’கலைஞர் கருணாநிதியின் 100 ரூபாய் நாணயத்தை வெளியிடுவது தமிழ்நாட்டுக்கு பெருமை!’ பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி!
இதை நாங்கள் அரசியலாக பார்க்க போவது கிடையாது. கலைஞர் கருணாநிதி ஐயாவுக்கு கிடைக்க கூடிய மரியாதை கிடைக்க வேண்டும். அதில் பாஜக சார்பில் கலந்து கொள்வோம். மத்திய அரசு நாணயம் வெளியிடுவது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமையாக நான் பார்க்கிறேன்.

கலைஞர் கருணாநிதியின் 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தன்னை அழைத்ததாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.
திமுக அரசுக்கு சாட்டை அடி தீர்ப்பு
சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜக எதை செய்தாலும் அதனை தடுக்க மாநில அரசு முனைப்பு காட்டுகிறது. இல்லம் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்து உள்ளார். பாஜக சார்பில் இருசக்கர வாகன பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதியை பெற்று உள்ளோம். இது திமுக அரசுக்கு சாட்டை அடி தீர்ப்பாக அமைந்து உள்ளது.
நாளை தமிழ்நாடு முழுவதும் பாஜக பொதுமக்கள் உடன் இணைந்து தேசிய கொடியை எல்லா இடத்திலும் எடுத்து செல்வார்கள். சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களின் சிலைகள், நினைவிடங்களில் பாஜகவினர் மரியாதை செய்ய உள்ளனர்.