Annamalai: ‘அண்ணாமலைக்கு அதிர்ச்சி! அண்ணா குறித்த சர்ச்சை பேச்சு’ வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!-governor rn ravi approves to file a case for annamalais controversial comments about aringar annadurai - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Annamalai: ‘அண்ணாமலைக்கு அதிர்ச்சி! அண்ணா குறித்த சர்ச்சை பேச்சு’ வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

Annamalai: ‘அண்ணாமலைக்கு அதிர்ச்சி! அண்ணா குறித்த சர்ச்சை பேச்சு’ வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

Kathiravan V HT Tamil
May 12, 2024 08:28 PM IST

‘‘அண்ணாமலை பேசிய வீடியோ காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களிடன் அடிப்படையில், அண்ணாமலை பேச்சு தமிழ்நாட்டில் தேவையில்லாத சமூகபதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசியதால் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை”

’அண்ணாமலைக்கு ஆப்பு ரெடி!’ வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!
’அண்ணாமலைக்கு ஆப்பு ரெடி!’ வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்! (ANI )

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில், பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ”1956ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விரும்பத்தகாத சில கருத்துக்கள் மேடையில் பேசப்பட்டதாகவும், அதன் பிறகு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ரத்த ஆறு ஓடும் என்று எச்சரித்ததாகவும், அதன் பிறகு அறிஞர் அண்ணா அவர்கள் மன்னிப்பு கேட்டதாகவும்” கூறி இருந்தார். 

இந்த பேச்சுக்கு திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளிடம் இருந்து கண்டனங்கள் எழுந்தன. 

இது தொடர்பாக அப்போது பேசி இருந்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “1956இல் அண்ணா பேசியதாக சொல்கிறார். அண்ணா மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால் அண்ணாமலை ஆடுதான் மேய்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஆடு மேய்க்கும் அண்ணாமலை ஐபிஎஸாக உயர்ந்ததற்கு அண்ணா, பெரியார் போட்ட பிச்சைதான் காரணம். அண்ணாமலை இப்படி பேசுவதை திருத்திக் கொள்ளாவிட்டால் தமிழ்நாடு மக்கள் ஆர்த்து எழுவர்ர்கள், அவர் எங்கு பணி செய்தாரோ அங்கு ஓடிப்போகும் நிலை மிக விரைவிலே அவருக்கு ஏற்படும்” என கூறி இருந்தார். 

இது தொடர்பாக பேசி இருந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “அண்ணாமலை குறிப்பிடும் சம்பவம் 1957ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் நடந்தது. திமுக தேர்தலில் போட்டியிடுவதற்கான விளக்க பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது. அப்போது பெரியவர் பிடிஆர் அவர்கள் அண்ணாவை அழைத்ததன் பேரில் அங்கு சென்று அண்ணா பேசி உள்ளார். அண்ணா அங்கு வந்து நாத்திகம் பேசியதால் அடுத்தநாள் தேவர் ஐயா அதை கண்டித்து பேசி உள்ளார். ஆனால் இந்த சம்பவத்தில் அண்ணா மன்னிப்பு கேட்கவில்லை.” என கூறி இருந்தார். 

இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு எதிராக சேலம் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான பியூஷ் மானுஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் இரு பிரிவினர் இடையே பதற்றம் உண்டாக்குவது, பொய்யான தகவல்களை மக்களிடம் சேர்ப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரி இருந்தார்.  

அண்ணாமலை பேசிய வீடியோ காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களிடன் அடிப்படையில், அண்ணாமலை பேச்சு தமிழ்நாட்டில் தேவையில்லாத சமூகபதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசியதால் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பியூஷ் மானூஷ் கோரி இருந்தார். 

ஒரு சில வழக்குகளில் வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெறுவதற்கு முன்னதாக அரசாணை மூலம் வெளியிட வேண்டும். அதற்கு ஆளுநரின் ஒப்புதல் பெற்று இருப்பது அவசியம் ஆகும் என்பதால், அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதால் வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்ட தமிழக அரசின் முடிவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து உள்ளார். 

ஏற்கெனவே சேலத்தில் இரு பிரிவினரிடையே பதற்றம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.