தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ews Quota Verdict : 10% இடஒதுக்கீடு செல்லும் - ராமதாஸ் கண்டனம்!

EWS Quota Verdict : 10% இடஒதுக்கீடு செல்லும் - ராமதாஸ் கண்டனம்!

Divya Sekar HT Tamil

Nov 07, 2022, 04:20 PM IST

எந்த கணக்கெடுப்பும் நடத்தப்படாமல் உயர்வகுப்பு ஏழைகளுக்கு எந்த அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பது தெரியவில்லை என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
எந்த கணக்கெடுப்பும் நடத்தப்படாமல் உயர்வகுப்பு ஏழைகளுக்கு எந்த அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பது தெரியவில்லை என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

எந்த கணக்கெடுப்பும் நடத்தப்படாமல் உயர்வகுப்பு ஏழைகளுக்கு எந்த அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பது தெரியவில்லை என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதி மீதான தாக்குதல் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

ட்ரெண்டிங் செய்திகள்

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது.. ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்!

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் இதோ..!

TN 12th Result 2024: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது..தட்டி தூக்கிய மாணவிகள்..எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

TN 12th Result 2024: வெளியானது பிளஸ் 2 ரிசல்ட்..தமிழகத்தில் 94.56% பேர் தேர்ச்சி - முழு விபரம் இதோ..!

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய அரசு மற்றும் பல மாநிலங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103-ஆவது திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இட ஒதுக்கீட்டின் நோக்கம் சமூக நிலை முன்னேற்றம் தான் என்ற சமூக நீதியின் அடிப்படை தத்துவத்தை இந்தத் தீர்ப்பு தாக்கி, தகர்த்து எறிந்திருக்கிறது.

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியலமைப்பு சட்டத் திருத்தம் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி இரன்டாவது வாரத்தில் நாடாளுமன்றத்தில் அவசர, அவசரமாக கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் பல மாநிலங்களிலும் இந்த இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது.

பொருளாதார அடிப்படையில் மட்டும் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் இந்த சட்டத்திருத்தம் செல்லாது என அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, உயர்வகுப்பு ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு செல்லும் என 3:2 என்ற விகிதத்தில் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு இரு வகைகளில் அரசியலமைப்பு சட்டத்தின் இரு முக்கிய அம்சங்களுக்கு எதிராக அமைந்துள்ளது.

இப்போது சமூகநிலையில் எந்த பின்னடைவையும் எதிர்கொள்ளாமல், அடக்குமுறைகளை அனுபவிக்காமல் பொருளாதார அடிப்படையில் மட்டும், அதுவும் கூட ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களை ஏழைகள் என்று கூறி 10% இட ஒதுக்கீடு வழங்குவதும், அதை எந்த கேள்வியும் எழுப்பாமல் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்வதும் சமூகநீதியின் மீதான தாக்குதல் ஆகும்.

இட ஒதுக்கீடு என்றாலே புள்ளிவிவரங்கள் எங்கே? என்று கேட்கும் உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் அத்தகைய வினாவை எழுப்பாதது மிகவும் வியப்பளிக்கிறது. உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2005-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டு, 2010-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட சின்ஹோ ஆணையத்தின் அறிக்கை தான் அடிப்படையாக கூறப்படுகிறது.

ஆனால், அந்த ஆணையத்தின் அறிக்கையில், உயர்வகுப்பு ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று எந்த பரிந்துரையும் அளிக்கப்படவில்லை; மாறாக, அவர்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கலாம் என்று மட்டும் தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, உயர்வகுப்பு ஏழைகளின் மக்கள்தொகையை அறிய எந்த கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை. இதை 11.12.2019 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய சமூகநீதி அமைச்சகமும் உறுதி செய்திருக்கிறது.

இவ்வாறு எந்த கணக்கெடுப்பும் நடத்தப்படாமல் உயர்வகுப்பு ஏழைகளுக்கு எந்த அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பது தெரியவில்லை. அது குறித்து உச்சநீதிமன்றமும் எந்த வினாவும் எழுப்பாததை ஏற்றுக்கொள்ளவே முடியாது. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட போது, அதை உறுதி செய்ய போதிய அளவில் புள்ளி விவரங்கள் இருந்தும் கூட, கூடுதல் புள்ளிவிவரங்களை திரட்ட வேண்டும் என்று கூறி அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.

ஆனால், எந்த புள்ளிவிவரமுமே இல்லாமல் உயர்வகுப்பு ஏழைகள் இட ஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சமூகநீதி இரு அளவுகோல்களால் அளவிடப்படக்கூடாது. உச்சநீதிமன்றத் தீர்ப்பில் மிகவும் கவலையளிக்கும் விஷயம் என்னவெனில், உயர்வகுப்பு ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு செல்லும் என்று 3 நீதிபதிகளும், செல்லாது என்று 2 நீதிபதிகளும் தீர்ப்பளித்திருந்தாலும் கூட, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று 5 நீதிபதிகளும் கூறியிருக்கின்றனர்.

இது இந்தியாவின் சமூகநீதி தத்துவத்தை வறுமை ஒழிப்பு கொள்கையாக குறுக்கி விடும்; மேலும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து வரும் சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்க வகை செய்யும். இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டுக்கு மிகக் கூடாது என்று 1962-ஆம் ஆண்டில் பாலாஜி வழக்கிலும், 1992-ஆம் ஆண்டு இந்திரா சகானி வழக்கிலும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், உயர்வகுப்பு ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை அனுமதிப்பதற்காக, இட ஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பு வளைக்க முடியாதது அல்ல என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். இதுவும் சமூக அநீதியானது.ஒருபுறம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பெரும்பகுதியினருக்கு கிரீமிலேயர் தத்துவத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.

மற்றொருபுறம் உயர்வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. உயர்வகுப்பினருக்கான இடஓதுக்கீட்டின் அளவு அவர்களின் மக்கள் தொகையை விட அதிகமாக உள்ளது. ஆனால், பிற பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அவர்களின் மக்கள்தொகையில் பாதிக்கும் குறைவாகவே உள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இட ஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு வளைக்கத்தக்கது தான் என்று உச்சநீதிமன்றமே கூறி விட்ட நிலையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முழுமையான சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்ய அவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக உயர்த்தி நிர்ணயிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

டாபிக்ஸ்