’பாகிஸ்தான் போரின் போது கலைஞர் செய்த சம்பவம்!’ விவரித்த ஸ்டாலின்! வியந்த ராஜ்நாத் சிங்!-cm mk stalins speech at rs 100 commemorative coin release for kalaignar karunanidhi - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’பாகிஸ்தான் போரின் போது கலைஞர் செய்த சம்பவம்!’ விவரித்த ஸ்டாலின்! வியந்த ராஜ்நாத் சிங்!

’பாகிஸ்தான் போரின் போது கலைஞர் செய்த சம்பவம்!’ விவரித்த ஸ்டாலின்! வியந்த ராஜ்நாத் சிங்!

Kathiravan V HT Tamil
Aug 18, 2024 10:54 PM IST

சட்டசபையை அதிகார அமைப்பாக இல்லாமல் சமூகத்திற்கு நன்மை செய்யும் அமைப்பாகக் கருதவேண்டும் என்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள். அப்படித்தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

’பாகிஸ்தான் போரின் போது கலைஞர் செய்த சம்பவம்!’ விவரித்த ஸ்டாலின்! வியந்த ராஜ்நாத் சிங்!
’பாகிஸ்தான் போரின் போது கலைஞர் செய்த சம்பவம்!’ விவரித்த ஸ்டாலின்! வியந்த ராஜ்நாத் சிங்! (PTI)

‘நா-நயம்’ மிக்க தலைவர்

‘நா-நயம்’ மிக்க தலைவரான கலைஞருக்கு, நாணயம் வெளியிடப்படுவது மிகமிகப் பொருத்தமானது. நூற்றாண்டு விழா நாயகருக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது. இதுவரை நாம் கொண்டாடினோம், இதோ இந்தியாவே கொண்டாடுகிறது என்பதன் அடையாளம் தான் இந்த விழா. இதுபோன்ற எத்தனையோ சிறப்புகளுக்குத் தகுதியானவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்! உலகம் இன்று ஒப்புக் கொண்ட உண்மை!

தமிழ்நாடு சட்டமன்றத்தில், தலைவர் கலைஞர் அவர்களது திருவுருவப் படத்தை, அன்றைய குடியரசுத் தலைவர் மாண்புமிகு ராம்நாத் கோவிந்த் அவர்கள் திறந்து வைத்தார்கள். ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள திருவுருவச் சிலையை, அன்றைய குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கய்ய நாயுடு அவர்கள் திறந்து வைத்தார்கள்.

அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்ட திருவுருவச் சிலையை அன்னை சோனியா காந்தி அவர்கள் திறந்து வைத்தார்கள். முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்பட்ட திருவுருவச் சிலையை, மேற்கு வங்க முதலமைச்சர் மாண்புமிகு மம்தா பானர்ஜி அவர்கள் திறந்து வைத்தார்கள்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் வந்திருப்பது மிகமிகப் பொருத்தமானது

இன்று தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நாணயத்தை, நமது நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் வெளியிட வருகை தந்துள்ளார்கள். இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவல் அரணாக இருந்த தலைவர் கலைஞர் அவர்களின் உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட, இந்திய நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் வந்திருப்பது மிகமிகப் பொருத்தமானதுதான். எண்பது ஆண்டு காலம் பொதுவாழ்க்கையில் இயங்கி, அதில் அரைநூற்றாண்டு காலம், தமிழ்நாட்டின் திசையைத் தீர்மானித்த தலைவர் கலைஞருக்கு, இந்தியாவே வருகை தந்து சிறப்பித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 

புகழைத்தான் போற்றிக் கொண்டிருக்கிறோம்

தலைவர் கலைஞர் நிறைவடைந்த நாள்முதல், நாள்தோறும் அவர் புகழைத்தான் போற்றிக் கொண்டிருக்கிறோம். கடந்த ஓராண்டு காலமாக அவரது நூற்றாண்டை முன்னிட்டு, அவரது சாதனைகளைச் சொல்லும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினோம். தலைவர் கலைஞரைப் போற்றும் விதமாகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினோம். அவற்றில் முத்தாய்ப்பான சிலவற்றை மட்டும் சொல்ல வேண்டுமென்றால்,

கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை!

 மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்!

 1 கோடியே 15 லட்சம் மகளிர், மாதம்தோறும் ஆயிரம் ரூபாய்

உரிமைத்தொகை பெறும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’!

 கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்!

இந்தப் பெருமைக்கெல்லாம் மகுடமாக, இன்று கலைஞர் உருவம் தாங்கிய நாணயம் வெளியிடப்படுகிறது. இந்த கலைவாணர் அரங்கத்தில் இருந்தே தொடங்கலாம். பாலர் அரங்கமாக இருந்த இதனை, மிகப்பெரியதாகக் கட்டி எழுப்பி, ‘கலைவாணர் அரங்கம்’ என்று மாற்றினார்.

 தாய்மொழியாம் தமிழ்மொழிக்குச் ‘செம்மொழி’ தகுதியைப் பெற்றுத் தந்தார்.

மெட்ராசை ‘சென்னை’ ஆக்கினார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் – போன்ற எண்ணற்ற திட்டங்களை உருவாக்கினார்.

44 அணைக்கட்டுகள்

 ஏராளமான கல்லூரிகள் - பல்கலைக் கழகங்கள்

 சென்னையைச் சுற்றி மட்டும்

அண்ணா சாலை, அண்ணா மேம்பாலம்

வள்ளுவர் கோட்டம்

கத்திபாரா பாலம்

கோயம்பேடு பாலம்

செம்மொழிப்பூங்கா

டைடல் பார்க்

தலைமைச் செயலகமாக கட்டப்பட்டு, இன்று பெரிய அரசு மருத்துவமனையாக இருக்கும் ஓமந்தூரார் மருத்துவமனை

மெட்ரோ ரயில்

அடையாறு ஐ.டி. காரிடார்

நாமக்கல் கவிஞர் மாளிகை

என அனைத்தும் கலைஞரால் உருவாக்கப்பட்டவை! இதனை யாராலும் மறைக்க முடியாது.  

உரிமையைப் பெற்றுத்தந்தவரும் முதலமைச்சர் கலைஞர்தான்

கடந்த 15-ஆம் நாளன்று இந்திய நாட்டின் 78-ஆவது விடுதலை நாளைக் நாம் கொண்டாடினோம். அன்று நான் மட்டுமல்ல, நாட்டிலுள்ள அத்தனை மாநில முதலமைச்சர்களும் கொடியேற்றினார்களே, அதற்கான உரிமையைப் பெற்றுத்தந்தவரும் முதலமைச்சர் கலைஞர்தான்!

* ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் சொன்னாரே....… “முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும்” – என்று, அப்படி ஆட்சி நடத்தியவர் கலைஞர் அவர்கள்! அதனால்தான் இன்று அகில இந்தியாவும் போற்றும் தலைவராக கலைஞர் அவர்கள் உயர்ந்து நிற்கிறார். “செயல்படுவதும், செயல்பட வைப்பதும்தான் அரசியல்” என்ற இலக்கணத்திற்கு இலக்கியமாக இருந்தவர் கலைஞர். ஒரு கட்சியின் தலைவராக; ஒரு மாநிலத்தின், நாட்டின் தலைவராக; எப்போதும் சிந்தித்தார்! செயல்பட்டார்!

* 1971-ஆம் ஆண்டு இந்தியாவைப் பாகிஸ்தான் அச்சுறுத்தியபோது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாகிஸ்தான் படையெடுப்பு கண்டனத் தீர்மானம்,

* 1972-ஆம் ஆண்டு பாகிஸ்தான் போரின்போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களிடம் நாட்டுப் பாதுகாப்புக்காக ஆறு கோடி ரூபாய் நிதி, போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி மற்றும் நிலம்,

* 1999-ஆம் ஆண்டு கார்கில் போரின் போது இந்தியாவிலேயே அதிகத் தொகையை, அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் மூன்று தவணைகளாக மொத்தம் 50 கோடி ரூபாய் வழங்கியவர் தலைவர் கலைஞர்! மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்த அதேவேளையில் - நாட்டின் பாதுகாப்பு என்று வருகிறபோது கை கொடுத்தவர்தான் கலைஞர் அவர்கள்.

நாணயம் என்பதற்கு இன்னொரு பொருளும் இருக்கிறது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்குப் பெயரும் நாணயம்தான்! “சொன்னதைச் செய்வோம் - செய்வதைத்தான் சொல்வோம்” என்று சொல்லி, சொன்னதையெல்லாம் செய்து காட்டியது, தலைவர் கலைஞர் அவர்களது நாணயத்துக்கு அடையாளம்! அவரது வழியில் இன்றைய திராவிட மாடல் அரசு - கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி கலைஞர் அரசாகச் செயல்பட்டு வருகிறது.

“சட்டசபையை அதிகார அமைப்பாக இல்லாமல் சமூகத்திற்கு நன்மை செய்யும் அமைப்பாகக் கருதவேண்டும் என்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள். அப்படித்தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இது, எனது அரசல்ல; நமது அரசு! ஒரு கட்சியின் அரசல்ல; ஒரு இனத்தின் அரசு! திராவிடக் கருத்தியல் கொண்ட அரசு! இதனை என்னுள் ஏற்படுத்தியவர் தலைவர் கலைஞர். அந்த வகையில் கலைஞரே இயக்கிக் கொண்டிருக்கிறார். 

“ஒரு மனிதனின் வாழ்க்கை அவனது மரணத்திற்கு பிறகு கணக்கிடப்பட வேண்டும்” என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு அவரது முகம் தாங்கிய நாணயத்தில் தமிழ் வெல்லும் என்ற சொல்லும் இடம் பெற்றுவிட்டது என்றால், இதுவும் கலைஞரின் சாதனைதான்! தனது சாதனைப் பெருவாழ்வால் தமிழினத்தின் நெஞ்சத்தில் நிறைந்துவிட்ட தலைவர் கலைஞர் புகழ் வாழ்க!

 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.