HBD EPS: ’கிளைக்கழக செயலாளர் முதல் அதிமுக பொதுச்செயலாளர் வரை!’ முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்து வந்த பாதை!
May 13, 2024, 09:22 PM IST
”வரும் ஜூன் 4ஆம் தேதி வர உள்ள 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும், அடுத்து நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளாக மாற உள்ளது”
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
எடப்பாடி பழனிசாமியின் பிறப்பும், படிப்பும்
அதிமுக கிளைச்செயலாளராக தனது அரசியல் வாழ்கையை தொடங்கி அதிமுக பொதுச்செயலாளராக உயர்ந்துள்ள எடப்பாடி பழனிசாமி 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் வசித்த கருப்ப கவுண்டர் - தவசியம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவருக்கு கோவிந்தராஜ் என்ற சகோதரரும், ரஞ்சிதம் என்ற சகோதரியும் உள்ளனர்.
பள்ளிப்படிப்புக்கு பின்னர் ஈரோட்டில் உள்ள வாசவி கல்லூரியில் பிஎஸ்சி படித்த பழனிசாமி, வீட்டில் நடைபெற்று வந்த விவசாய பணிகளை பார்த்துக் கொண்டதுடன், வெல்லம் மற்றும் சர்க்கரை வியாபாரத்தையும் மேற்கொண்டார்.
எம்ஜிஆர் மீது ஈர்ப்பு! அதிமுகவில் இணைவு!
எம்ஜிஆர் மீது தீவிர ஆர்வம் கொண்ட பழனிசாமி 1974ஆம் ஆண்டு தன்னை முறைப்படி அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
கிளைக்கழக செயலாளராக தனது வாழ்கையை தொடங்கிய பழனிசாமிக்கு ஈரோடு மாவட்ட அரசியலில் கோலோச்சி வந்த அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் முத்துசாமி ஆகியோர் வழிகாட்டிகளாக இருந்தனர்.
1980களில் அதிமுகவில் ஜெயலலிதா வந்தபோது, அவரது தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். 1987ஆம் ஆண்டில் எம்ஜிஆர் மரணத்திற்கு பிறகு அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று இரண்டாக பிளந்தது.
முதல் முறை எம்.எல்.ஏ!
1989ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டதால், ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும், ஜானகி அணிக்கு இரட்டை புறா சின்னமும் ஒதுக்கப்பட்டது.
அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், ஜெயலலிதா அணி சார்பில் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வென்று முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி சட்டமன்றம் சென்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் எல்.பழனிசாமி 1,364 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
1991ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வெற்றி பெற்றார். ஜெயலலிதா முதல் முறையாக முதலமைச்சர் ஆனார். 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி மீது மக்களின் கடும் எதிர்ப்பலையால் தோல்வி அடைந்தார்.
திருச்செங்கோடு நாடாளுமன்ற உறுப்பினர்!
1998ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.பி.ராமலிங்கத்தை, வீழ்த்தி எம்.பியாக எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்றம் சென்றார்.
இருப்பினும் வாஜ்பாய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஜெயலலிதா வாபஸ் பெற்றதால், 1999ஆம் ஆண்டு மீண்டும் தேர்தல் வந்தது. மீண்டும் திருச்செங்கோடு நாடாளுமன்றத்தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி மதிமுக வேட்பாளர் மு.கண்ணப்பனிடம் தோல்வி அடைந்தார். 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனிடம் எடப்பாடி பழனிசாமி தோல்வி அடைந்தார்.
2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிட பழனிசாமி பாமக வேட்பாளர் வி.காவேரியிடம் தோல்வி அடைந்தார்.
1998ஆம் ஆண்டுக்கு பிறகு தேர்தல் வெற்றியை பெறாமல் தொடர் தோல்வியையெ எடப்பாடி பழனிசாமி சந்தித்து வந்த நிலையில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது.
ஜெயலலிதா அமைச்சரவையில் முதல் முறை அமைச்சர்!
தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் எம்.கார்தேவை வீழ்த்திய எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் முதல் முறை அமைச்சர் ஆனார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் இலாகா அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
2006ஆம் ஆண்டில் அதிமுகவின் பிரச்சார செயலாளராகவும், 2007ஆம் ஆண்டில் அதிமுகவின் அமைப்பு செயலாளராகவும் இருந்த ஈபிஎஸ், 2011 தேர்தல் வெற்றிக்கு பின்னர் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்படார்.
ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்து சீனியர் அமைச்சரான கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்ட பிறகு, கட்சியில் இருந்த நால்வர் அணியில் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. 2014ஆம் ஆண்டில் அதிமுகவின் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினராகவும் அவர் நியமனம் செய்யப்பட்டார்.
2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் மீண்டும் வென்ற அவருக்கு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் இலாக்காவை ஜெயலலிதா அவருக்கு ஒதுக்கீடு செய்தார்.
முதலமைச்சர் ஆன எடப்பாடி பழனிசாமி !
2016ஆம் ஆண்டு டிசம்பரில் அன்றைய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர் செல்வம் 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் ராஜினாமா செய்தார். அதிமுகவின் சட்டமன்றக் குழு தலைவராக நியமிக்கப்பட்ட சசிகலாவுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்த நிலையில், இக்கட்டான சூழலில் முதலமைச்சராக பொறுப்பு ஏற்றார்.
குடிமராமத்து, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்கள் அவரது முக்கிய சாதனைகளாக உள்ளன. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அவரது அரசியல் வாழ்கையில் விமர்சனம் ஏற்படுத்தும் கரும்புள்ளியாக மாறியது.
2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக களம் இறங்கிய ஈபிஎஸ், ‘வெற்றி நடை போடும் தமிழகமே’ என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார்.
எடப்பாடி தொகுதியில் ஈபிஎஸ் வெற்றியை தக்க வைத்துக் கொண்டாலும், அதிமுக திமுகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது.
பின்னர் எதிர்க்கட்சித் தலைவராகவும், 2022ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதிக்கு பின்னர் அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் ஈபிஎஸ் உயர்ந்தார்.
வரும் ஜூன் 4ஆம் தேதி வர உள்ள 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும், அடுத்து நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலும் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளாக மாற உள்ளது.