Sankaraiah: ’சுதந்திர போரட்ட தியாகி! காம்ரேட்! தகைசால் தமிழர்’ யார் இந்த சங்கரய்யா?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Sankaraiah: ’சுதந்திர போரட்ட தியாகி! காம்ரேட்! தகைசால் தமிழர்’ யார் இந்த சங்கரய்யா?

Sankaraiah: ’சுதந்திர போரட்ட தியாகி! காம்ரேட்! தகைசால் தமிழர்’ யார் இந்த சங்கரய்யா?

Kathiravan V HT Tamil
Published Nov 15, 2023 10:51 AM IST

”RIP Sankaraiah: 8 ஆண்டுகால சிறை வாழ்க்கைக்கு பிறகு 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுதான் விடுதலை செய்யப்பட்டார்”

சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா
சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா

விடுதலை போராட்ட வீரர், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கியவர்களில் ஒருவர் உள்ளிட்ட பல்வேறு புகழுக்கு சொந்தக்காரரான சங்கரய்யா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலும் மக்கள் பணி ஆற்றி உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டியில் 1921ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்த சங்கராய்யா, இளம் வயதிலேயே இந்தியாவில் பரவிக்கொண்டிருந்த பொதுவுடமை கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். மதுரை அமெரிக்கன்கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது மாணவர் மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அவர், இந்திய விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டு பிரிட்டீஷ் அரசை எதிர்த்து போராட தொடங்கினார். இதனால் 1941ஆம் ஆண்டில் கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே ஆங்கிலேயே அரசால் சங்கரய்யா கைது செய்யப்பட்டார்.

8 ஆண்டுகால சிறை வாழ்க்கைக்கு பிறகு 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுதான் விடுதலை செய்யப்பட்டார்.

1964ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டாக பிரிந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கியவர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக சங்கரய்யா உள்ளார்.

1995ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளராக இருந்த சங்கரய்யா, 1967ஆம் ஆண்டில் மதுரை மேற்கு தொகுதியில் இருந்தும், 1977, 1980 ஆகிய தேர்தல்களில் மதுரை கிழக்கு தொகுதியில் இருந்தும் சட்டமன்றத்திற்கு தேர்வானார். 1957 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தலிகளில் போட்டியிட்டு சங்கரய்யா வெற்றி வாய்ப்பையும் இழந்துள்ளார்.

வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்த சங்கரய்யா குரோம்பேட்டையில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார். சங்கரய்யாவின் அரசியல் பங்களிப்பை பாராட்டும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ’தகைசால் தமிழர்’ என்ற விருதை அளித்து கௌரவித்து இருந்தார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க முடிவெடுத்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அதற்கு ஒப்புதல் அளிக்காத நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.