TN 12th Result 2024: வெளியானது பிளஸ் 2 ரிசல்ட்..தமிழகத்தில் 94.56% பேர் தேர்ச்சி - முழு விபரம் இதோ..!
May 06, 2024, 10:17 AM IST
TN 12th Result 2024: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. www.dge.tn.gov.in மற்றும் www.tnresults.nic.in என்ற இணைய தளங்கள் வாயிலாக மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறியலாம்.
TN 12th Result 2024: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியானது. தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 94.56 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர் சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு 94.04 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வெழுதியவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
இணையதளம், செல்போன் வழியாகவும், பள்ளிகள், தகவல் மையங்கள் வாயிலாகவும் தடையின்றி முடிவுகளை தெரிந்துகொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் - 94.56 சதவீதம்
மாணவர்கள் தேர்ச்சி விகிதம் - 92.37 சதவீதம்
மாணவிகள் தேர்ச்சி விகிதம் - 96.44 சதவீதம்
பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்:
அரசுப்பள்ளிகள் - 91.32 சதவீதம்
அரசு உதவிப்பெறும் பள்ளிகள் - 95.49 சதவீதம்
தனியார் பள்ளிகள் - 96.7 சதவீதம்
மகளிர் பள்ளிகள் - 96.39 சதவீதம்
ஆண்கள் பள்ளிகள் - 86.96 சதவீதம்
இருபாலர் பள்ளிகள் - 94.7 சதவீதம்
அறிவியல் பாடப் பிரிவில் அதிக தேர்ச்சி:
இயற்பியல் - 98.43 சதவீதம்
வேதியியல் - 99.14 சதவீதம்
உயிரியல் - 99.35 சதவீதம்
கணிதம் - 98.57 சதவீதம்
தாவரவியல் - 98.86 சதவீதம்
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - முழு விபரம்
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான உடனடி மறுதேர்வு தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு 2024:
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதையடுத்து மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி, மாநிலம் முழுவதும் 83 மையங்களில் ஏப்ரல் 1-ல் தொடங்கி 13 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் முடிக்கப்பட்டு விட்டன.
இதையடுத்து ஏற்கெனவே அறிவித்தபடி பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 6) காலை 9:30 மணிக்கு வெளியிடப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் இந்தாண்டு பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு பதிலாக தேர்வுத் துறை அதிகாரிகளே தேர்வு முடிவுகளை வெளியிட்டனர். தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ளார்.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in போன்ற இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்