Thagaisal Tamilar Viruthu 2024: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது அறிவிப்பு!
Aug 01, 2024, 03:12 PM IST
Thagaisal Tamilar Viruthu 2024: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தனுக்கு தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தனுக்கு தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.
தகைசால் தமிழர் விருது தேர்வு குழு
தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கவும், இந்த விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 2021-ல் ஆணையிட்டிருந்தார்கள்.
இதுவரை 3 பேருக்கு விருது வழங்கப்பட்டு உள்ளது
இந்த விருதினை கடந்த 3 ஆண்டுகளில் திரு. சங்கரைய்யா அவர்கள், திரு.ஆர்.நல்லகண்ணு மற்றும் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதிற்கான நடப்பாண்டு விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இன்று (1.8.2024) நடைபெற்றது.
குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது
அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் காந்தி ஃபோரம் அமைப்பின் தலைவரும் இலக்கியச் செல்வராகவும், இலக்கியக் கடலாகவும், எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாகவும் விளங்கும் திரு. குமரி அனந்தன் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் இவ்வாண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.
சுதந்திர தினம் அன்று வழங்கப்படுகின்றது
‘தகைசால் தமிழர் விருது’க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. குமரி அனந்தன் அவர்களுக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வருகிற ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
யார் இந்த குமரி அனந்தன்?
இவர் 1933 மார்ச் 19ம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் திருவிதாங்கூர் பகுதியில் இருந்த குமரி மங்கலம் என்ற அகஸ்தீஸ்வரத்தில் பிறந்தார். இந்த ஊர் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. இவர் விடுதலை போராட்ட வீரரான ஹரிகிருஷ்ண பெருமாள் மற்றும் தங்கம்மை தம்பதியின் மகனாக பிறந்தார்.
இவரது தம்பி வசந்த குமார். இவரது மனைவியின் பெயர் கிருஷ்ணகுமாரி. இவர்களுக்கு ஒரு மகன் 4 மகள்கள். இவரது மகளான தமிழிசை தற்போது தெலுங்கானாவின் ஆளுநராக இருந்தார்.
காமராஜரின் பாதையில்
இவர் தமிழில் ஆழ்ந்த புலமை பெற்றவர். எம்.ஏ தமிழ் படித்தவர். இவர் டாக்டர் பட்டமும்பெற்றுள்ளார். சில காலம் ஆசிரியராக பணியாற்றி உள்ளார். பின் காங்கிரஸில் இணைந்தார் பெருந்தலைவர் காமராஜரின் பாதையில் செயல்பட்டார். காந்திய பாதையில் தன் வாழ்க்கையை அமைத்து கொண்டார். ஏற்கனவே காமராஜர் வெற்றி பெற்றிருந்த நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியில் 1977ல் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980ல் திருவெற்றியூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரானார். 1984ல் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
பின் 1989ம் ஆண்டு சாத்தான் குளம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991ல் சாத்தான் குளம் தொகுதியில் மீண்டும் தேர்வானார். தன் வாழ்நாளில் 19 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளார். 1996ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் குமரி அனந்தன்.
தமிழில் பேசும் உரிமையை பெற்றுத் தந்தவர்
மிகச்சிறந்த மேடைப் பேச்சாளரான குமரி அனந்தன் பாராளுமன்றத்தில் தமிழில் பேசும் உரிமையை பெற்று தந்தார். இவருடைய மனைவியின் பெயர் கிருஷ்ணகுமாரி இந்த தம்பதிக்கு நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். இவருடைய மகள் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு மருத்துவர் ஆவார். அது மட்டுமல்ல பாஜக கட்சியில் மிகப்பெரிய அரசியல்வாதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக இருந்தார். தற்போது புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநர் பதவிகளை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்தார். வசந்த் அன் கோ வைத்திருக்கக்கூடிய தொழிலதிபரான எச் வசந்தகுமார் இவருடைய தம்பி ஆவார்.
டாபிக்ஸ்