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இந்த E Pass நடைமுறை மூலம் கிடைக்கும் பலன்கள் என்ன?
- * யார் யார் வருகிறார்கள், எவ்வளவு பேர் வருகிறார்கள் என்கிற புள்ளி விவரங்கள் அரசாங்கத்திற்கு கிடைக்கும். அந்த தரவுகளின் அடிப்படையில் அதிக கூட்ட நெரிசல், போக்குவரத்து ஆகியவற்றை ஒழுங்குபடுத்தலாம்.
- * ஒரே குடும்பத்தில் தனி தனி வாகனங்களில் வருபவர்கள் ஒரே வாகனத்தில் வருவார்கள் இதன் மூலம் வாகனங்களின் எண்ணிக்கையும் சற்று குறையும். அரசு பேருந்து, ரயில்களில் கூட்டங்கள் அதிகரிக்கும்.
- * வசதி உள்ளவர்கள் இந்த சிரமங்களை தவிர்க்க அங்கு ஒரு சிறிய இடத்தையாவது வாங்கிக் கொள்வார்கள் . இதன் மூலம் ஊட்டி, கொடைக்கானலில் நிலத்தின் மதிப்பு கூடலாம்.
- ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இந்த E Pass நடைமுறை மூலம் கிடைக்கும் சிரமங்கள் என்ன?
- இந்த E Pass நடைமுறை மூலம் லஞ்சம், ஊழல் போன்ற அதிகார துஸ்பிரயோகங்கள் அதிகமாக நடைபெறும்.
- மேட்டுப்பாளையம் - ஊட்டி செல்லும் சாலையின் நுழைவு வாயிலில் சில சமூக விரோதிகள் காவல் துறை உதவியோடு Green Tax என்று அனைத்து வாகனங்களிடமும் வசூல் செய்கிறார்கள். ஆனால் அது போன்ற அரசு உத்தரவு எதும் இருப்பதாக தெரியவில்லை. அந்த பணம் அரசாங்கத்திற்கும் செல்வதில்லை. கடந்த மூன்று ஆண்டுகலாமாக அனைவருக்கும் தெரிந்து நடைபெரும் இந்த கொள்ளையை தடுக்க எந்த அரசு அதிகாரியும் முன்வைரவில்லை. இதை முதலில் அரசு தடுக்க வேண்டும். E Pass நடைமுறை மூலம் மேலும் இதுபோன்ற துஸ்பிரயோகங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- இந்த E Pass நடைமுறை இந்தியாவுக்குள் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தடையின்றி சென்று வரலாம் என்ற தனிமனித உரிமைகளை பாதிப்பது போல் உள்ளது. நாளை இதை முன்னுதாரணமாகக் கொண்டு சென்னை போன்ற பெருநகரங்களிலும் கூட்ட நெரிசலை கட்டுபடுத்த இதுபோன்ற உத்தரவு வேண்டும் என்ற கோரிக்கை எழும்.
- இதற்கு பதிலாக 1.) காரமடை - கல்லாறு- மேட்டுப்பாளையம் By Pass திட்டம் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருக்கிறது, 2.) லவ்டேல் - HPF இந்த பகுதியில் ஊட்டி நகருக்குள் செல்லாமல் ஒரு மற்றுபாதை சீராக்கப்படலாம். 3.) மசினகுடி - கோத்தகிரி சாலை ஊட்டி நகருக்குள் செல்லாமல் மாற்று பாதை ஒழுங்குபடுத்தப்படலாம்.
- சட்ட விரோதமான கட்டடங்கள், சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படலாம், சட்டவிரோதமாக மரம் வெட்டுவது வனவிலங்குகளை துன்புறுத்துவது போன்ற நிலுவையில் உள்ள வழக்குகளிலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம்.
- சொந்த நாட்டிற்குள்ளே பாஸ்போர்ட் வாங்கி விட்டு செல்ல வேண்டும் என்பது போல் Pass வாங்கிவிட்டு செல்ல வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமல்ல. நீதிமன்றத்தின் நோக்கம் சரியானதாக இருக்கலாம் ஆனால் அதனால் பெரிய அளவில் எந்த பலனும் ஏற்பட வாய்ப்பில்லை.
- பண பலம் இல்லாத பாமர மக்களுக்கு இது சிரமத்தை தான் உண்டாக்கும். தமிழக அரசு இந்த உத்தரவை நீதிமன்றத்தில் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் அல்லது மேல் முறையீடு செய்ய வேண்டும்.
- இதே போல கொடைக்கானலிலும் அடிப்படை வசதிகளையும் மாற்று பாதைகளையும் உருவாக்கி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தலாம். இதை ஒழுங்குபடுத்த காவல்துறையும், வருவாய் துறையும் இணைந்து சரியான திட்டமிடுதலை மேற்கொண்டால் தான் சரியான தீர்வாக இருக்குமே தவிர E Pass கொடுப்பதன் மூலம் எந்த பலனும் கிடைக்காது.