TOP 10 NEWS: ’அமெரிக்காவில் வாழை படம் பார்த்த முதல்வர் முதல் தவெக மாநாட்டுக்கு சிக்கல் வரை!’ இன்றைய டாப் 10 செய்திகள்
Sep 02, 2024, 02:04 PM IST
வாழை படத்திற்கு முதலமைச்சர் வாழ்த்து, தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம் , ஆளுநர் ரவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
Afternoon Top 10 news: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
1.வாழை படத்திற்கு முதலமைச்சர் வாழ்த்து
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழை திரைப்படத்தினை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜ் அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்! பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.
2.தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு போதை பொருட்களே காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், விடியா திமுக அரசின் விளம்பரங்களுக்கு அப்பால் செய்திகளைப் பார்த்தால், வழக்கம் போல சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் போதைப்பொருள் புழக்கமுமே விடியா அரசின் உண்மை அடையாளங்களாக நாளிதழ்களை அலங்கரிக்கின்றன. வாரக் கொலைப் பட்டியல்கள் தொடர்கின்றன. போதைப்பொருள் புழக்கமும் கடுகளவு குறைந்த பாடில்லை. விடியா திமுக ஆட்சியில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது என்றாலும் மிகையாகாது என கூறி உள்ளார்.
3.ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் பதில்
முறையாக ஆய்வு செய்யாமல் மாநில பாடத்திட்டத்தை குறை சொல்ல கூடாது என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில். தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும் போது தமிழ்நாடு பாடத்திட்டம் மிக மோசமாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறி இருந்தார்.
4.தவெக மாநாடு குறித்து காவல்துறை கேள்வி
விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு அனுமதி தருவது குறித்து 21 கேள்விகளை எழுப்பி விழுப்புரம் டிஎஸ்பி கடிதம் எழுதி உள்ளார். திட்டமிட்ட தேதியில் மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேட்டி.
5. தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
6.சுங்கச்சாவடிகளை அகற்ற கோரிக்கை
காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற அரசுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை.
7. 11743 பேருக்கு டெங்கு பாதிப்பு
தமிழ்நாட்டில் இதுவரை 11,743 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் 205 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 4 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
8.என்.எல்.சி விவகாரம் குறித்து ராமதாஸ் கருத்து
என்.எல்.சி நிறுவனத்தின் இலாபம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. என்.எல்.சி நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பதற்கு அதன் செயல்பாடுகள் காரணமல்ல. மாறாக, தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதே காரணமாகும். தொழிலாளர்களின் உழைப்பை மதிக்க வேண்டிய என்.எல்.சி, அதை அங்கீகரிக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்.
9.தமிழக அரசுக்கு சீமான் கேள்வி
250 கோடிகள் செலவழித்து ஆடம்பர கார் பந்தயம் நடத்தும் திராவிட மாடல் அரசிடம், 250 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப் பணமில்லையா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி. அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களைக் குறைக்கும் வகையில் திமுக அரசு புதிய அரசாணை வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. பள்ளிக்கல்வித்துறையின் சார்பாகக் கடந்த ஜூலை 1ஆம் நாள் வெளியிட்ட புதிய அரசாணை 150இன் படி, தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்றிருந்த நிலையை மாற்றி, இனி 700 மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என திமுக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது என கருத்து.
10.மின்கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம்
புதுச்சேரியில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகை செய்ய முயன்ற இந்தியா கூட்டணி கட்சியினர் தடுத்து நிறுத்தம்.
டாபிக்ஸ்