’கலைஞர் கருணாநிதியின் நாணயம் வெளியிடுவதில் மகிழ்ச்சி!’ ராகுல் காந்தி வெளியிட்ட கடிதம்! நன்றி சொன்ன ஸ்டாலின்!
Aug 19, 2024, 02:16 PM IST
கலைஞர் கருணாநிதியின் கருத்தியல் தெளிவும் மாற்றத்திற்கான அர்ப்பணிப்பும் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் தன்னை ஒரு முன்னோடியாக உறுதியாக நிலைநிறுத்த உதவியது. மேலும் பல மாநிலங்களை பெரிய கனவு காண தூண்டியது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாணயம் வெளியிடுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி மத்திய அரசு சார்பில் நினைவு நாணயம் வெளியிடப்பட்டது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் கலைஞர் கருணாநிதியின் முகம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
ராகுல் காந்தியின் வாழ்த்து செய்தி!
இந்த நிகழ்ச்சிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளில், தமிழக மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது அசாதாரண வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை போற்றும் வகையில் ஒரு நினைவு நாணயம் வெளியிடப்படுவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
லட்சிய மாற்றத்திற்கான பாதை
கலைஞர் கருணாநிதியின் சமூக முற்போக்கான தொலைநோக்குப் பார்வையும், மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அசையாத அர்ப்பணிப்பும் கோடிக்கணக்கான மக்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழ வழி வகுத்தது. அவரது தீர்க்கமான தலைமையின் கீழ், தமிழ்நாடு ஒரு தைரியமான மற்றும் லட்சிய மாற்றத்திற்கான பாதையில் இறங்கியது.
அவரது கருத்தியல் தெளிவும் மாற்றத்திற்கான அர்ப்பணிப்பும் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் தன்னை ஒரு முன்னோடியாக உறுதியாக நிலைநிறுத்த உதவியது. மேலும் பல மாநிலங்களை பெரிய கனவு காண தூண்டியது.
இந்தியா என்ற கருத்தாக்கத்தை பாதுகாப்பதில் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை கொண்டு உள்ள முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களையும் பாராட்ட விரும்புகிறேன் என ராகுல் காந்தி கூறி உள்ளார்.
ராகுல் காந்தியை குறிப்பிட்டு ஈபிஎஸ் விமர்சனம்
கலைஞர் கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழாவுக்கு திமுக உடன் கூட்டணியில் உள்ள ராகுல் காந்தியை அழைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கலைஞர் கருணாநிதியின் நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் போன் போட்டு பேசி உள்ளார். இதன் மூலம் பாஜக - திமுக இடையே இருந்து வந்த ரகசிய உறவு வெளிப்பட்டு உள்ளது. இவர்களின் இரட்டை வேடம் இப்போது வெளிப்படையாக தெரிய வந்து உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கும் திமுக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ராகுல் காந்தியை அழைக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதில்!
இதற்கு பதில் அளித்து உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்காதது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். நேற்றைய கருணாநிதியின் நூற்றாண்டு விழாவுக்கு ராகுல் காந்தியை ஏன் அழைக்கவில்லை என்று எடப்பாடி பழனி சாமி கேட்டிருந்தார். இது திமுகவால் நடத்தப்பட்டதல்ல, மத்திய அரசின் திட்டம் என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த எளிய அறிவு அவருக்கு இல்லாதது கவலை அளிக்கிறது என தெரிவித்து உள்ளார்.
டாபிக்ஸ்